மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி. வேலுமணியைத் தொடர்ந்து இன்று திருப்பத்தூரைச் சேர்ந்த கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது.

பத்திரப்பதிவு துறை மற்றும் வணிகவரித் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனடிப்படையில், கே.சி.வீரமணிக்கு எதிராக மூன்று சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. லஞ்ச தடுப்பு சட்டம் 1998ன் கீழ் 13 (2) மற்றும் 13(1) (இ) பிரிவின் கீழும், லஞ்ச தடுப்பு சட்டம் 1998ன் கீழ் 13 (2) மற்றும் 13(1) (பி) பிரிவின் கீழும்

திருத்தப்பட்ட லஞ்ச தடுப்பு சட்டம் 2018 பிரிவு 7ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2016 முதல் 2021 ஆண்டு காலகட்டத்தில் வருமானத்தை மறைத்து அதிக அளவு சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 28.78 கோடி ரூபாய் அதாவது 654 சதவிகிதம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கே.சி.வீரமணிக்கு சொந்தமான, சென்னையில் சாந்தோம், அண்ணா நகர், சூளைமேடு, கொளத்தூர் ஆகிய நான்கு இடங்கள், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை, திருவண்ணாமலை பெங்களூரு என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோலார்பேட்டை பகுதியில் அதிமுகவினர் குவிந்தனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, அவர்களை போலீசார் கலைக்க முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும் கே.சி.வீரமணியின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

தொண்டர்கள் அல்லது வழக்கறிஞர் யாரையாவது அமைச்சரைப் பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சூழலில் கே .சி வீரமணியின் வழக்கறிஞர் பேசுகையில், வருமானத்துக்கு அதிகமாக 28 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். சோதனை நடைபெறுவதால் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர் உதவி தேவைப்படும் போது அழைக்கிறோம் என்று உள்ளே அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். இவர்கள் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தொகைக்குக் கணக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் நடந்து வரும் ரெய்டு குறித்து நாம் விசாரித்ததில், “கே.சி.வீரமணியைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்களுக்காக போராடுபவர்களுடன் தொடர்பில் இருப்பவர். கி.வீரமணியுடனும், திகவினருடன் நெருக்கமாக இருப்பவர்.

ஏற்கனவே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடந்த சமயத்திலே, தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக கி.வீரமணியை சந்தித்துப் பேசினார் கே.சி.வீரமணி. ஆனால், ‘ரெய்டு விவகாரத்தில் தலையிடமாட்டேன்’ என்று அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் உதவி கேட்டார். ‘ரெய்டு வந்தால் எனது பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும். அந்தளவுக்கு நான் எதுவும் செய்யவில்லை’ என வைகோவைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இதை பற்றியெல்லாம் நான் போய் பேச முடியாது என வைகோவும் கைவிரித்துவிட்டார்.

இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சரான துரைமுருகனின் உதவியை நாடினார். அவரும், என் கையில் எதுவுமில்லை... பார்த்துகலாம் என மறுத்துவிட்டார். இந்நிலையில் தான், இன்று 28 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நடப்பது இன்றுதான் துரைமுருகனுக்கே தெரியவந்திருக்கிறது. அந்தவகையில் அனைத்து நடவடிக்கைகளையும் ரகசியமாய் எடுத்துள்ளனர்” என்கிறார்கள் கே.சி.வீரமணிக்கு நெருக்கமானவர்கள்.

வணங்காமுடி, பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 16 செப் 2021