ஒன்றிய அரசுக்கு எதிராக திரண்ட தமிழ்நாடு!

politics

புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, தனியார்மயமாக்கல் உள்ளிட்ட விவகாரங்களில் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யாமை, பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வு, தனியார்மயமாக்கல், வேலையில்லாத் திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, பெகாசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20 முதல் 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில்,” திமுக மாவட்ட, ஒன்றிய, நகர,பகுதி, வட்ட, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், என அனைவரும் திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் அவரவர் வீட்டிற்கு முன்பு கருப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று(செப்டம்பர் 20) தமிழ்நாடு முழுவதும் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுதல், தனியார்மயமாக்கல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் தங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையிலும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், தாம்பரத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலும் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ,சென்னை சிஐடி காலனி இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தலைமையிலும், சென்னையில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், ஓசூர் அருகே மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தம்பிபட்டியில் விறகு அடுப்பில் சமையல் செய்து போராட்டம் செய்து வருகின்றனர்.

அதுபோன்று மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன், தனது வீட்டின் முன்பு தனது மனைவி, 12, வயது மகளுடன் கருப்புக்கொடி ஏந்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

தமிழ்நாடு முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த திமுக எம் எல் ஏ உதயநிதி ஸ்டாலின்,”நாங்கள் எதிர்கட்சியாக இருந்த போதும் போராடி இருக்கிறோம். இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடுகிறோம். எங்கள் போராட்டம் மக்களுக்கானது, வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளோம்.எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் தொடரும்” என்று கூறினார்.

“மாநில சுயாட்சி கொள்கைக்கு விரோதமாக ஒன்றிய அரசு செயல்படுகிறது. லட்சக்கணக்கான விவசாயிகள் போராடியும் அடக்குமுறையை ஏவுவது கண்டிக்கத்தக்கது” என்று மதிமுக பொது செயலாளர் வைகோவும்,

”இது அரசியல் போராட்டம் அல்ல; இந்தியாவின் வரலாற்றை பாதுகாப்பதற்கான போராட்டம்” என்று கே.எஸ்.அழகிரியும் ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

**-வினிதா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *