மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி என்று முடிவெடுத்த, செப்டம்பர் 14 ஆம் தேதி நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவை விமர்சித்து டாக்டர் ராமதாஸ் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன.

இதை பாமக தலைவர் ஜி.கே.மணியும், வழக்கறிஞர் கே.பாலுவும் மறுத்துள்ளனர். “நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். யூகங்களை நம்பி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது” என்று பாலு கூறியுள்ளார். பாமக தலைவர் ஜி.கே.மணியோ, “கூட்டத்தில் டாக்டர் அதிமுகவை விமரிசித்து எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் நெருப்பில்லாமல் புகையுமா என்று கேட்கிறார்கள் அதிமுகவினர். கூட்டத்தில் நடந்தது என்ன, பாமகவினர் இப்படி மறுப்பது ஏன் என்பது பற்றி தைலாபுரம் தோட்டத்துக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் பாமக நடத்திய போராட்டங்களை எடப்பாடி விரும்பவில்லை. இதுகுறித்து அவர் அதிமுகவின் வன்னியர் பிரமுகர்களான சி.வி. சண்முகம், கேபி. முனுசாமி போன்றவர்களிடம் ஆட்சியில் இருந்தபோதே பேசியது டாக்டர் காதுக்கும் சென்றது. அதனால்தான், உள் இட ஒதுக்கீடு அளித்தால்தான் கூட்டணி என்று எச்சரிக்கை விடுத்தார் டாக்டர். அதன் பின்னரும் வேண்டா வெறுப்பாகத்தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரங்கள் முன்னதாக அரைமனதோடு அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இப்படி நாங்கள் போராடிப் பெற்ற வெற்றி அதிமுகவுக்கு சாதகமானது. அதாவது சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற வன்னியர்கள், கவுண்டர்கள் அடர்த்தியாக இருக்கும் பகுதிகளில் அதிமுக இதனால் பலன் பெற்றது. ஆனால், அதிமுகவிலேயே சிலர் எழுப்பிய அதிருப்தி காரணமாக மைனாரிட்டி சமூகத்தினர் பாமகவுக்கு வட மாவட்டங்களில் வாக்களிக்கவில்லை. அதிமுகவின் ஒத்துழைப்பும் எங்களுக்கு முழுமையாக இல்லை. எடப்பாடி முழுக்க முழுக்க கொங்கு பகுதிகளில்தான் தனது கவனிப்பைக் காட்டினாரே தவிர, பாமக செல்வாக்குள்ள வட மாவட்டங்களில் அவர் கவனிப்பைக் காட்டவில்லை. மேலும், பாமக அதிக இடங்களில் வெற்றிபெற்றால் இடைஞ்சல் கொடுப்பார்கள் என்று எடப்பாடி தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசியதும் எங்கள் கவனத்துக்கு வந்தது.

இப்படிப்பட்ட பின்னணியில்தான் வட மாவட்டங்களில் பாமக தோற்றது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பாமக ஓட்டு முழுமையாக அதிமுகவுக்கு டிரான்ஸ்ஃபார்ம் ஆனது. ஆனால் எஞ்சிய வட மாவட்டங்களில் அதிமுகவின் ஓட்டுகள் பாமகவுக்கு டிரான்ஸ்பர் ஆகவில்லை.

தேர்தலுக்குப் பிறகு தெரியவந்த இந்த கணக்குகளால் டாக்டர் வருத்தத்தில் இருந்தார். நிர்வாகிகளிடம் கோபத்தையும் காட்டினார். இந்த நிலையில்தான் எதிர்பாராத விதமாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் அணுகுமுறையில் டாக்டர் ஈர்க்கப்பட்டார். தற்காலிமாக அவசர அவசரமாக சென்ற ஆட்சியில் போடப்பட்ட 10.5% உள் ஒதுக்கீடு சட்டத்தை ஸ்டாலின் நினைத்திருந்தால் தாமதித்து தவிர்த்திருக்க முடியும். ஆனால் கூட்டணியில் இருக்கும் திருமாவளவனின் வருத்தத்தையும் கோபத்தையும் கூட பொருட்படுத்தாமல் அதை நிரந்தரமாக்கினார். அரசாணை வெளியிட்டார். இதை டாக்டர் எதிர்பார்க்கவில்லை. மேலும் அடுத்த அதிரடியாக இட ஒதுக்கீடு போராட்டத்தில் கொல்லப்பட்ட தியாகிகள் 21 பேருக்கு மணிமண்டபம் என்ற ஸ்டாலினின் அறிவிப்பு டாக்டருக்கு வாழ்நாள் சாதனை போன்ற மன திருப்தியை ஏற்படுத்தியது. இனி திமுகவை முன்புபோல வலிமையாக எதிர்க்க முடியாது என்ற நிலைப்பாட்டில்தான் இருந்தார் டாக்டர்.

