மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

கமலுக்கு நெருக்கடி தரும் விஜய்

கமலுக்கு நெருக்கடி தரும் விஜய்

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஒன்பது மாவட்டங்களில் மட்டும் நடைபெற இருக்கின்றன. அக்டோபர் 6, 9 தேதிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்திருக்கிறது. அதுமட்டுமல்ல; ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் அரசியல் கட்சிகள் தங்கள் கட்டமைப்பை நம்பியே களம் காண்பது வழக்கம். ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இம்முறை கிராமம் வரை சென்று பிரச்சாரம் செய்ய முடிவெடுத்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலில் 1,521 வேட்பாளர்களை நிறுத்துவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்திருக்கிறது.

2019 மக்களவைத் தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டியிட்டு 3.7 சதவிகித வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், 2021 சட்டமன்றத் தேர்தலில் ஐஜேகே, சமத்துவ மக்கள் கட்சி போன்ற பலவீனமான கூட்டணியின் காரணமாக அதன் வாக்கு வங்கி 2.5 சதவிகிதமாகக் குறைந்தது. இதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் உட்பட பல முன்னணி தலைவர்கள் கட்சியை விட்டு விலகி திமுகவில் இணைந்தனர்.

இந்த நிலையில்தான் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவெடுத்த கமல், கட்சி சார்பற்ற ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளைத் தவிர கட்சி சார்பான சின்னங்களில் போட்டியிடும் பிற பதவிகளுக்கான தனது வேட்பாளர்களுக்காக ஒன்பது மாவட்டங்களுக்கும் செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

“உள்ளாட்சித் தேர்தலில், நாங்கள் தனியாகப் போராட விரும்புகிறோம். அப்போதுதான் எங்கள் உண்மையான பலத்தை அறிய முடியும். மேலும், கமல்ஹாசன் என்றால் நகர்ப்புறத்தில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர் என்ற பிம்பம் ஊடகங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதை உடைப்பதற்காக கமல் களமிறங்க இருக்கிறார். ஏற்கனவே கிராம சபை கூட்டங்களை கமல்ஹாசன் நடத்தியிருக்கிறார். இம்முறை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சில தேதிகளை ஒதுக்கி உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தோடு ஒவ்வொரு கிராமத்திலும் கமல் தன் கட்சியை கொண்டு செல்லும் ஆயுதமாகவும் இதைப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

இதைவிட முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடச் சொல்லியிருப்பதாக ஒரு தகவல் பரவியுள்ளது. இதையறிந்துதான் கமல்ஹாசன் நேரடியாக பிரச்சாரத்தில் இறங்க முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால் உண்மையில் கமல் கட்சியை விட விஜய் மக்கள் இயக்கம் கிராமங்களில் கட்டமைப்போடு இருக்கிறது. ஒருவேளை உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு ரிசல்ட் வேறு மாதிரியாக அமைந்துவிடக் கூடாது என்ற வேகமும் கமலை கிராமம் தோறும் களமிறங்கும் முடிவை மேற்கொள்ள வைத்திருக்கிறது” என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமானவர்கள்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 19 செப் 2021