மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

உள்ளாட்சியில் கரன்சி வெள்ளம்: திமுகவின் முதல் கட்ட பட்ஜெட்!

உள்ளாட்சியில் கரன்சி வெள்ளம்: திமுகவின் முதல் கட்ட பட்ஜெட்!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் நடக்க இருக்கும் இந்த தேர்தலுக்காக ஆளும் கட்சி என்ற வகையில் திமுக தடபுடலாக தயாராகி வருகிறது.

ஏற்கனவே கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அறிவாலயத்தில் 9 மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், மற்றும் ஒன்றிய செயலாளர்களை சந்தித்தார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின். அப்போது, திமுக ஆளுங்கட்சியாக இருக்கும்போதிலும் இந்த ஒன்பது மாவட்டங்களில் தற்போதைய மக்கள் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி ஒன்றிய செயலாளர்களும் மாவட்ட செயலாளர்களும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட்ட கிளர்க்குகளும், பிடிஓக்களும் தற்போது திமுகவின் நிர்வாகிகள் சொல்வதைக் கேட்பதே இல்லை. அவர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது கொஞ்சம் கொஞ்சமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சுட்டிக் காட்டிய இன்னொரு பிரச்சினை.

‘நகைக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்று நாம் தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். அதுபோல பெண்களுக்கு உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் என்று நாம் தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம். இந்த இரண்டு வாக்குறுதிகளும் கிராமப்புறங்களில் திமுகவுக்கு ஆதரவு அதிகரிப்பதற்கு முக்கியமான காரணங்கள். ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் இந்த இரு வாக்குறுதிகளையும் நாம் இன்னும் நிறைவேற்றவில்லை. இதுபற்றி கிராமப்புறங்களில் மக்கள் நம்மிடம் கேட்கிறார்கள். எதிர்க்கட்சிகளும் இந்த வாக்குறுதிகளை மையமாக வைத்து தேர்தலில் பிரச்சனை எழுப்புவார்கள். நகைக் கடன்கள் வழங்குவதில் அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரணை செய்துவிட்டு பிறகு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நாம் சொல்வது அரசியல் செய்வதற்கு சரியாக இருக்குமே, தவிர கிராமப்புறங்களில் மக்களை எதிர்கொள்வதற்கு போதுமானதாக இருக்காது” என்றும் ஒன்றிய செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முதல்வரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்ட பிறகுதான் மு க ஸ்டாலின் 100% நாம் வெற்றி பெற வேண்டும் என்று உத்தரவிட்டு அனுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து திமுக 100 சதவிகிதம் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு முழு முதல் துணை கரன்சிதான். அதைப் புரிந்துகொண்டு திமுகவினர் இப்போதே ஊரக உள்ளாட்சி பட்ஜெட்டை திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் உள்ள சில திமுக பிரமுகர்களிடம் பேசினோம். மனம் விட்டு சில உண்மைகளை கூறினார்கள்.

”ஆளுங்கட்சியாக இருக்கிறோம். எங்களுக்கு ஓட்டு போட்டால் தான் மக்களுக்கு நலத் திட்டங்கள் தொடர்ந்து கிடைக்கும் என்ற பிரச்சாரம் ஒரு பக்கம் சாதகமாக இருக்கும். ஆனாலும். கிராமப்புறங்களில் திமுகவின் மீதான நம்பிக்கை அதிகப்படுத்துவதற்கு வழக்கமான கரன்சி வித்தைகளிலும் இறங்க வேண்டியுள்ளது. மேலும் சாதி,லோக்கல் செல்வாக்கு ஆகியவை உள்ளாட்சித் தேர்தலில் முக்கியப் பங்கு வகிப்பதால் பணம் இந்தத் தேர்தலில் முக்கியமான பங்கு வகிக்கிறது.

ஐயாயிரம் கவுன்சில் எனப்படும் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கும் ஐம்பதாயிரம் கவுன்சில் எனப்படும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் தேர்தலுக்கும் போட்டியிடும் திமுகவினர் தங்களது வெற்றியை உறுதி செய்வதற்காக பணத்தை செலவு செய்யவும் தயங்கவில்லை.

