மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

சித்துவுடன் மோதல்: பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் ராஜினாமா!

சித்துவுடன் மோதல்: பஞ்சாப் காங்கிரஸ் முதல்வர் ராஜினாமா!

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இன்று (செப்டம்பர் 18) தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். சில மாதங்களாகவே பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சிப் பூசலின் உச்சகட்டமாக அமரீந்தர் சிங்கின் ராஜினாமா நடந்திருக்கிறது.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் கோஷ்டிப் பூசல் தொடங்கி சில மாதங்களாகவே அதிகரித்தது. இதனால் பஞ்சாப் காங்கிரஸில் சித்து கோஷ்டிக்கும், அமரீந்தர் கோஷ்டிக்கும் வெளிப்படையான மோதல்கள் வெடித்தன. இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டப் போவதாகவும் அதற்கு முன் ராஜினாமா செய்துவிடுமாறும் அமரீந்தர் சிங்கிற்கு காங்கிரஸ் டெல்லி மேலிடத்தில் இருந்து தகவல் வந்தது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அமரீந்தர்.

ஆளுநர் மாளிகைக்கு தன் மனைவி மகனுடன் வந்த அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் மாளிகை வாசலிலேயே செய்தியாளர்களைச் சந்தித்தார்.

“கடந்த இரண்டு மாதங்களில் காங்கிரஸ் தலைமையால் நான் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டேன். அவர்கள் இரண்டு முறை எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்தனர். இப்போது சண்டிகரில் இன்று எனக்குத் தெரியாமலேயே சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். அவர்கள் (டெல்லி) யாரை விரும்புகிறார்களோ அவரை முதல்வராக நியமிக்கட்டும். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் பேசி நல்ல முடிவை எடுப்பேன்” என்றும் கூறியுள்ளார்.

முன்னதாக, அமரீந்தர் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு தன்னை ஆதரிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்து ஆலோசனை செய்தார். இக்கூட்டத்தில் பலர் கலந்துகொள்ளாததில் இருந்தே அவருக்கு கட்சியில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெரிகிறது என்கிறார்கள் எதிர்தரப்பினர்.

2007 இல் இருந்து பத்து வருடமாக பஞ்சாப்பில் நடந்த அகாலி தள் ஆட்சியைத் தொடர்ந்து 2017 இல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றிபெற்று கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வரானார். மொத்தம் 117 உறுப்பினர்கள் கொண்ட சட்டமன்றத்தில் காங்கிரஸுக்கு 80 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் சில மாநிலங்களில் பஞ்சாப்பும் ஒன்று. ஆனால் அங்கேயும் இப்போது கட்சிக்குள்ளேயே பிரச்சினை ஏற்பட்டு முதல்வர் ராஜினாமா செய்துவிட்டார்.

-வேந்தன்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 18 செப் 2021