மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

வன எல்லைகளில் கான்கிரீட் சுவர்: அமைச்சர் ராமச்சந்திரன்

வன எல்லைகளில் கான்கிரீட் சுவர்: அமைச்சர் ராமச்சந்திரன்

வன விலங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க, வன எல்லைகளில் கான்கிரீட் சுவர் அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்ட தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று (செப்டம்பர் 21) தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாவது மாதத்திலிருந்து மக்கள் பாராட்டும் வகையிலும், அரசியல் தலைவர்கள் பாராட்டும் வகையிலும், எதிர்க்கட்சிகள் குற்றம் சொல்லாத முடியாத வகையிலும் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய தினத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு 7. 5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

நேற்றில் இருந்து ஐந்து நாட்களுக்கு ’வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை இந்த அரசு கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் 36.12 கி.மீ தூரம் உள்ள கால்வாய்கள் தூய்மைப்படுத்தபட உள்ளது. இந்த தூய்மை பணியை மேற்கொள்வதன் மூலம் மழைநீர் தேங்காமல் இருக்கும். அதனால், டெங்கு உருவாகாமல் தடுக்க முடியும். இந்த தூய்மை பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

அதுபோன்று ‘வீடு தேடி வரும் மருத்துவம்’ என்ற திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். முதலில் மக்களிடம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வமுடன் வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு மக்கள் தொகை அடிப்படையில் தடுப்பூசி வழங்கினால், இன்னும் விரைவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி அவர்களைத் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும்.

வன எல்லைகளில் கான்கிரீட் போடும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. தற்போதுதான் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்துள்ளது. அதனால் இத்திட்டத்துக்கு மார்ச் மாதத்துக்குப் பின்னர் நிதி ஒதுக்கப்படும். கான்கிரீட் தடுப்புச் சுவர் கட்டினால் யானைகள் அதை இடிக்காது. பன்றி, மான்கள் போன்றவை அதைத் தாண்டி வராது.

சிறுமுகையில் புலி இறந்தது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. புலியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். ஆய்வின் முடிவுகள் கிடைக்கப்பெற்றவுடன் இறப்பிற்கான காரணம் தெரியும்” என்று கூறினார்.

-வினிதா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 22 செப் 2021