மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

சாமித் தோப்பு கோயிலை சீர்குலைக்க சதி! -பாலபிரஜாபதி அடிகளாருக்கு எதிரான போராட்டப் பின்னணி!

சாமித் தோப்பு கோயிலை சீர்குலைக்க சதி! -பாலபிரஜாபதி அடிகளாருக்கு எதிரான போராட்டப் பின்னணி!

குமரி மாவட்டத்தில் அய்யாவழி எனப்படும் வைகுண்டசாமி பீடத்தின் தற்போதைய தலைமை குருவாக இருப்பவர் பாலபிரஜாபதி அடிகளார். மக்களுக்கான ஆன்மீகத்தை முன்னெடுக்கும் பாலபிரஜாபதி அடிகளார் உயிருக்கு அச்சுறுதல் இருப்பதாக தற்போது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் பால பிரஜாபதி அடிகளாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பால பிரஜாபதி அடிகளாரை கைது செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டம் முழுதும் பாஜக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில், தமிழக அரசு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருப்பது தென் மாவட்ட ஆன்மிக வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் மிகுந்த முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் பின்னணி பற்றி முழுமையாக விசாரித்தோம்.

குமரியில் புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோயில் கடந்த ஜூன் மாதம் தீவிபத்துக்கு உள்ளானது. இதனால் பதறிப்போன பக்தர்களும், நிர்வாகத்தினரும் கேரள நம்பூதிரிகளை வைத்து பிரசன்னம் பார்த்தனர். அதற்கான பரிகார பூஜைகளுக்காகவும், மற்ற புனரைப்புப் பணிகளுக்காகவும் இந்து சமய அற நிலையத்துறை 85 லட்ச ரூபாய் ஒதுக்கியது.

இந்த நிலையில் இதுகுறித்து சாமித் தோப்பு பாலபிராஜபதி அடிகளார் தமிழக அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘வாழ வேண்டிய வயதில் இறந்து போன கன்னிப் பெண்களை தெய்வமாக வழிபடுவது ஆதித் தமிழர்களின் நம்பிக்கை. அதன்படி பனைத் தொழிலாளியின் மகளான கன்னிப்பெண்ணை அடக்கம் செய்த இடத்தில், பூஜை செய்து வழிபட்டனர். இதை மண்டைக்காடு அம்மன் கொடைவிழா என்று மக்கள் இன்றும் கூறி வருகின்றனர். அம்மன் அருள் நிறைந்தவர்கள் கோயிலில் வழிபாடுகளை செய்தனர். அவர்கள் சொல்லும் வாக்குகள் அம்மனே நேரில் சொல்லும் வாக்குகளாக போற்றப்படுகிறது. அது வேற்று மொழிகளால் கூறப்படும் தேவ பிரசன்ன வாக்கை விட சிறந்தது. எனவே தீ விபத்தால் சேதமடைந்த மண்டைக்காட்டு அம்மன் கோவிலை சீரமைக்க தேவ பிரசன்னம் பார்க்கத் தேவையில்லை. அருள் வாக்கு கேட்டு மேல் நடப்புகளை செய்வது சரியாக இருக்கும். பனையேறு தொழில் செய்தவர்களும், மீன் பிடித்து வாழ்ந்தவர்களும்தான் மண்டைக்காட்டின் பூர்வ குடிகள். எனவே தமிழக அரசு தமிழ் தெய்வம் மண்டைக்காட்டு அம்மன் கோவிலை தமிழ் மரபுக்குள் கொண்டுவர வேண்டும்” என்று வலியுறுத்தினார் பாலபிரஜாபதி அடிகளார்.

அவரது இந்த கருத்து மண்டைக்காட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிலருக்கு எரிச்சலைத் தந்தது. ஏற்கனவே சி.ஏ.ஏ. எதிர்ப்பு மாநாடு உள்ளிட்ட பல அரசியல் நிலைப்பாடுகளில் பாஜகவுக்கு எதிராக நிற்பவர் பாலபிரஜாபதி அடிகளார். இந்த சூழலில் அடிகளாரின் மண்டைக்காட்டு அம்மன் கோயில் பற்றிய கருத்தை பாஜக தனக்கான போராட்ட ஆயுதமாக மாற்றியது. அதாவது. ’இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பகவதி அம்மனை பற்றி அவமானகரமாக பேசிய பாலபிரஜாபதி அடிகளாரை கைது செய்ய வேண்டும், அந்த செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குமரி மாவட்ட பாஜக போராட்டத்தில் இறங்கியது.

நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் பால பிரஜாபதி அடிகளார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று பாஜக சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மத்திய அரசு வழக்கறிஞரும் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருமான பாஜகவின் வழக்கறிஞர் சிவகுமார் இதில் தீவிரமாக களமிறங்கினார். பாலபிரஜாபதி அடிகளார் வசிக்கும் தென் தாமரைக் குளம் காவல்நிலையத்தில் அவர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

மண்டைக்காட்டு பகவதி அம்மன் கோயிலில் தமிழ் மரபு மீட்கப்பட வேண்டும் என்பது பாஜகவுக்கு எரிச்சல் தரும் விஷயம் என்றால், அதை பாஜகவுக்கு எதிராக பல போராட்டங்கள் பங்கேற்றுள்ள பாலபிரஜாபதி அடிகளார் கூறியிருப்பதால் அவரை கைது செய்தே ஆக வேண்டும் என்று குமரி பாஜக கச்சை கட்டியது. இதற்கிடையில் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் நாகர்கோவில் நீதிமன்றத்தை நாடியது பாஜக. பாலபிரஜாபதி அடிகளார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் போலீஸுக்கு அறிவுறுத்த, ஆனபோதும் போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை மதிக்காத தென் தாமரை குளம் காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாஜகவினர் போராட்டத்தில் இறங்கினார்கள். மேலும் மாவட்டத்தின் அனைத்து காவல்நிலையங்களிலும் பாலபிரஜாபதி அடிகளார் மீது பாஜகவினர் புகார் கொடுத்தார்கள். ஆனால் காவல்துறை தரப்பிலோ, ‘அவர் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். அதுபற்றி விசாரித்து வருகிறோம்’ என்று நீதிமன்றத்துக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.

இதற்கிடையில் நாடார் சங்க முக்கியப் பிரமுகரான கருங்கல் ஜார்ஜ், “மத சக்திகளால் பாலபிரஜாபதி அடிகளாரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. அதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று காவல்துறைக்கும் அரசுக்கு மனு அனுப்பினார். குமரி மாவட்டத்துக்குள் நிலவிய இந்தப் பிரச்சினையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கேபாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியின் குழுவினர் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது முன் வைத்தனர்.

அப்போது, “தமிழகத்தில் சிறந்த ஆன்மீகவாதியாகவும் அதேசமயம் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் மதவெறியை எதிர்த்து உறுதியாக போராடி வரும் பூஜிதகுரு பாலபிரஜாபதி அடிகளாளின் உயிருக்கு பாஜக - ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களால் விடுக்கப்பட்டுவரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாத்திட அவருக்கு காவல் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்”என்று தங்கள் கோரிக்கைகளில் ஒன்றாக வலியுறுத்தினர். இதையடுத்து இதே கோரிக்கையை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியும் தமிழக அரசுக்கு முன் வைத்தார்.

இந்த நிலையில் பாஜபிரஜாபதி அடிகளாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து நேற்று (செப்டம்பர் 20) காவல்துறைக்கு உத்தரவு போயிருப்பதாகவும் விரைவில் பாலபிரஜாபதி அடிகளாருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் குமரித் தகவல்கள் தெரிவிக்கின்றன,

நாம் இந்த விவகாரம் குறித்து கருங்கல் ஜார்ஜிடம் பேசினோம். “ பாலபிரஜாபதி அடிகளார் குமரிக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கும் மிகப்பெரிய ஆன்மிக சொத்து. அவர் மத நல்லிணக்கத்தை விரும்புபவர். அதனால் அவரை இங்கே குமரியில் சிலருக்கு பிடிக்கவில்லை. சாமித் தோப்புக்குள் நிலவும் பங்காளிப் பிரச்சினைகளால் பால பிரஜாபதி அடிகளாரை அப்பதவியில் இருந்து அகற்றி சாமித் தோப்பையே சீர்குலைக்க கடந்த ஆட்சிக் காலத்தில் இருந்தே முயற்சிகள் நடந்தன.

நான் கடந்த ஆட்சியிலேயே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, குமரி எஸ்பி, கன்னியாகுமரி டி.எஸ்பி. ஆகியோருக்கு, ‘பாலபிரஜாபதி அடிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று கடிதங்கள் அனுப்பினேன். இதுகுறித்து என்னிடம் போலீஸார் விசாரித்தார்கள். யாரிடம் இருந்து அச்சுறுத்தல் இருக்கிறது என்று கேட்டார்கள். எனக்கு கிடைத்த தகவல்களை தெரிவித்தேன். ஆனால் அதன் பின் எந்த நடவடிக்கையும் இல்லை. நான் முதலில் புகார் கொடுத்து ஒன்றரை வருடம் ஆகிறது. மீண்டும் இப்போதும் நான் கொடுத்தேன். அதேபோல மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர், பச்சைத் தமிழக சுப. உதயகுமாரன் போன்றோரும் முதல்வருக்கு மனு கொடுத்தனர்.

பாலபிரஜாபதி அடிகளாரை கைது செய்வது மட்டுமல்ல அவர்களின் நோக்கம். குமரி மண்ணில் மக்களுக்கான ஆன்மீகத்தை பரப்பிவரும் அய்யாவழி சாமித் தோப்பு என்ற அமைப்பையே சீர் குலைக்க வேண்டும். அதை ஒரு மத ஆயுதமாக மாற்ற வேண்டும் என்ற பெரிய நோக்கம் இதன் பின்னால் இருக்கிறது. இதை தமிழக அரசு தீர விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் கருங்கல் ஜார்ஜ்.

-ஆரா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

செவ்வாய் 21 செப் 2021