மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

28.9 லட்சம்: மாரத்தான் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி!

28.9 லட்சம்: மாரத்தான் வேகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி!

தமிழகத்தில் ஒரே நாளில் 28.9 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி அரசு சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதன்முறையாக முன்களப் பணியாளர்களுக்கு மட்டும் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களைத் தொடர்ந்து 45 வயது மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

தமிழக அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வின் காரணமாகத் தடுப்பூசி மீதான அச்சம் நீங்கி பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வந்தனர். இதனால் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது.

இந்த நிலையில் ஒன்றிய அரசிடம் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டுமென்று அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழகத்துக்கு வழங்கப்படும் தடுப்பூசியை அனைத்து பகுதியினருக்கும் பிரித்து அனுப்பி அதனைச் செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது தமிழக சுகாதாரத் துறை.

நேற்று காலை நிலவரப்படி 3.74 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்தது.

இந்த நிலையில் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் ஒரே நாளில் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

38 மாவட்டங்களில் 40 ஆயிரம் முகாம்கள் போடப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை காட்டிலும் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதன்படி நேற்று ஒரே நாளில் 28,91,021 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதில் 21 லட்சத்து 48 ஆயிரத்து 526 பேருக்கு முதல் தவணையும், 7 லட்சத்து 42 ஆயிரத்து 495 பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. கோவை, சென்னை, திருப்பூர், தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக விருதுநகரில் 21,029 பேருக்குப் போடப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாம் குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், மாரத்தான் வேகத்தில் செயல்படும் சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியனுக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் எனது நன்றி. ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை. இதுவரை 4 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இமாலய சாதனை.

தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் போட்டுக் கொள்ளுங்கள், நம்மையும் காப்போம் நாட்டையும் காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

-பிரியா

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

திங்கள் 13 செப் 2021