nமுறைகேடு: நகைக்கடன்களை வசூலிக்க உத்தரவு!

politics

தமிழகத்தில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி ஆகும் என்று ஏழை எளிய மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் நகைக்கடன்கள் பெற்றதில் முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.

ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி, ஒரே நபர் பல சங்கங்களில் லட்சக்கணக்கில் நகைக்கடன் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுத்ததற்காக பெறப்பட்ட 500 பொட்டலங்களில், 261 பொட்டலங்களில் நகை இல்லை என்பது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. நகை இல்லாத இந்த பொட்டலங்களின் மதிப்பு ரூ.1.98 கோடியாகும்.

அதுபோன்று கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குமாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

அங்கு ஒரே ஆதார் எண்ணின் அடிப்படையில் பலர், பல செல்போன் எண்களை பயன்படுத்தி லட்சக்கணக்கில் நகைக்கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ஒரு சிலர் அவர்களுக்குரிய ஆதார் எண்ணை பயன்படுத்தி 538 நகைக் கடன்கள் மூலம் 5 பவுனுக்கு உட்பட்டு 3,508 கிராமுக்கு 74 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 300க்கும் மேற்பட்ட நகைக்கடன்கள் பெற்றுள்ளார்.

இவ்வாறு தமிழகத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மேலாண்மை இயக்குனர், அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் மேலாண்மை இயக்குனர்கள் , சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் , அரசால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டுகளில் இடம்பெற்றுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. ஸ்மார்ட் கார்டு அடிப்படையில் மாவட்ட வாரியான கடன்காரர்கள் விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் அடிப்படையில் ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் ஐந்து பவுனுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்ற விவரங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டுறவு நிறுவனங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன்கள் பெற்றிருந்தால் அந்த நகைக்கடனை வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைக்கடன்கள் தவணையை கட்ட தவறி இருந்தால் அவர்கள் மீது உரிய சட்ட பூர்வ நடவடிக்கைகளை பின்பற்றி கடன் தொகைகளை வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *