மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

கெஞ்சி கேட்கிறேன் தற்கொலை முடிவு வேண்டாம்: முதல்வர்!

கெஞ்சி கேட்கிறேன் தற்கொலை முடிவு வேண்டாம்: முதல்வர்!

நீட் தேர்வு காரணமாகக் கடந்த 4 நாட்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். மேட்டூர் தனுஷ், அரியலூர் கனிமொழி, வேலூர் சவுந்தர்யா என மூன்று பேர் அடுத்தடுத்து தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கத் தமிழக சுகாதாரத் துறை தனி மையம் அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு ஆறுதல் மற்றும் ஊக்கமளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

அதில், “ 2017ஆண்டு மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில் தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்டபோதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக்கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன்.

ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்து விட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது.

சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, நீட் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.

மருத்துவம் படிக்க வேண்டும் - டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கும் வகையில் நீட் தேர்வு முறை இருக்கிறது. ஆனால் ஒன்றிய அரசு, இதிலிருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது. கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தனர். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்தனர். அந்த அடிப்படையில் நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை கொடுத்தது.

அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கருத்தை, பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல உள்ளோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே, நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக உள்ளது.

உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி உள்ளது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடி கேட்கிறேன்.

உங்களால் மருத்துவர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்திவிடாதீர்கள்.

கல்வியில் மட்டுமல்ல - தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும்.

முயற்சிதான் வெற்றியைத் தரும் என திருவள்ளுவர் கூறியுள்ளார். அத்தகைய துணிச்சலும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, நமது மாணவ மாணவிகள் வளர வேண்டும், வாழ வேண்டும்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில்

‘104’ என்ற தொலைபேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ மாணவியருக்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். உடல் நலன் - உள் நலன் கொண்டவர்களாக நமது மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவ செல்வங்களுக்குத் தன்னம்பிக்கை விதை விதைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ...தயவு செய்து... மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்று காட்டுவோம்” என மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேசியுள்ளார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

புதன் 15 செப் 2021