மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

1-8 பள்ளிகள் திறப்பு எப்போது?

1-8 பள்ளிகள் திறப்பு எப்போது?

தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட நாளிலிருந்தே, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரியளவிலான பாதிப்புகள் எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதுகுறித்து முடிவெடுப்பதற்காக, இன்று(செப்டம்பர் 14) காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதன் தொடர்ச்சியாக குறித்து இன்று மாலை சென்னை கோட்டூரபுரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தினர். இதில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

கூட்டத்தில், தற்போது 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள், நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் 1-8 வகுப்புவரை பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் போன்ற விவரங்கள் குறித்து அலுவலர்களிடம் விவரங்கள் கேட்கப்பட்டது.

1-8 முதல் வகுப்புகள் திறக்கப்பட்டால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறவும், மாணவர்கள், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், பள்ளிகள் தோறும் மருத்துவக் குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசித்தோம். எல்லையோர மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் குறித்து ஆலோசித்தோம். மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பமில்லை என்றால் வீட்டிலேயே இருக்கலாம். பள்ளிகள் தோறும் மருத்துவ குழு சென்று மாணவர்கள் உடல்நிலை குறித்து சோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் குறித்த அறிக்கை நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியிடுவார் என்று ஆலோசனைக்கு முன்னதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

செவ்வாய் 14 செப் 2021