மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 15 செப் 2021

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி - எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

ஒன்பது மாவட்டங்களில் நடக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது.

நேற்று (செப்டம்பர் 14) இரவு பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் அக்டோபர் 6, 9 என இரு கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க, கட்சியின் தலைமை நிர்வாகிகள், ஒன்பது மாவட்டங்களுக்குரிய துணைப் பொதுச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் எனது தலைமையில் செப்டம்பர் 14 இணைய வழியில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி கருதி தனித்துப் போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து செப்டம்பர் 15, 16 தேதிகளில் விருப்ப மனு பெறப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பாமகவின் அறிவிப்பு மின்னம்பலம் வாசக நேயர்களுக்கு எதிர்பார்த்த ஒன்றாகத்தான் இருக்கும். ஏனெனில் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் திமுக ஆட்சி அமைந்த பிறகு பாமகவின் நிலைப்பாடுகளால் அதிமுக - பாமக கூட்டணியில் பெரிய அளவு இடைவெளி ஏற்பட்டுவிட்டதை மின்னம்பலத்தில் தொடர்ந்து நாம் முன்கூட்டியே சொல்லி வந்திருக்கிறோம்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி மின்னம்பலத்தில், எடப்பாடியை அதிர வைத்த ராமதாஸ்- கலைஞர் மூலம் ஸ்டாலின் ஆடிய கேம்என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம்.

ஆகஸ்ட் 2 ஆம் தேதி மாலை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் திருவுருவப் படம் சட்டமன்றத்தில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வை அதிமுக புறக்கணித்த நிலையில் பாமகவின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். இதுகுறித்து அந்த செய்தியில், “கலைஞர் படத்திறப்பு விழாவில் எடப்பாடி கலந்துகொள்ளாததுகூட ஆளுங்கட்சி- எதிர்க்கட்சி என்ற அரசியல் விளையாட்டில் சேர்ந்துவிடும். ஆனால் பாமகவின் ஐந்து உறுப்பினர்களும் கலந்துகொண்டது ஸ்டாலினை ஆச்சரியப்படுத்தியது மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில் அந்த ஒன்பது மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் தமிழகத்தின் வட பகுதியில்தான் வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் பாமகவின் கூட்டணி அதிமுகவுக்கு முக்கிய தேவையாக உள்ளது. ஆனால் எடப்பாடி கடந்த ஆட்சியில் அவசர அவசரமாகக் கொண்டுவந்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு அறிவிப்பை, இப்போது நிரந்தரமாக்கி அரசாணை வெளியிட்டியிருக்கிறார் ஸ்டாலின்.

இதையடுத்து ஸ்டாலினுக்கு நேரில் சென்று நன்றி சொல்ல விரும்பியிருக்கிறார் ராமதாஸ். ஆனால் உடல்நிலை மற்றும் கொரோனா சூழல் கருதி பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று கருதி போனில் தொடர்புகொண்டு நன்றி சொல்லியிருக்கிறார். பாமகவின் ஐந்து எம்.எல்.ஏ.க்களும் நேரில் சென்று ஸ்டாலினை சந்தித்து நன்றி சொன்னார்கள்.

இந்தப் பின்னணியில் அதிமுக கூட்டணியை விட வன்னியர் நலன் என்ற அடிப்படையில் திமுக அரசோடு இணக்கமான போக்கையே விரும்புகிறார் டாக்டர் ராமதாஸ். அதன் அடிப்படையிலேயே அதிமுக சட்டமன்றத்தில் கலைஞர் படத்திறப்பு நிகழ்வை புறக்கணிக்கிறது என்று தெரிந்தும் தனது ஐந்து எம்.எல்.ஏ.க்களும் நிகழ்வுக்கு வருவார்கள் என்ற உறுதியை முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பாமகவின் இந்த மூவ்தான் எடப்பாடிக்கு அரசியல் ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களில் ஏழு மாவட்டங்கள் தமிழ்நாட்டின் வட பகுதியில் இருக்கின்றன. இங்கே பாமக கணிசமான செல்வாக்கோடு இருக்கிறது. ஒரு வேளை அதிமுக கூட்டணியில் தொடர்வது என்றால் பாமக அதிக இடங்களை இந்த மாவட்டங்களில் கேட்கும். ஆனால் அதற்கு ஏற்கனவே அன்புமணியால் விமர்சிக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் சம்மதிக்க மாட்டார். எடப்பாடிதான் பாமக கூட்டணியை சட்டமன்றத் தேர்தலில் மெனக்கெட்டு உருவாக்கினார். அதனால் இந்த ஏழு மாவட்டங்களில் பாமகவுக்கு அதிகப்படியான இடங்களை தர எடப்பாடியும் சம்மதிப்பாரா என்பது கேள்விக்குறியே. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இருக்குமா தனித்து நிற்குமா என்பது இந்த கலைஞர் படத்திறப்பு விழா மூலமாக விவாதத்துக்குரிய கேள்வியாகியிருக்கிறது” என்று அந்த செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

இதன்பின் 21% இட ஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் சட்டமன்ற அறிவிப்பும் பாமகவை திக்குமுக்காட வைத்தது. அதற்காகவும் முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் நன்றி கூறினார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

லேட்டஸ்டாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட செப்டம்பர் 13ஆம் தேதி அன்புமணியின் மகள் சங்கமித்ராவின் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவை சகாக்கள், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரோடு வந்து வாழ்த்திவிட்டுச் சென்றார். அப்போது மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் தோளைத் தட்டி அழைத்து அவரது காதுக்குள் ஏதோ சொன்னார் ராமதாஸ். அதற்கு ஸ்டாலினும் தலையாட்டிக் கொண்டார். இப்படி ஒரே மேடையில் ஸ்டாலினும் ராமதாஸும் நீண்ட நாட்களுக்குப் பிறகு இருக்கும் காட்சி செப்டம்பர் 13ஆம் தேதி அரங்கேறியது.

அடுத்த 24 மணி நேரத்தில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பாமக. ஸ்டாலின் ஆபரேஷனில் டாக்டர் இன்று தனித்துப் போட்டி என்று முடிவெடுத்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே வந்துவிடுவார் என்கிறார்கள் அந்த திருமண மேடையில் ராமதாஸோடு இருந்த திமுக புள்ளிகள் சிலர்.

-வேந்தன்

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ ஐந்து வருடக் கணக்கு: கே.சி. ...

6 நிமிட வாசிப்பு

கொடுத்தது பத்து வருடக் கணக்கு: வழக்கோ  ஐந்து வருடக் கணக்கு: கே.சி. வீரமணி ரெய்டு குறித்து அறப்போர்!

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

3 நிமிட வாசிப்பு

ஆளுநரை வரவேற்ற முதல்வர்!

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

5 நிமிட வாசிப்பு

விஜிலன்ஸ் ரெய்டு: கே.சி.வீரமணி வீட்டில் சிக்கியது என்ன?

புதன் 15 செப் 2021