மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாள்!

அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாள்!

அரை ஆடைப் புரட்சியின் நூற்றாண்டு நாளில் அவர் கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1921 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்தார். அப்போது பெரும்பாலான மக்கள் இடுப்பில் மட்டும் ஒரு துணியை உடுத்தியிருந்ததை காந்தி கவனித்தார். ஆனால், காந்தி , மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் என பல ஆடைகளை அணிந்திருந்தார். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது.

மறுநாள் மதுரையில் நடந்த கூட்டத்திற்கு இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் அணிந்து கொண்டு கலந்து கொண்டார். இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மதுரையில் இடுப்புக்கு மட்டும் துணி உடுத்திக் கொண்டு உழைத்து கொண்டிருந்த விவசாயியைப் பார்த்த பின் இவ்வளவு துணிகளை உடுத்திக் கொள்கிறோமே, தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்துகிற நாம் திருடன் அல்லவா என்ற எண்ணம், முந்திய இரவெல்லாம் அவரைத் தூங்கவிடாமல் செய்ததன் விளைவே இந்த ஆடை மாற்றக் காட்சி.

அதன்படி காந்தியின் அரை ஆடை புரட்சியின் நூற்றாண்டு தினம் இன்று(செப்டம்பர் 21) மதுரையில் கொண்டாடப்படுகிறது. நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காந்தி அரை ஆடை அணிந்த மதுரை மேலமாசி வீதியில் உள்ள நினைவகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காந்தியடிகள் அரை ஆடை அணிந்து முதலில் பேசிய மதுரை காந்தி பொட்டலில் உள்ள அவரது சிலைக்கு வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை முன்னிட்டு மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நூற்றாண்டு நாளை முன்னிட்டு காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியா மதுரை காந்தி அருங்காட்சியகம் வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதை நினைவுகூர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில், “மதுரை மேலமாசி வீதியும் 22-9-1921-ம் இந்திய வரலாற்றின் திசையை மாற்றி எழுதியதன் நூற்றாண்டு. இந்திய மக்களின் துன்பங்களை உணர்ந்த அண்ணல் காந்தியடிகள் தன் மேலாடையைத் துறந்த அரை ஆடைப் புரட்சி நாள் இன்று. மகாத்மா கற்றுத் தந்த தொண்டுள்ளமும் சகிப்புத்தன்மையும் நமது பாதையாகட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 22 செப் 2021