மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

அதிமுக கூட்டணி முறிவு: மழுப்பும் பாமக

அதிமுக கூட்டணி முறிவு: மழுப்பும் பாமக

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய பாமக வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து நேற்று (செப்டம்பர் 14) பாமக தலைமை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், “அதிமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நம்மால் அதிமுகவும் பிறகட்சிகளும் பலன் அடைந்தார்களே தவிர, பாமகவுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மேலும் அதிமுகவில் தலைமைப் பிரச்சினை இருப்பதால் அவர்களால் சரியான முடிவுகளை மேற்கொள்ள முடிவதில்லை” என்று விமர்சனம் செய்திருந்ததாக தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 15) காலை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அவர்கள் முடிவு எடுத்துக்கட்டும். அதற்காக எங்கள் கட்சியை விமர்சனம் செய்வதை ஒரு போதும் ஏற்க முடியாது. நாங்களும் விமர்சனம் செய்ய நேரிடும். அவர்கள் யாருடைய கட்டாயத்தால் இந்த முடிவு எடுத்தார்கள் என்று தெரியாது. எழுதப்படாத ஒப்பந்தம் சிலருடன் போட்டுக் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கலாம்.

திமுகவை பொறுத்தவரை பொய்யான வாக்குறுதியை கொடுத்து வெற்றிபெற்றார்கள். அம்மா காலத்திலும், அம்மா மறைவுக்குப் பின் எடப்பாடி அண்ணன் காலத்திலும் நாங்கள் செய்த திட்டங்களை எடுத்து வைத்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வோம். எங்களிடம் இருந்து விலகியதால் பாமகவுக்குதான் இழப்பு. எங்கள் ஓட்டு எங்களுக்கு கிடைக்கும்.

கூட்டணி தர்மத்தை அதிமுக மீறவில்லை. நாங்கள் ஜென்டில் மேனாக இருக்க விரும்புகிறோம். எங்களையும் விமர்சனம் செய்யும் அளவுக்கு தள்ள வேண்டாம். கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றுவதால்தான் நாங்கள் இந்த அளவுக்கு அமைதியாக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார் ஜெயக்குமார்.

இதற்கிடையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாமக தலைவர் ஜி.கே.மணி, “நேற்று மாலை நடந்த அவசர பாமக கூட்டத்தில் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தனித்துப் போட்டி என்று முடிவெடுத்தோம். உள்ளாட்சித் தேர்தல் என்பது சட்டமன்றம், நாடாளுமன்றம் போல அல்ல. அதிகமான இடங்கள் இருப்பதால் இதில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி முடிவுக்கு வருவது கடினம். மேலும் கட்சி சார்பற்ற இடங்கள் அதிகம். எனவே நிர்வாகிகளின் கருத்துக்கு மதிப்பளித்து தனித்துப் போட்டி என்று முடிவெடுத்தோம். கூட்டணிக் கட்சிகள் கூடிப் பேச எங்கே அவகாசம் இருக்கிறது?

மேலும் அந்தக் கூட்டத்தில் அதிமுக பற்றியோ அதன் தலைமை பற்றியோ நிறுவனர் டாக்டர் அய்யா எந்த விமர்சனமும் வைக்கவில்லை. யாருடைய தூண்டுதலும் இல்லை. இதை வேறு மாதிரி திசை திருப்ப வேண்டாம். மற்ற தேர்தல்கள் பற்றி இப்போது சிந்திக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021