மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது மகள் திருமணத்தை தனது இஷ்ட தெய்வமான திருவண்ணாமலை கோயிலில் நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அறநிலையத்துறை அதற்கு அனுமதி கொடுக்காததால் மண்டபத்திலேயே நடத்தி முடித்திருக்கிறார். .

சசிகலா சிறையில் இருக்கும்போதே தினகரன் தனது மகள் ஜெயஹரிணிக்கும் தஞ்சாவூர் , துளசி வாண்டையார் குடும்பத்தில் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் இராமநாத துளசி ஐயா வாண்டையாருக்கும் திருமணம் பேசி முடிவு செய்தார். ஆனபோதும் திருமணத்தை சசிகலா தலைமையில்தான் நடத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்ததால் அவரது விடுதலைக்காக காத்திருந்தார். பின்னர் கடந்த ஜூன் மாதம் திருமண விழா முடிவான நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அதையும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்தார். அதாவது ஆவணி மாதம் 31 ஆம் தேதி கடைசி முகூர்த்தத்தில் திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணம் செய்யத் திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்த டிடிவி தினகரன், அதை அழைப்பிதழிலும் அச்சடித்து எல்லாருக்கும் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் திருமணத்துக்கு முதல் நாள், ‘கோயிலுக்குள் திருமணம் நடத்தக்கூடாது அதுவும் கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணம் நடத்த அனுமதி இல்லை’ என்று மறுத்துவிட்டனர் கோயில் நிர்வாகத்தினர்.

செப்டம்பர் 15 ஆம் தேதி, இரவு வேங்கிக்கால் பகுதியில் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மறுநாள் காலையும் அதே திருமண மண்டபத்தில், சுபமுகூர்த்தத்தில் சசிகலா தலைமையில் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார் தினகரன்.

”கோயில் உள்ளே சுந்தரேஸ்வரர் சன்னதி புதிய மேடையில் திருமணத்தை நடத்த அங்குள்ள அதிகாரிகளிடம் தினகரன் சார்பில் பலபேர் மூலமாகப் பலவிதமான பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினரும் மேலிடத்தில் கேட்டபோது சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசலாம் என்று தினகரனிடம் அவர்கள் தரப்பினர் அனுமதி கேட்டபோது, ‘அவரிடமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம். நாம் திருமண மண்டபத்திலேயே நடத்திக் கொள்ளலாம்’ என்று தினகரன் தடுத்திருக்கிறார்” என்கிறார்கள் அவரது கட்சி வட்டாரத்தில்.

-வணங்காமுடி

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 18 செப் 2021