மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 17 செப் 2021

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தொடர்பான இடங்களில் நேற்று (செப்டம்பர் 16) ரெய்டு நடத்தி அவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்திருக்கிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குத் தொடர்பான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு. அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். ஏற்கனவே வேலுமணி மீது ஊழல் புகார்களை முதன்முதலாகக் கிளப்பியது அறப்போர் இயக்கம்தான். அந்த வகையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான புகார்களை அந்த இயக்கத்தினர் வெளிப்படுத்தினார்கள்.

“கே.சி. வீரமணி தனது உறவினர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கி தனது பெயரில் செட்டில்மென்ட் செய்திருக்கிறார். பல சொத்துகளை வாங்கி ஒரு சில மாதங்களில் ஒரு சில வருடங்களில், ஏன் ஒரே நாளில் தன் பெயருக்கு செட்டில்மென்ட் செய்திருக்கிறார்.

ஹோட்டல் ஹில்ஸ் ஓசூர் என்ற மிகப்பெரிய ஹோட்டல் ஓசூரில் சிப்காட்டின் நிலத்திலும் அவருடைய நிலத்திலும் சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது. இதில் வீரமணியின் நிறுவனத்தின் பெயரில் கட்டப்பட்டிருக்கிறது. சிப்காட் நாலாயிரம் சதுர அடி நிலத்தை 99 வருடங்களுக்கு ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் லீஸுக்கு முன்னாள் அமைச்சரின் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தின் வழிகாட்டு மதிப்பே 35 லட்சம் ரூபாய். இதன் மீது 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டப்படுகிறது. அந்த நிறுவனத்துக்கு எவ்வித வருமானம் இல்லை. ஆனால் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹோட்டல் கட்டப்பட்டது எப்படி? சிப்காட்டின் நிலம் ஒரு வருடத்துக்கு ஒரு ரூபாய் லீஸ் என்று கொடுக்கப்பட்டது அதிகார துஷ்பிரயோகம்.

ஏலகிரி மலையில் 9 ஏக்கர் நிலம் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கப்பட்டிருக்கிறது. இதை சப் ரிஜிஸ்டிராரே எதிர்த்திருக்கிறார். ஆனாலும் துறை அமைச்சரான கே.சி.வீரமணியால் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

2011 முதல் 2021 வரை பொது ஊழியராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில் தன் வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய்க்கு சொத்துகளை குவித்துள்ளார். இதெல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட மதிப்பீடு ஆகும்.மார்க்கெட் ரேட்டை மதிப்பிட்டால் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்” என்று விளக்கியிருந்தார் அறப்போர் இயக்க நிர்வாகியான ஜெயராம் வெங்கடேசன். இதுகுறித்து ஆகஸ்ட் 17ஆம் தேதி மின்னம்பலத்தில் வேலுமணியை அடுத்து வீரமணி என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில்தான் சட்டமன்றம் முடிந்த சில நாட்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த ரெய்டு குறித்து கருத்து வெளியிட்டுள்ள அறப்போர் இயக்கத்தினர், “10 வருடங்களாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக குவித்த சொத்துகள் குறித்து அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்திருந்த நிலையில் கடைசி 5 வருடங்களுக்கு மட்டும் கணக்கெடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடுத்துள்ளது.

2011-21 வரை அமைச்சர் வீரமணி வருமானத்துக்கு அதிகமாக 76.65 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் கொடுத்தோம். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை 2016-21 ஐந்து வருடங்களில் 28 கோடி ரூபாய் அதிகம் சொத்து சேர்த்ததாக மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னாள் பதிவுத் துறை அமைச்சர் சொத்துகள் வாங்கும்போது எவ்வாறு அதன் மதிப்பை குறைவாக குறிப்பிட்டு பதிவு செய்தார் என்ற ஆதாரங்களையும் அறப்போர் இயக்கம் சமர்ப்பித்துள்ளது. அவ்வாறு உண்மையான சொத்து மதிப்புகளை வைத்து கணக்கிட்டால் மேலும் பல கோடிகள் சொத்து மதிப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சொத்து குவிப்பது அரசியல்வாதிகளின் உரிமை என்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது நம் அனைவருக்கும் ஏற்பட்ட அவமானமாகக் கருதி இந்த ஊழல் அரசியல்வாதிகளை சிறைக்கு அனுப்பும் வரை தொடர்ந்து அரசாங்கத்தை கேள்வி கேட்போம். மேலும் ஊழல்கள் நடக்காமல் தொடர்ந்து அரசாங்கத்தைக் கண்காணிப்போம்” என்று கூறியுள்ளனர்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 17 செப் 2021