மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

தாம்பரம் கிஷ்கிந்தா வசமுள்ள 177 ஏக்கர் நிலம், பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்தது முதல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் நிலங்கள் ஒவ்வொன்றாக மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.900 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை தொடரும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று (செப்டம்பர் 19) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, நில அபகரிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “ஜமீன்தார் ஒழிப்புச் சட்டத்தின்படி தாம்பரம் கிஷ்கிந்தா வசமுள்ள 177 ஏக்கர் நிலம் வருவாய்த் துறை வசம் உள்ளது. ஆனால், அது பாப்பாசத்திரம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என இந்து சமய அறநிலைத்துறை சார்பாக பலமுறை மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்கள் முதலமைச்சரிடம் தெரிவித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் குறித்து நேற்று மாலை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிக்கை ஒன்று வெளியிட்டார். அதில், “கடந்த செப்டம்பர் 16ஆம் தேதியன்று முதல்வர், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பெருந்தொற்று காரணமாக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாள்களிலும் (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட) பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறையினை மாற்றி திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அன்னதானம் வழங்கும் கோயில்களிலும் அன்னதானக் கூடங்களில் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அன்னதானம் இலையில் பரிமாறப்படும். வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாள்களில் அன்னதானம் உணவுப்பொட்டலங்களாக பக்தர்களுக்குத் தொடர்ந்து வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 20 செப் 2021