இந்த நிலையில்தான் அன்புமணியின் மகள் திருமணம் வந்தது. இந்த திருமணத்துக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி நேரில் சென்று பத்திரிகை வைத்தார். ஏற்கனவே ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்தவர் அன்புமணி. இந்த பின்னணியில் ஸ்டாலின் திருமணத்துக்கு வருவார் என்றும் வரமாட்டார் என்றும் டாக்டர் குடும்பத்திலேயே இரு வேறு கருத்துகள் எழுந்தன.

10.5% அரசாணை, தியாகிகளுக்கு மணிமண்டபம் ஆகியவை பாமகவின் கோரிக்கைகளாக இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலேயே இவை ஸ்டாலினின் வாக்குறுதிகளாகவும் இருந்தன. எனவே திமுகவுக்கே உரிய வன்னியர் வாக்குகளைத் தக்க வைக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டிருக்கலாம். இந்த நிலையில் அன்புமணியின் திருமணத்துக்கு ஸ்டாலின் வருகிறாரா என்று பார்ப்போம்...வந்தார் என்றால் அதற்கேற்ற மாதிரி முடிவு செய்துகொள்ளலாம் என்று கருதியிருந்தார் டாக்டர். அதனால்தான் உள்ளாட்சித் தேர்தல் பற்றிய கூட்டத்தை திருமணத்துக்குப் பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தார்.

ஆனால் முதல்வர் ஸ்டாலினோ மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என். நேரு, எ.வ. வேலு, உதயநிதி ஸ்டாலின் என்று புடைசூழ வந்து வாழ்த்தியதும் கனிவாக நடந்துகொண்டதும் டாக்டருக்கு ஸ்டாலின் மீது பெரிய அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் இப்போதைக்கு அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்து திமுகவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய டாக்டர், ‘நாம் இப்போது நம் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். வட மாவட்டங்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பலன் நமக்குக் கிடைக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களோடு பேசிக் கொள்ளுங்கள் என்று அதிமுகவில் சொல்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் யாரும் எடப்பாடி பேச்சைக் கேட்பதாகத் தெரியவில்லை. எனவே குழப்பமும் சிக்கலும்தான் வரும். அதனால் தனித்துப் போட்டியிடுவோம். பாமகவின் முழுமையான பலத்தை நாம் மற்ற கட்சிகளுக்கு காண்பிப்போம்’ என்று பேசினார். மேலும், ‘திமுக ஆட்சி நமது முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலிலேயே கூட்டணி வைத்து பலன் தராத அதிமுகவோடு நாம் மீண்டும் கூட்டணி வைத்து பலனில்லை. எனவே இப்போது நாம் யார் கூட்டணியிலும் இல்லை. நம் கட்சியினர் உள்ளாட்சிப் பதவிகளுக்கு வந்து கட்சியை வளர்ப்போம்’ என்று கூறியுள்ளார்” என்று விவரித்தவர்களிடம்,

“ஆனால் அதிமுகவை விமர்சிக்கவில்லை என்று ஜி.கே. மணி சொல்வது ஏன்?” என்று கேட்டோம்.

“இதை மறுக்கவில்லை என்றால் திமுகவை நோக்கி பாமக செல்கிறது என்று நினைக்கும் பாஜகவின் கோபத்தை சமாளிக்க வேண்டும். தவிர திமுகவும் இதுவரைக்கும் பாமகவோடு வேறு எந்த கமிட்மென்ட்டுக்கும் உடன்படவில்லை. எங்கள் நிலை தேமுதிக போல ஆகிவிடக் கூடாது அல்லவா? அதனால்தான் இந்த வழக்கமான மறுப்புகள்” என்கிறார்கள் கூலாக.

இதற்கிடையில் இத்தனை பரபரப்புகளுக்கு இடையில் அறிக்கை ஒன்றை இன்று (செப்டம்பர் 15) வெளியிட்டுள்ள டாக்டர் ராமதாஸ்,

“கடந்த ஆண்டு இதே நாளில் கனவாக இருந்த இந்த விஷயங்கள் இப்போது நனவாகியுள்ளன. கடந்த ஆண்டில் வேதனையுடன் பேசிய பல விஷயங்களை இப்போது மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இந்த வகையில் நடப்பு சமூகநீதி ஆண்டு நமக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இதை சாத்தியமாக்கியுள்ள முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்களுக்கும், 6 கட்டங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்திய பாட்டாளி சொந்தங்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இலக்கை எட்ட வேண்டும் என்பதற்கான போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நமது தியாகிகளுக்கு சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளில் அனைவரும் அவர்களின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து அவர்களை நினைவு கூற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

-வேந்தன்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

புதன் 15 செப் 2021