ஒன்றியம் என்று எடுத்துக் கொண்டால் பல ஒன்றியங்களில் 15 முதல் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் வரை இருக்கிறார்கள். சில ஒன்றியங்களில் 20க்கும் மேற்பட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் இருக்கிறார்கள். இவர்களில் வெற்றிபெறும் ஒன்றிய கவுன்சிலர்கள் இணைந்துதான் ஒன்றிய சேர்மன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 5000 ஓட்டுகள், 50 ஆயிரம் ஓட்டுகள் என்பதெல்லாம் 1996 ஆம் ஆண்டு அளவிடப்பட்ட வரையறை ஆகும். 27 ஆண்டுகளில் அந்த வாக்குகள் அதிகரித்துவிட்டன.

ஒரு ஒன்றியத்தில் 15 ஒன்றிய கவுன்சில்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஒன்றிய கவுன்சிலிலும் குறைந்தபட்சம் நாலாயிரம் முதல் ஐயாயிரம் ஓட்டுகள் உள்ளன. மூவாயிரத்து ஐநூறு முதல் நாலாயிரம் ஓட்டு வரைதான் பதிவாகும். என்னதான் ஏரியாவில் சொந்த செல்வாக்கு இருந்தாலும் ஒரு ஓட்டுக்கு 100 முதல் 200 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலுக்கு ஓட்டுக்கான பணம் மட்டும் ஆறு லட்சம் ரூபாய் செலவாகும். அதிகபட்சம் 10 லட்சம் ஆகும் வடமாவட்டங்களில் சில ஒன்றியங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மூக்குத்தி, மோதிரம் கொடுப்பதற்கும் திமுகவினரால் பட்ஜெட் போடப்பட்டு வருகிறது.

சேர்மன் வேட்பாளர் என்று கூறப்படுபவர் தன் வெற்றியை உறுதி செய்வதற்காக அதிக லீடிங் காட்டுவதற்காக ஓட்டுக்கு 500 வரைக்கும் கூட கொடுக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் தன்னை எதிர்த்து போட்டியிடும் பிற வேட்பாளர்களை ஆஃப் செய்வதற்காக அவர்களுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சேர்மன் வேட்பாளர் செலவு செய்ய வேண்டியிருக்கும். இதெல்லாம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் வரைதான்,.

கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவர்கள் மூலம் ஒன்றிய சேர்மன் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த பிராசஸ்தான் இன்னும் காஸ்ட்லியானது. ஒன்றிய கவுன்சிலர்கள் தாங்கள் தேர்தலில் செலவழித்த பணத்தை இந்த சேர்மன் தேர்தலில் எடுத்துவிடப் பார்ப்பார்கள். ஆனாலும் கட்சி அறிவித்த சேர்மனுக்கு ஓட்டு போட்டே ஆக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது. இருந்தபோதிலும் ஒன்றிய சேர்மன் பதவிக்கு அறிவிக்கப்படுபவர் தனது சக போட்டியாளர்களை திருப்திப்படுத்துவதற்கும், எதிர்காலங்களில் அவர்களால் பிரச்சினை எழாமல் இருக்கவும் இப்போதே சில செட்டில்மென்ட்டுகளை செய்ய வேண்டும். சாதி, லோக்கல் செல்வாக்கு ஆகிய காரணிகளின் அடிப்படையில் ஒன்றியத்தின் சேர்மன் பதவியைப் பிடிக்க வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒன்றரை கோடி ரூபாய் வேண்டும்.

ஒன்றிய சேர்மனுக்கே ஒன்றரை கோடி ரூபாய் தேவையென்றால் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பதவிக்கு என்னாகுமென்பதை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். இதுதான் இன்றைக்கு உள்ளாட்சியின் உள் நிலவரம்” என்கிறார்கள் கணக்கு போட்டபடியே.

உள்ளாட்சியில் அதிகார வெள்ளம் பாய வேண்டும் என்பதற்காகத்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது காந்தியின் கனவும் சுயமான உள்ளாட்சி அரசுதான். ஆனால் காந்தி கண்ட கனவில் காந்தி நோட்டுகளின் வெள்ளம்தான் பாய்ந்துகொண்டிருக்கிறது.

-வேந்தன்

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

திங்கள் 13 செப் 2021