மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

முதல்வர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதியேற்பு!

முதல்வர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதியேற்பு!

தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு இன்று தலைமைச் செயலகம் முதல் அரசு அலுவலகங்கள் வரை சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் பாஜக உட்பட அனைத்து கட்சியினரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதன்படி இன்று மாநிலம் முழுவதும் சமூக நீதி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பெரியார் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் முதல்வர் தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியும்

எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்.

சுயமரியாதை ஆளுமைத் திறனும் பகுத்தறிவு கூர்மைப் பார்வையும்

கொண்டதாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்.

சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக

என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்

மானுடப் பற்றும் மனிதாபிமானமும் ஒன்றே

எனது ரத்த ஓட்டமாக அமையும்,

சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைக்கும்

எனது பயணம் தொடர இந்நாளில் உறுதிமொழி ஏற்கிறேன்'

என்று முதல்வர் உட்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

அதற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி, மா. சுப்ரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பெரியாரை நினைவுகூர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதிய தீண்டாமைகளை களைந்து மக்களைக் காக்கவும், பெண் விடுதலைக்காகவும் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவரை போற்றி வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், “செல்வக் குடும்பத்தில் பிறந்து வளமான வாழ்வைத் துறந்து, வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு சிந்தனைகளை பட்டிதொட்டியெல்லாம் பரப்பியவரும் மூடநம்பிக்கைகளை அற்றுப் போகச் செய்தவரும், சமூக நீதிக்காக குரல் கொடுத்தவருமான, தமிழக மக்களால் பெரியார் என்று அன்போடு அழைக்கப்படும் ஈ. வெ.ரா அவர்களின் பிறந்தநாளான இன்று அவருக்கு மரியாதையையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அது போன்று சமூக வலைதளங்களில் பலரும் பெரியாரை நினைவுகூர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சம கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்காக போராடியவர், சுயமரியாதை, கலப்பு திருமணம், தீண்டாமை எதிர்ப்பு, மூடநம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு என பெரியாரின் கொள்கைகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதனால் #பெரியார் #சமூகநீதி நாள் ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் உள்ளது.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 17 செப் 2021