மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

விற்கப்பட்ட நீட் வினாத்தாள்: இதெல்லாம் ஒரு தேர்வா?

விற்கப்பட்ட நீட் வினாத்தாள்: இதெல்லாம் ஒரு தேர்வா?

தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டது நீட் தேர்வு என்கிறது ஒன்றிய அரசு. மருத்துவர்களை உருவாக்குவதற்கான தரத்தில் எந்த சமரசமும் செய்து கொண்டிருக்க முடியாது என்றும் கூறுகிறது.

இதற்காகத் தேர்வு மையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. மாணவிகள் அணிந்து செல்லும் அணிகலன்கள், குறிப்பாகப் பெண்கள் சென்டிமென்டாக கருதும் தாலி, மெட்டி கூட கழற்றப்பட்டு தான் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் இந்த கெடுபிடிகள் எல்லாம் எதற்கு என்ற வகையில் ஆண்டு தோறும், நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு எனப் பல முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ஒருபக்கம் தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக அரசு போராட்டத்தை தொடங்கியுள்ளது, நீட் தேர்வு மீதான அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலமும் தொடர்கிறது.

ஆனால் ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் பல லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி மையத்தில் நீட் தேர்வு நடைபெற்றது. அப்போது வினாத்தாளை கசியவிட்ட முறைகேடு நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து ஜெய்ப்பூர் காவல் துறை துணை ஆணையர் குமார் கூறுகையில், சம்பந்தப்பட்ட தேர்வு மையத்தில் முறைகேடு நடப்பதாக தகவல் கிடைத்ததும் எங்கள் அதிகாரிகள் தேர்வு மையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு தேர்வு மையத்தில் உள்ள அறை எண். 35 ல் சோதனை நடத்தியது. அப்போது, தேர்வு கண்காணிப்பாளர் ராம்சிங் வினாத்தாளை புகைப்படம் எடுத்து கசிய விட்டது தெரியவந்தது என்று தெரிவித்துள்ளார்.

ராம்சிங் என்பவருக்கு அறிமுகமான நவரத்னா என்பவர் பன்சூரில் பயிற்சி மையம் ஒன்று நடத்திவருகிறார். நவரத்னாவுக்கு பழக்கமானவர் சுனில் குமார். சுனில் குமாரின் உறவினர் தனேஸ்வரி யாதவ்.

நீட் தேர்வுக்குத் தயாராகி வந்த தனேஸ்வரி யாதவுக்கு உதவத்தான் கண்காணிப்பாளர் ராம்குமார், தேர்வு மையத்துக்கு வந்த வினாத்தாளை புகைப்படம் எடுத்துக் கசிய விட்டுள்ளார். இதற்காக கல்லூரி நிர்வாகிகளில் ஒருவரான முகேஷ் சமோட்டா என்பவரது செல்போனை பயன்படுத்தியுள்ளார்.

இந்த வினாத்தாளைக் கசிய விடும் விவகாரத்தில் 35 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு மைய வளாகத்திலேயே தனேஸ்வரி யாதவின் மாமா சுனில் குமார் ரூ.10 லட்சத்தோடு காரில் காத்திருந்தார்.

இந்த நிலையில் தான் தேர்வு மையத்துக்குச் சென்ற காவல்துறையினர் இவ்விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர்.

கல்லூரி நிர்வாகி முகேஷ் சமோட்டா, கண்காணிப்பாளர் ராம் சிங், வேட்பாளர் தனேஸ்வரி யாதவ், அவரது மாமா சுனில் குமார் யாதவ், தனியார் பயிற்சி மையத்தின் உரிமையாளர் நவரத்னா, அந்த வினாத்தாளுக்குப் பதிலளிக்க உதவிய அனில் யாதவ் மற்றும் சந்தீப் அந்த பதில்களை மீண்டும் கண்காணிப்பாளருக்கு அனுப்பிய பங்கஜ் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவ்விவகாரத்தில் யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

-பிரியா

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

செவ்வாய் 14 செப் 2021