மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 செப் 2021

தாம்பரம், ஆவடியில் காவல் கமிஷனர் அலுவலகங்கள்!

தாம்பரம், ஆவடியில்  காவல் கமிஷனர் அலுவலகங்கள்!

சென்னை காவல் ஆணையரகத்தைப் பிரித்து தாம்பரம், ஆவடியை தலைமையிடமாக கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று(செப்டம்பர் 13) நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் அதிமுக கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது காவலர்கள் நலம் பேணுவதில் திமுக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. திமுக ஆட்சியில் வன்முறைகள் இல்லை. சாதிச் சண்டைகள் இல்லை. மத மோதல்கள் எழவில்லை துப்பாக்கிச் சூடுகள் இல்லை அராஜகங்கள் இல்லை என்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறை தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை பெருநகர காவலில் கூட்டமான இடங்களையும் நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்கென 3 கோடியே 60 இலட்சம் செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்தப்படும்.

அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் மறைந்த காவலர்களின் வாரிசுகள் 1132 பேர் கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.

சவாலான மற்றும் முக்கிய இணையவழி குற்றங்களை புலனாய்வு செய்யவும் காவல் ஆளுநர்களுக்கு சைபர் குற்றங்களை புலனாய்வு செய்ய தகுந்த பயிற்சி அளிக்கவும் மாநில இணையதளக் குற்றப் புலனாய்வு மையம் அமைக்கப்படும்.

மெரினாவில் கடல் அலையில் சிக்கி பொதுமக்கள் உயிரிழப்பதை தடுக்க நீர்காப்பு பிரிவு என்ற புதிய பிரிவு தொடங்கப்படும். கடலோர காவல் படை ஆய்வாளர் தலைமையில் இயங்கும் இப்பிரிவில் கடலோர குழுமம் மற்றும் தீயணைப்பு படை வீரர்களுடன் ஒப்பந்த அடிப்படையில் 12 மீனவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

ரூ. 38.25 லட்சம் செலவில் 51 சிறார் மன்றங்கள் உருவாக்கப்படும்.

பொதுமக்களோடு தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்த 1,20,000 காவலர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்படும்.

சென்னை மாநகரில் மண்டல அளவில் நான்கு சைபர் குற்றக் காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

பொதுமக்கள் காவல் உயர் அதிகாரிகளை இணையதள காணொளி மூலம் சந்தித்து புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும்.

மக்களின் பிரச்சனைகளை காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிக்க ஒரு கைபேசி செயலி உருவாக்கப்படும்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய குடிமக்களின் குறைகளைக் களைய காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு அமைக்கப்படும்.

அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று தமிழகத்தில் உள்ள சிறை கைதிகளில் 700 பேர் விடுதலை பெற்றசெய்யப்படுவார்கள்.

காவல்துறையினரின் நலன்களை பாதுகாக்க காவலர்களுக்கு வழங்கப்படும் இடர்ப்படி 800 ரூபாயிலிருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

காவலர் முதல் ஆய்வாளர் வரை தங்கள் அடையாள அட்டையை காண்பித்து பேருந்துகளில் தாங்கள் பணி செய்யும் மாவட்டத்திற்குள் பயணம் செய்யலாம் இதற்காக நவீன அடையாள அட்டை வழங்கப்படும்.

காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணி காத்திட ஏதுவாகவும் தனது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர் வரை அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்.

காவலர்களுக்கு ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுவது போல இனி அவர்களின் வாழ்க்கை துணைவியாருக்கும் சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.

காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணும் பொருட்டு காவல் நிலையங்களில் உடற்பயிற்சி மேற்கொள்ள 38 மாவட்டங்கள் மற்றும் 7 மாநகரங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்க தலா ரூபாய் இரண்டு லட்சம் வீதம் ரூபாய் 90 லட்சம் வழங்கப்படும்.

காவலர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வீடு கட்டித்தரும் திட்டம் திருவாரூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். கோவை காந்திபுரத்தில் 1.4 ஏக்கர் இடத்தில் 140 காவல்துறை அதிகாரிகளுக்கான குடியிருப்புகள் ரூபாய் 54 கோடி செலவில் கட்டப்படும்.

சுற்றுலா தளங்களில் மக்களுக்கு பாதுகாப்பும் வழிகாட்டுதலும் வழங்க சுற்றுலா காவல் துறை அமைக்கப்படும்.

இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம், மீத்தேன், நியூட்ரினோ மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் எட்டு வழி சாலை திட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள், பத்திரிகையாளர்கள் மீது முந்தைய அரசால் 5,570 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை திரும்பப் பெற அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அதே போல் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் .

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நியாயமான அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா மரண வழக்கின் விசாரணையும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதி,மதம், கட்சி பார்க்காமல் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்சோ வழக்கை விரைந்து விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் தனி நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

காவலர்களின் நலனிற்காக வாரத்தில் ஒரு நாள் ஓய்வு, இடர்ப்பாடி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தமைக்காக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 13 செப் 2021