மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டது. வரும் 22ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதற்கிடையே இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கும் என்ற விவாதம் கட்சியினரிடையே நடந்து வந்தாலும் தேர்தல் நடவடிக்கைகளிலும் தீவிரமாக உள்ளனர்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி கடந்த இரண்டு மூன்று தினங்களாக இந்த ஒன்பது மாவட்டங்களிலும் தங்களுக்கு தேவையான இடங்களை கேட்டு அந்தந்த திமுக மாவட்டச் செயலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல்கட்ட தகவல்களின்படி காங்கிரஸ் கட்சியினர் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றே தெரியவருகிறது.

2019 இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலிலேயே காங்கிரசுக்கு கொடுத்த இடங்களில் எல்லாம் கூட்டணி தர்மத்தை மீறி அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக போட்டியிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியே வெளிப்படையாக அறிக்கை கொடுத்தார். அந்த அளவுக்கு நிலைமை சென்றது.

இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் நிலையில், அதை விட நிலைமை மோசமாகும் அளவுக்குத்தான் இருக்கிறது என்கிறார்கள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள். தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் இது தொடர்பாக மின்னம்பலத்துக்காக பேசினோம்.

“உள்ளாட்சித் தேர்தல் திடீரென அறிவிக்கப்பட்டு பேச்சுவார்த்தைக்கு கூட அவகாசம் கிடைக்காமல் அல்லாடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. திமுக மட்டுமே தேர்தலுக்கு தயாரான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு செய்யப்போகிறார்கள் என்ற நிலையிலேயே தேர்தல் நடக்கும் மாவட்ட தலைவர்கள் மாநிலத் தலைவர் அழகிரியிடம், ‘சென்ற முறை மாதிரி ஆகிவிடக் கூடாது’ என்று சொல்லி யோசனை கேட்டிருக்கிறார்கள்.

அப்போது அழகிரி, ‘நாம் 20 சதவீத இடங்களை திமுகவிடம் கேட்டிருக்கிறோம். அவற்றை தருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அந்தந்த மாவட்டங்களில் நாம் எங்கெல்லாம் வலிமையாக இருக்கிறோமோ அங்கெல்லாம் போட்டியிட தயாராக இருங்கள். சென்றமுறை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த இடங்களிலெல்லாம் திமுக போட்டி போட்டது மாதிரி இப்போது ஏற்பட்டுவிடக்கூடாது என்று உங்கள் திமுக மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிடுங்கள். அவர்கள் அதன்படி நடக்கிறார்களா என்று பார்ப்போம்’ என்று சொல்லியிருக்கிறார் அழகிரி.

ஆனால் அடுத்த சில தினங்களில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனிடமிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில், ‘நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமுக முடிவு செய்திட வேண்டும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறப்பட்டிருந்தது.

அதன்படியே காங்கிரஸ் சார்பில் திமுக மாவட்டச் செயலாளர்களிடம் பேசப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பனிடம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொருளாளர் ரூபி மனோகரன் உள்ளிட்டோர் பேசியிருக்கிறார்கள். நெல்லை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கிறது என்று சொல்லி, அதை காரணம் காட்டி ஒன்றிய கவுன்சில், மாவட்ட கவுன்சில்களில் கணிசமான இடங்களைக் கேட்டிருக்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில். ஆனால் திமுகவினர் ஏற்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தொடர்கிறது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் சொந்த மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் திமுக மாவட்டச் செயலாளர் நந்தகுமாரிடம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பேர்ணாம்பட்டு சுரேஷ் பேசியிருக்கிறார். அவர் கேட்ட ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில்களை தர திமுக மாவட்டச் செயலாளர் பல்வேறு காரணங்களை சொல்லி மறுக்கிறார். ஒரு சில இடங்களை மாவட்டச் செயலாளர் சம்மதித்தாலும் திமுக ஒன்றிய செயலாளர்கள் மறுக்கிறார்கள். இன்று வேலூர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் பிரின்ஸ் பேச்சு நடத்த வந்திருக்கிறார்.

இதேபோல கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ் தாங்கள் வலுவாக இருக்கும் பகுதிகளை பட்டியலிட்டு திமுக மாவட்ட பொறுப்பாளரான உதயசூரியனிடம் கொடுத்து, ’ இன்னின்ன வேட்பாளர்கள் நின்றால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். தயவு செய்து கொடுங்கள் அண்ணா’ என்று கேட்டிருக்கிறார். ஆனால் உதயசூரியன், ‘இதே அளவு இடங்களை விழுப்புரம் மாவட்டத்தில் பொன்முடியிடம் பேசி உங்கள் கட்சி நிர்வாகிகளை வாங்கச் சொல்லுங்கள். அங்கே வாங்கிவிட்டால் இங்கே தருகிறோம்’ என்று பதில் சொல்லியுள்ளார்.

இப்படி தெற்கிலிருந்து தொடங்கி வடக்கு மாவட்டம் வரைக்கும் திமுகவும் காங்கிரஸும் இடையேயான பேச்சுவார்த்தை இன்னமும் இழுபறியில்தான் போய்க் கொண்டிருக்கின்றது. இதனை காங்கிரஸ் மாநிலத் தலைவர் அழகிரியிடம் மாவட்ட தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். 22 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து என்னென்ன இடங்கள் என்று உறுதி செய்யப்பட்டு அதன்பிறகு வேட்புமனுக்கள் தயார் செய்து தாக்கல் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்” என்று புலம்புகிறார்கள் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள்.

கடந்த ஆகஸ்டு 25 ஆம் தேதி மாதம் மன்னார்குடியில் காங்கிரஸ் தலைவர் அழகிரி திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

“அனைவருமே ஊராட்சிகளைக் குறிவையுங்கள். கிராமங்களைக் குறி வையுங்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஜெயிக்கிறோமோ தோற்கிறோமோ எல்லா கிராமங்களிலும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தெருவிலும் காங்கிரஸ் கொடியேற்றப்பட்டிருக்க வேண்டும். முதலில் நம் தொண்டர்கள் உங்கள் ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் 15 அடி உயரத்துக்கு காங்கிரஸ் கொடி ஏற்றுங்கள். மக்களிடம் பேசுங்கள். காங்கிரசை எடுத்துச் சொல்லுங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நாம் போட்டியிட்டால் தோற்றாலும் ஜெயித்தாலும் மக்கள் நம்பின்னால் வருவார்கள். எனவே மாவட்டம், சட்டமன்றம் ஆகியவற்றை விட ஊராட்சிகளில் கிராமங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்” என்று அந்த கூட்டத்தில் பேசியிருந்தார் அழகிரி.

அதைக் குறிப்பிட்டு நம்மிடம் பேசிய அழகிரிக்கு நெருக்கமான மாநில நிர்வாகி ஒருவர்,

“சின்னங்களில் நிற்கும் இடங்களில் காங்கிரஸ் கேட்கும் இடங்களை திமுக கொடுக்காவிட்டால் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கும் பகுதிகளிலும், ஓரளவு வலிமையாக இருக்கும் பகுதிகளிலும் போட்டியிட்டு கை சின்னத்தையாவது மக்களிடம் கொண்டு போய் சேர்க்கலாம். அதை மாநிலத் தலைமை தடுக்காமல் இருந்தாலே கட்சி வளரும்” என்கிறார்.

-ஆரா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

ஞாயிறு 19 செப் 2021