மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

கோயில் நிலங்களுக்கு எப்போதுமே பட்டா கிடையாது: அமைச்சர் சேகர்பாபு

கோயில் நிலங்களுக்கு எப்போதுமே பட்டா கிடையாது: அமைச்சர் சேகர்பாபு

கோயில் நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் தினமும் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மேலே குறிப்பிட்ட மூன்று கோயில்களிலும் அமைச்சர் சேகர்பாபு நேற்று (செப்டம்பர் 14) ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று தூத்துக்குடிக்குச் சென்றார். அங்கிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலுக்கு சென்ற அமைச்சர், கோயிலின் பிராகாரங்கள் மற்றும் அன்னதானக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து, சமயபுரம், திருத்தணி ஆகிய கோயில்களில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவானைக்காவலில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, "வருகிற செப்டம்பர் 16ஆம் தேதி திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி உள்ளிட்ட கோயில்களில் மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஆன்லைன் மூலம் தொடங்கி வைக்கிறார். கோயில்களில் தொகுப்பூதிய அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றி வரும் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் பணி நிரந்தர ஆணை வழங்கப்படும். இதுதொடர்பாக கடந்த ஆட்சியில் 110 விதியின் கீழ் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான 180 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக யார் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற அடிப்படையில் ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னர்கள் மற்றும் ஜாமீன்தார்களால் தானமாகக் கொடுக்கப்பட்டதுதான் கோயில் நிலங்கள். அந்த நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க முடியாது. மயிலாடுதுறையில் அவ்வாறாகப் பட்டா கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனால், எப்போதும் கோயில் நிலங்களுக்குப் பட்டா வழங்கும் பேச்சுக்கே இடமில்லை” என்று கூறினார்.

முன்னதாக தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, "கோயில்களில் பக்தர்களுக்கு நிறைவான மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் சில வாரங்களுக்கு முன்பு கோயில்களில் மொட்டை போடுவதற்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் மொட்டை போடும் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அவர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.இந்த நிலையில் கோயில்களில் காது குத்துவதற்கு முறைகேடாக அதிக பணம் வசூலித்தால் துறை ரீதியான குழுவின் மூலம் ஆய்வு நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

-வினிதா

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021