மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 14 செப் 2021

மீண்டும் தமிழகம் வரும் அமர்நாத்

மீண்டும் தமிழகம் வரும் அமர்நாத்

கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் திரும்பவும் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. தமிழர்களின் பண்பாட்டையும், தமிழின் தொன்மையும் அறிந்து கொள்வதற்காக மதுரைக்கு அருகிலுள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் நீண்ட வாள், வெள்ளிக்காசு, முதுமக்கள் தாழி என பல வரலாற்று எச்சங்கள் கிடைத்ததையடுத்து, தொல்லியல் வரலாறு மற்றும் அகழாய்வுப் பணிகள் மீதான ஆர்வம் அதிகரித்தது. இந்திய தொல்லியல் துறை கீழடியில் மூன்றாம் கட்ட அகழாய்வோடு நிறுத்தியது. அதன்பிறகு கீழடியில் நான்காம், ஐந்தாம், ஆறாம் கட்ட அகழாய்வுகளை மாநில தொல்லியல் துறையே நடத்தியது. இதற்குப் பின் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வுடன் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கங்கை கொண்ட சோழபுரம், கொடுமணல், மயிலாடும்பாறை உள்ளிட்ட ஏழு இடங்களிலும் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் பல பொருட்கள் கிடைக்கபெற்றன. அகழாய்வில் கிடைத்த பொருட்களை மக்கள் பார்வையிடும் வகையில் கீழடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.

அந்த வகையில் 2014-2016 வரை கீழடியில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வில் ஒன்றிய தொல்லியல் துறை கண்காணிப்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியாற்றியிருந்தார்.

கீழடி அகழாய்வு பணிகள் உலகம் அறிய முக்கிய காரணமாக இருந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு கீழடியில் ஆய்வு செய்தபோது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்களை கண்டெடுத்தன. இதுகுறித்த இறுதி அறிக்கையை தயாரிக்க ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், அவர் அசாம் மாநிலத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். பிறகு கோவாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இறுதி அறிக்கை தயாரிக்கும் பணியை பெங்களூரில் உள்ள வேறு தொல்பொருள் அதிகாரிகளிடம் வழங்கியது ஒன்றிய தொல்லியல் துறை. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்நிலையில், கோவா சரகத்தில் பணியாற்றி வந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை சென்னைக்கு மாற்றம் செய்து ஒன்றிய அரசின் தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பலரும் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “மிக நீண்ட போராட்டத்துக்குப் பின் மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறையின் தொல்லியல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

-வினிதா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

3 நிமிட வாசிப்பு

ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்திருந்த நிலம் மீட்பு!

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

9 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: திணறும் திமுக-காங்கிரஸ் கூட்டணி!

செவ்வாய் 14 செப் 2021