மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடியாக லக்னோவில் ஜிஎஸ்டி கூட்டம் நடந்தது. இதில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜிஎஸ்டி கூட்டத்தில் நிதியமைச்சர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

அவர் இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், “கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற 45ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் பேசப்பட வேண்டிய ஏராளமான பிரச்சினைகள் இருந்தும், தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கு பெறவில்லை என்பது தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.

கொரோனா நோய் தொற்றால் இணைய வழியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், சுமார் 20 மாதங்களுக்குப் பின்பு நேருக்கு நேர் அதிகாரிகள் சந்திப்பில் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தில் சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரையில் அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் பல வெளியாகியுள்ளன. இதில் தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை என்பது மக்களை மதிக்காத எதேச்சதிகாரம் என்பது பாஜகவின் கருத்து மட்டுமல்ல, தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே.

தங்களது நிதியமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது, தான் கலந்து கொள்ள இயலாத காரணத்தைச் சொன்னபோது தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது. வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் தமிழ்நாட்டுக்கு நிதியமைச்சர்? இதிலிருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

செப்டம்பர் 2ஆம் தேதியே லக்னோவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்டது. ஆனால், போதிய அவகாசம் இல்லை என்கிறார் நிதியமைச்சர் திரு.பிடிஆர். தியாகராஜன். லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறார். பின்னர் தந்த விளக்கத்தில் சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறார். பயணிக்க ஒன்றரை நாட்களாகும், மூன்று விமானங்கள் மாற வேண்டும் என்று தன் கூற்றுக்குத் தன்னிலை விளக்கம் வேறு தருகிறார். வெறும் மூன்று மணி நேரப் பயணத்தில் நேரடி விமானம் இருந்தும், தவறான தகவல்களை அவர் சட்டமன்றத்தில் சொல்வது போலச் சொல்கிறார்.

இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையில் அமைச்சராக இருந்தும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் தமிழக நலனுக்காக பங்கு பெறாமல், அதன் மதிப்பைப் பழித்தும் பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை அரசியல் சாசன எதிர்ப்பாகத்தான் பார்க்க வேண்டும். மேலும் 05.07.2021இல் தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடைபெற்ற 43 மற்றும் 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொண்ட தமிழக நிதியமைச்சர் அப்போதும் கோவா அமைச்சருடன் சர்ச்சையில் ஈடுபட்டது பேசு பொருளானது.

இப்படி ஓர் அமைச்சரை தங்கள் அமைச்சரவையில் வைத்திருக்கும் உங்களுக்காகவே வள்ளுவர் ஒரு குறளை எழுதியுள்ளார்.

'பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.'

தன் கட்சிக்காரராய் அருகிலேயே இருந்தும், நாட்டு நலனை எண்ணாமல் தன்னலமே எண்ணும் அமைச்சர், எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரருக்குச் சமம் ஆவார் என்கிறார் வள்ளுவர்.

பெட்ரோலிய பொருட்களில் உள்ள பல கட்ட வரிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி ஜிஎஸ்டி பட்டியலில் இணைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராகத் தாங்கள் உரத்த குரலில் பேசியது மக்களால் வரவேற்கப்பட்டது, ஆனால், ஆட்சியில் வந்து அமர்ந்த பின்னர் தங்கள் நிலைப்பாடு தலைகீழாக மாற காரணம் சொல்ல வேண்டிய தாங்களும், தங்கள் நிதியமைச்சரும் பாராமுகமாக நடப்பது மக்களை வஞ்சிக்கும் செயல் என்பதை தங்களுக்கு அறிவுறுத்தவே தமிழக மக்கள் சார்பாக இக்கடிதம்” என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமாலை.

முன்னதாக தமிழக நிதியமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக செப்டம்பர் 17ஆம் தேதி மதுரையில் விளக்கம் அளித்தார்.

அதில், “செப்டம்பர் 13ஆம் தேதி வரை சட்டமன்றம் நடந்ததால் அதன்பின் நான் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏற்கனவே தேதி கொடுத்து விட்டேன். இந்த நிலையில் ஜிஎஸ்டி கூட்ட அழைப்பிதழ் 10ஆம் தேதிக்கு மேல் தாமதமாகவே வந்தது. மேலும், அதன் அஜெண்டாக்கள் அதைவிட தாமதமாகவே தெரியவந்தன. இந்த நிலையில் தொகுதி நிகழ்ச்சிகள், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக நேரில் செல்வதைத் தவிர்த்து 500க்கும் மேற்பட்ட பக்கங்களைக்கொண்ட அறிக்கையைத் தயார் செய்து அனுப்பி வைத்தேன். துறைச் செயலாளர் அங்கே சென்றிருக்கிறார். இதுகுறித்து முதல்வரிடமும் சொல்லிவிட்டேன். ஒரு நாளைக்கு பத்து நிகழ்ச்சிகள் என்று ஒப்புக்கொண்டிருக்கிறேன். இப்போதுகூட இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டு ஒரு வளைகாப்புக்குச் செல்கிறேன்” என்று பிடிஆர் தியாகராஜன் சொல்ல அதை பாஜகவினர் பிடித்துக் கொண்டுவிட்டனர்.

நிதியமைச்சர் கொழுந்தியா மகளின் வளைகாப்பு செல்கிறார். ஜிஎஸ்டி கூட்டத்தை விட அது முக்கியமா என்று பாஜக தலைவர் அண்ணாமலையே கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தமிழக நிதியமைச்சர், “எனக்கு கொழுந்தியாவே கிடையாது. பொய் சொல்வதற்கும் குறைந்தபட்ச அறிவு வேண்டும்” என்று அண்ணாமலையைத் தாக்கியிருக்கிறார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 21 செப் 2021