அரசு பணிகளில் பெண்களுக்கு 40% ஒதுக்கீடு!

politics

அரசு பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று (செப்டம்பர் 3) மனிதவள மேலாண்மை துறையில் புதிய அறிவிப்புகளை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார்.

தமிழகத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பில் முக்கிய அம்சமாக, 100 சதவிகிதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் தகுதித் தேர்வாகக் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் பாலின சமத்துவத்தைக் கருத்தில் கொண்டு நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 30 சதவீத ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்தப்படும். இதற்குரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றால் தாய் தந்தையை இழந்தவர்கள், முதல்நிலை பட்டதாரிகள், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கொரோனா காரணமாக பணியாளர் தேர்வு முகமைகள் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானால் நேரடி நியமன வயது உச்சவரம்பு இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படும்.

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை தென்காசி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அமைக்கப்படும்.

தலைமைச் செயலக ஆய்வுக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஆய்வுக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் திடீர் ஆய்வுகள் மற்றும் விரிவான ஆய்வுகளின் பலன்களை உடனுக்குடன் பெறுவதற்கு அந்த ஆய்வு பிரிவிற்கு 15 லட்சம் ரூபாய் செலவில் மடிக்கணினிகள் மற்றும் மென்பொருட்கள் வழங்கப்படும் .

அண்ணா மேலாண்மை நிலைய வளாகத்தில் 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பணியாளர் வாடகை குடியிருப்பு அமைக்கப்படும்.

மாநில அரசுப் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் முதல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ,ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் அரசு விடுதி காப்பாளர்கள் மற்றும் முறையான பயிற்சி பெறாத அனைத்து துறை பணியாளர்களுக்கும் அண்ணா மேலாண்மை நிலையத்தில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *