மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 18 செப் 2021

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் முருகன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், மத்தியப் பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகிறார். இதை பாஜக தலைமை இன்று (செப்டம்பர் 18) அறிவித்துள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனை கடந்த ஜூலை மாதம் 8 ஆம் தேதி ஒன்றிய அரசின் இணை அமைச்சராக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எல். முருகன் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியை தழுவினார். கயல்விழி மாநில அமைச்சராக்கப்பட்டார்.

இந்த நிலையில் முருகன் ஒன்றிய இணை அமைச்சராக்கப்பட்டார். இதனால் ஆறு மாதங்களுக்குள் அவர் மக்களவை, ராஜ்யசபா எனப்படும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளில் ஒன்றில் உறுப்பினராகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழலில் தற்போது புதுச்சேரியில் இருந்து ஒரு ராஜ்யசபா இடத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த ராஜ்யசபா எம்பி பதவியை எல். முருகனுக்காக பாஜக மேலிடம் புதுச்சேரியில் தனது கூட்டணியில் இருக்கும் முதல்வர் என். ரங்கசாமியிடம் கேட்டதாகவும் அதற்கு ரங்கசாமி மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. மேலும் பாஜக மேலிடத் தலைவர்கள் ரங்கசாமியிடம் பேசியும் ராஜ்யசபா எம்பி பதவியைக் கொடுக்க அவர் சம்மதிக்கவில்லை.

இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பி பதவியை கொடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய பிரதேச ராஜ்யசபா வேட்பாளராக முருகன் பெயரை பாஜக தலைமை இன்று அறிவித்துள்ளது.

தேசிய அரசியலில் முக்கிய அங்கம் வகிப்பவர்களுக்கு அல்லது ஒன்றிய அமைச்சர்களுக்கு தேசிய கட்சிகள் மாநிலம் விட்டு மாநிலம் ராஜ்ய சபா எம்பி பதவி கொடுப்பது ஏற்கனவே நாம் பார்த்ததுதான்.

தமிழகத்தில் இருந்து இதேபோல திருநாவுக்கரசருக்கு மத்தியப் பிரதேசத்தில் இருந்தே ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்தது பாஜக. மேலும் இல. கணேசனுக்கும் மத்திய பிரதேசத்தில் இருந்தே ராஜ்யசபா எம்பி பதவியை அளித்தது.

காங்கிரஸ் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் 2014 தேர்தலில் போட்டியிடாத நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 2016 இல் ராஜ்யசபா எம்பியாக நாடாளுமன்றத்துக்கு செல்ல காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது குறிப்பிடத் தக்கது.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 18 செப் 2021