மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 16 செப் 2021

நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைய வேண்டும்: ஸ்டாலின்

நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைய வேண்டும்: ஸ்டாலின்

பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, திமுக தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி திமுகவின் முப்பெரும் விழா சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று(செப்டம்பர் 15) மாலை நடைபெற்றது. விழாவில் ‘முரசொலி’ செல்வம் எழுதிய “முரசொலி சில நினைவலைகள்” என்ற நூலை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், முப்பெரும் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

மிசா பி.மதிவாணனுக்கு பெரியார் விருதும், தேனி எல்.மூக்கையாவுக்கு அண்ணா விருதும், கும்முடிப்பூண்டி கி.வேணுவுக்கு கலைஞர் விருதும், திருமதி.வாசுகி ரமணனுக்கு பாவேந்தர் விருதும், பா.மு.முபாரக்கிற்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது.

ஆறாவது முறையாக திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் நடந்த முதல் முப்பெரும் விழா இதுவாகும்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கொரோனா காலம் என்பதால் பெரிய மாநாடு போல் நடத்தாமல், காணொலிக் காட்சி மூலமாக 28 மாவட்டங்களில் நடத்துகிறோம். காணொலிக் காட்சி மூலமாக விழாவைப் பார்க்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்தமுறை முப்பெரும் விழா நடைபெற்ற போது 8 மாதம் பொறுத்திருங்கள், நாம் ஆட்சிக்கு வரப் போகிறோம் என்று சொன்னேன். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

தொண்டர்கள் இல்லாமல் இந்த வெற்றி இல்லை, உங்கள் தியாகத்தால், உழைப்பினால், வியர்வையால் கிடைத்த வெற்றி இதுவாகும். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாமல் தொண்டன் என்ற நிலையிலிருந்து பணியாற்றியவர்களால்தான் இந்த ஆட்சி உருவாகி இருக்கிறது.

1921ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அந்த நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நீதிக்கட்சி பொறுப்பை ஏற்ற இந்த நூற்றாண்டில், ஆறாவது முறையாக திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது, நான் முதல்வராக பொறுப்பு ஏற்றது இந்த முப்பெரும் விழாவிற்கு கூடுதல் சிறப்பு.

பெரியார் என்றால் சமூக நீதி, அண்ணா என்றால் மாநில உரிமை, கலைஞர் என்றால் ஒடுக்கப்பட்டவர்களுக்கான உரிமை, பாவேந்தர் என்றால் மொழிப்பற்று, பேராசிரியர் என்றால் இனமானம்.

இதுதான் இந்த இயக்கத்தின் கொள்கை அந்த வழியில்தான் நாம் நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

முரசொலி செல்வத்தை எப்போதும் நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். என்னை உருவாக்கியவர்களில் ஒருவராக அவரும் இருந்தார். நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், கலைஞர் இல்லை என்ற குறையை போக்கியவர் முரசொலி செல்வம்” என்று தெரிவித்தார்.

மேலும், ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மற்றும் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட புதிய அறிவிப்புகள் ஆகியவை குறித்து பட்டியலிட்ட முதல்வர், மானிய கோரிக்கைகள், உறுதிமொழிகள் மீதான நடவடிக்கை குறித்து மாதம் இரு முறை ஆய்வு செய்து மக்களிடம் கொண்டு செல்வேன்.

விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருக்கிறோம். அதைத்தொடர்ந்து நகர்பற உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்க இருக்கிறோம்.

எதிர்க்கட்சியாக இருந்தபோது 60 முதல் 70 சதவிகிதம் வென்ற நாம் ஆளும் கட்சியாக நூற்றுக்கு நூறு சதவிகிதம் வெற்றி பெற வேண்டும்.

இனி தமிழ்நாட்டில் நிரந்தரமாக நமது ஆட்சி தான் நடைபெற வேண்டும். நிரந்தரமான ஆட்சிக்கு தேவையான அடித்தளத்தை தொண்டர்கள் உருவாக்க வேண்டும். பெரியார்களின் பிள்ளைகள் நாம், அண்ணாவின் தம்பிகள் நாம், கலைஞரின் உடன்பிறப்புகள் நாம் என கட்சியிலும் ஆட்சியிலும் நிரூபித்து வண்ணமிகு தமிழ் நாட்டை உருவாக்க வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், ”கலைஞர் முதல்வரான பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு பெற்ற புகழை எல்லாம் முதல்வர் ஸ்டாலின் 100 நாட்களில் பெற்றிருக்கிறார் . ஆட்சியை திறம்பட நடத்தி வருபவர், கட்சியையும் கட்டி காப்பாற்றுகிறார்.

இந்த இயக்கத்தை தலைவர் கலைஞர் வழியில் இம்மியளவும் பிசகாமல் நடத்தி கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்” என்று புகழாரம் சூட்டினார்.

-வினிதா, கவி

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

வியாழன் 16 செப் 2021