மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

வரி ஏய்ப்பு தொடர்ந்தால்….. : அமைச்சர் எச்சரிக்கை!

வரி ஏய்ப்பு தொடர்ந்தால்….. : அமைச்சர் எச்சரிக்கை!

மக்களிடம் வாங்கும் வரியை அரசுக்கு செலுத்தாமல் சில நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றன. இது தொடர்ந்தால் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையில் கலைஞர் நூலகம் அமையவுள்ள இடத்தில் உள்ள மரங்களை அகற்றும் பணியை வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி இன்று(செப்டம்பர் 21)ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி,” இன்று காலையில் நான், மாவட்ட ஆட்சியர், மாநகர ஆணையர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் மகாத்மா காந்தியின் அரை ஆடை புரட்சியின் நூற்றாண்டு விழாவின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். மகாத்மா காந்தி மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார். இரண்டாவது முறையாக மதுரைக்கு வரும்போதுதான் அவருடைய உடையில் மாற்றம் ஏற்பட்டது. அவருடைய உடை மாற்றத்துக்கு மதுரை காரணமாக இருப்பது பெருமையாக இருக்கிறது.

மதுரையில் கலைஞர் நூலகம் ரூ.70 கோடியில் அமைய இருந்தது. தற்போது அது ரூ.100 கோடியாக உயர்ந்துள்ளது. அந்த இடத்தில் கிட்டதட்ட 18 மரங்கள் உள்ளன. அந்த மரங்கள் அகற்றப்பட்டு, அதே வளாகத்தில் வேறு இடத்தில் மறுநடவு செய்யப்படுகிறது. மரத்தை வெட்டாமல் வேருடன் பிடுங்கப்படுவதால் அதன் உயிர் மண்ணில்தான் உள்ளது. தொலைவான தூரத்துக்கு கொண்டு சென்று நட்டால்தான் மரங்கள் வளராது. அதனால், இந்த வளாகத்திலேயே மரங்களை மறு நடவு செய்கிறோம்.வெகு விரைவில் நூலகத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்படும். மதுரையில் மிக நவீன முறையில் அமையவிருக்கும் கலைஞர் நூலகம், தென் மாவட்டத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு இருந்தால் நாங்கள் பரிசீலனை செய்வோம் என நிதியமைச்சர் ஜிஎஸ்டி கவுன்சிலில் தெரிவித்துள்ளார். தற்போது ஜிஎஸ்டியால் தமிழ்நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பெட்ரோல், டீசல், கலால் வரியால் மட்டுமே அதிகளவு வருவாய் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் அரசுக்கு எந்த வகையிலும் இழப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஏற்கனவே அரசு 5 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் இருக்கிறது.அப்படி இருந்தும்கூட உள்ளாட்சித் துறையின் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். எனவே படிப்படியாக நிதி நெருக்கடிகளை சமாளித்து பொதுமக்களுக்கு எந்த வகையில் பயனுள்ள திட்டங்களை வழங்க முடியுமோ அவற்றை செய்து வருகிறார்” என்று கூறினார்.

ஜவுளி கடைகளில் நடைபெற்றும் சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “வரி ஏய்ப்பு தொடர்பாக 103 ஜவுளி கடைகளில் ஆய்வு நடைபெற்று வருகிறது. கடைகளில் பல்வேறு வரி ஏய்ப்புகள் நடந்துள்ளது. இப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை வெளியில் கொண்டுவரக் கூடிய பத்திரிகையாளராகிய நீங்களே அமைதி காத்து கொண்டிருக்கிறீர்கள். 103 ஜவுளி கடைகளில் ஒரு வார காலமாக ஆய்வு நடந்து வருகிறது. இது வெளியில் தெரியவில்லை. பொதுமக்களிடத்தில் வாங்கக் கூடிய வரியை, அரசுக்கு செலுத்துங்கள் என்று சொல்லுகிறோம். ஆனால், பொதுமக்களிடம் வரியை வாங்கிக் கொண்டு அதை அரசுக்கு செலுத்தாமல் பல நிறுவனங்கள் ஏமாற்றி வருகிறது. இந்த செயல் தொடர்ந்து நீடித்தால் உரிமத்தை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து ஆராய்ந்து வருகிறோம். ஓரிரு நாட்களில் எந்தெந்த மாதிரியான வரி ஏய்ப்பு நடந்துள்ளது என்பது தெரிய வரும்” என்று கூறினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ கடந்த நான்கைந்து மாதங்களில் தமிழ்நாட்டில் மக்களுக்கான பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதற்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவிகிதம் வெற்றி பெறுவோம் என்று ஏற்கனவே முதல்வர் சொல்லிவிட்டார். அது நிச்சயம் நடக்கும்” என்று கூறினார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 22 செப் 2021