மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: களம் காணும் உறவுகள்!

உள்ளாட்சித் தேர்தல்: களம் காணும் உறவுகள்!

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரே பதவிக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போட்டியிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தேர்தல் களம் சுவாரஸ்யமாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, ஆகிய ஒன்பது மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணி நிறைவடைகிறது.

இந்த நிலையில், எப்போதும் இல்லாத வகையில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஒரே பதவிக்காக எதிரெதிர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஊத்துக்காடு கிராமத்தை சேர்ந்த சாவித்திரி மணிகண்டன் (43) என்பவரும், அவரை எதிர்த்து அவரது மாமியார் ஜெயலட்சுமி லோகநாதன் (61) என்பவரும் போட்டியிடுகின்றனர். மாமியாரும், மருமகளும் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதுபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட நத்தாநல்லூர் ஊராட்சியில் பொது இட ஒதுக்கீட்டின் பிரிவில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மணி என்பவரும், அவரது மனைவி ராணி என்பவரும் போட்டியிடுகின்றனர்.

காட்பாடி வட்டம் ஏரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சாது முத்துகிருஷ்ணன் ஏரந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, அவர் மகளான செந்தமிழ்செல்வி (23) களத்தில் இறங்கியுள்ளார்.

முன்னதாக முத்துகிருஷ்ணன் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு டெபாசிட்டை இழந்தவர். கடந்த உள்ளாட்சித் தேர்தல்களின்போதும், ஏரந்தாங்கல் ஊராட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து செந்தமிழ்செல்வி கூறுகையில்,"தேர்தல் களத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் வேட்பாளர்கள் இரண்டு பேர். மூன்றாவதாக எனது அப்பா. இவர்கள் மூவரையும் எதிர்த்துதான் நான் போட்டியிடுகிறேன். கடந்தாண்டுதான் பி.ஏ.தமிழ் படித்து முடித்தேன். ஊரக உள்ளாட்சித் தேர்தல் பற்றிய புரிதல் இருக்கிறது. நான் வெற்றி பெற்றால் எங்களது ஊர் முன்னேற்றத்துக்குத் தேவையான அனைத்து பணிகளையும் செய்வேன்” என்று கூறியுள்ளார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 22 செப் 2021