மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

முதல்வரின் திடீர் விசிட் : அசந்துபோன அதிகாரிகள்!

முதல்வரின் திடீர் விசிட் : அசந்துபோன அதிகாரிகள்!

தமிழகத்தில் இரண்டாவது முறையாக இன்று மாநிலம் முழுவதும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக முதல்வர் ஸ்டாலின் சென்னை சைதாப்பேட்டை மற்றும் கிண்டி தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டார்.

திமுக ஆட்சி அமைத்தது முதல், அரசு பணத்தை வீண் செலவு செய்யக்கூடாது, விளம்பரங்கள் கூடாது, புகழ்ச்சியும் சுய விளம்பரமும் வேண்டாம் என்று கண்டிப்புடன் செயல்பட்டு வருவதாக திமுகவினர் கூறுகின்றனர். முதல்வர் ஸ்டாலினின் செயலால் மற்ற மாநிலங்களின் கவனமும் தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது.

இந்நிலையில் இன்று திடீர் விசிட்டாக தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

ஞாயிற்று கிழமையான இன்று (செப்டம்பர் 19) அதிகாரிகள், அரசியல்வாதிகள், வெளியில் புறப்படும் வேலைகள் இல்லாததால் வீட்டில் குடும்பத்துடன் டிவி நிகழ்ச்சி மற்றும் கட்சிக்காரர்கள் சந்திப்பு என இருந்தனர். காவல்துறையினருக்கும் குறிப்பிடத்தக்க வகையில் எந்த பாதுகாப்புப் பணிகளும் ஒதுக்கப்படாததால் அவரவர் பணிகளைக் காவல் நிலையத்தில் கவனித்து வந்தனர்.

இந்த சூழலில், யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென்று காலை 11.20 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டார். எஸ்கார்ட் போலீசார்கள் அவசரம் அவசரமாக ஓடிவந்து காரில் ஏறினார்கள். முதல்வரின் திடீர் நிகழ்ச்சி குறித்து சென்னை சிட்டி போலீஸ் ஆணையருக்குத் தெரிவிக்கப்படாததால் சாலைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்படவில்லை.

வீட்டிலிருந்து புறப்பட்ட முதல்வர் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டையில் உள்ள தடா நகர் சமுதாயக் கூடத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமுக்கு 11.25 மணியளவில் வந்தார். முதல்வரின் இந்த திடீர் வருகையால் அதிகாரிகள் திகைத்துப் போய் எழுந்து நின்றனர்.

பின்னர் முகாமை பார்வையிட்ட முதல்வர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தடா நகர் சமுதாயக் கூடத்திலிருந்து நான்கு நிமிடத்தில் புறப்பட்டுக் கிண்டி ஈக்காட்டுதாங்கலில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டார். அதன்பின் வீடு திரும்பினார்.

முதல்வர் வந்த பிறகு சுகாதாரத் துறையினர் அவசரம் அவசரமாகச் சாலையைச் சுத்தப்படுத்துவதும், பிளீச்சங் பவுடர் தூவியதுமாக இருந்தனர். ஸ்டேஷனில் இருந்த காவல்துறையினரும் ஓடிவந்து சாலையில் நின்றார்கள்.

சைதாப்பேட்டை தொகுதியில் முதல்வர் விசிட் அடித்துவிட்டுப் போனபிறகுதான் அமைச்சர் மா.சு.வுக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

முதல்வரின் திடீர் விசிட்டால் சென்னை மாநகரம் முழுவதும் காவல் துறையினரும் மாநகர அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ,களும் அலர்ட்டாக இருப்பதாகச் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர்.

-வணங்காமுடி

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 19 செப் 2021