மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

கோச்சிங் சென்டர்களைப் பிரபலப்படுத்தும் நீட்: ஏ.கே.ராஜன் குழு அறிக்கை!

கோச்சிங் சென்டர்களைப் பிரபலப்படுத்தும் நீட்: ஏ.கே.ராஜன் குழு அறிக்கை!

பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று ஏ.கே.ராஜன் குழு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்குத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த திமுக அரசு, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். முதல் சட்டப் பேரவை கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தவுடன், நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மாற்றுவழி குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவைக் கடந்த ஜூன் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு அமைத்தது.

இக்குழு நான்கு ஆய்வு கூட்டங்களை நடத்தி, நீட் தேர்வு தாக்கம் குறித்து பல்வேறு தரவுகளை திரட்டியும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும் ஆய்வு மேற்கொண்டது. கிட்டதட்ட, 86 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நீட் தேர்வு தொடர்பான தங்கள் கருத்துகளைப் பதிவு செய்திருந்தனர்.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏ.கே.ராஜன் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தது.

இதற்கிடையில், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் (செப்டம்பர் 13) சட்டமுன் வரைவு கொண்டுவரப்பட்டது. மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை சுகாதாரத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது.

நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவிகிதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவிகிதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். மொத்தத்தில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழ்நாடு திரும்பலாம். சுகாதாரக் கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்கு கீழ் தமிழகம் செல்லும் நிலையும் ஏற்படலாம்.

மேலும் நீட் தேர்வு, பயிற்சி மையங்களைப் பிரபலப்படுத்துகிறதே தவிர கற்றலை அல்ல.

குறிப்பாக முதல் முறை நீட் தேர்வு எழுதுபவர்களைவிட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்குதான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம். நீட் தேர்வு ரத்து செய்வதற்கான சட்டத்தை இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும்.

மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலே நடத்தலாம்” உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் குடும்ப நிலை, சமூக, பொருளாதார நிலை, படித்த பள்ளிகள் விவரம் போன்றவையும், நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நிலையும் புள்ளி விவரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

- வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 21 செப் 2021