மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

குஜராத் முதல்வரான முதல் முறை எம்.எல்.ஏ.

குஜராத் முதல்வரான முதல் முறை எம்.எல்.ஏ.

குஜராத் முதல்வர் பதவியிலிருந்து விