மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா எம்.பி பதவியை பெறுவதற்கு பாஜக தலைமை, என்.ஆர்.காங்கிரஸ் இடையே போட்டி நிலவி வருகிறது.

புதுச்சேரியில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 10. பாஜக 6, திமுக 6, காங்கிரஸ் 2, சுயேச்சைகள் 6 தொகுதிகளில் வெற்றிபெற்றனர். பாஜக- என்ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்தது. புதுச்சேரி முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி. இதையடுத்து நீண்ட போராட்டம், இழுபறிக்குப் பின்னர், பாஜக கேட்ட துணை முதல்வர் பதவியைத் தவிர்த்துவிட்டு, இரண்டு அமைச்சர் பதவியும் சபாநாயகர் பதவியும் வழங்கினார் ரங்கசாமி.

அப்போதே பாஜகவுக்கு ராஜ்யசபா சீட் கேட்டபோது பிறகு பார்த்துக்கலாம் என்று ரங்கசாமி மழுப்பலான பதில் கொடுத்தார். இந்நிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் வகித்து வந்த ராஜ்யசபா எம்.பி. பதவிக்காலம் முடிந்துவிட்டது. அந்த பதவிக்கு நேற்று (செப்டம்பர் 15) முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த எம்.பி பதவி பாஜகவுக்கா, என்.ஆர்.காங்கிரஸுக்கா என உறுதி செய்ய முடியாமல் இரு கட்சியினரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில்தான் புதுச்சேரி சட்டத்துறையிலிருந்து, “ நியமன எம்.எல்.ஏ.க்கள் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு வாக்களிக்கலாமா” என்று கேள்வி எழுப்பி ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு, நியமன எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க முடியாது என்று பதில் கொடுத்தது ஒன்றிய உள்துறை.

இதனிடையே, ஒன்றிய அமைச்சராகியுள்ள எல்.முருகனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கேட்டு வருகிறது பாஜக. என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி, மல்லாடி கிருஷ்ணாவை நிறுத்த முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலைக் கேள்விப்பட்ட டெல்லி பாஜக தலைமை, ரங்கசாமியுடன் பேசச்சொல்லி குடியரசு துணைத் தலைவரிடம் கூறியது. இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தார். அவர், முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த போது, ராஜ்யசபா சீட் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘வேட்பாளர் என்னோட ஆளாக இருக்கட்டும்... அவரை உங்கள் கட்சி வேட்பாளராக அறிவியுங்கள்” என்று கூறியுள்ளார் ரங்கசாமி.

இறுதியில், ராஜ்யசபா சீட் பாஜகவுக்குத்தான், வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவுசெய்யும் என்று அழுத்தமாகக் கூறியுள்ளார் வெங்கைய நாயுடு. அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் வழக்கமாக மௌனத்தை மட்டும் காட்டிவிட்டு வெளியேறியுள்ளார் ரங்கசாமி.

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியா அல்லது மறுப்பதற்கான அறிகுறியா என்பது அந்த அழுக்குசாமிக்குத்தான் தெரியும் என்கிறார்கள் ரங்கசாமி ஆதரவாளர்கள்.

என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் மல்லாடி கிருஷ்ணா ராவ் போட்டியிட தயாராகி வருகிறார், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் 20ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.

கொள்ளப்பள்ளி அசோக், அங்காலன், சிவசங்கரன் மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் பாஜகவின் பலம் 9 எம்.எல்.ஏ.வாக உள்ளது. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸுக்கு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான பிரகாஷ்ராஜ் மற்றும் பி.ஆர்.சிவா ஆதரவு கொடுத்துள்ளதால் என்.ஆர்.காங்கிரஸ் பலம் 12 எம்.எல்.ஏ.க்களாக கூடியுள்ளது. ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ நேரு மட்டும் நடு நிலையுடன் இருந்துவருகிறார்.

திமுக 6, காங்கிரஸ் 2, மொத்தம் 8 எம்.எல்.ஏ.க்கள் இவர்கள் ராஜ்யசபா எம்பி பதவிக்குப் போட்டியிடவில்லை என்றாலும், புதுச்சேரி திமுக தலைமையுடன் முதல்வர் ரங்கசாமி மறைமுகமாக ஆதரவு கேட்டு வருகிறார் என திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் கூறுகின்றனர்.

“பாஜக வேட்பாளர்தான் போட்டியிடுவார், அவர்தான்நிச்சயம் வெற்றிபெறுவார் மாற்று கட்சி எம்.எல்.ஏ.க்களும் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்களிப்பார்கள் என்பது முதல்வர் ரங்கசாமிக்கும் தெரியும். அதனால் கடைசி நேரத்தில் பாஜகவுக்கு விட்டுக்கொடுப்பார் முதல்வர் என்ற நம்பிக்கை உள்ளது” என்கிறார்கள் புதுச்சேரி பாஜக பிரமுகர்கள்.

என்.ஆர்.காங்கிரஸ், சுயேட்சை மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுடனும் பாஜக பிரமுகர்கள் தொடர்பிலிருந்து வருவதாகவும் அவர்களுக்குத் தேவையானதைப் பூர்த்தி செய்துகொடுத்து வலை விரித்து வருவதாகவும் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறுகிறார்.

“கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் விட்டுக்கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்குத் தயார் நிலையில் உள்ளது பாஜக தலைமை” என்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள்.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் என்.ஆர்.காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் நடந்த போட்டி போன்று மீண்டும் ராஜ்யசபா எம்.பி.பதவிக்கு போட்டியும் குழப்பமும் தொடங்கியிருக்கிறது.

-வணங்காமுடி

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 16 செப் 2021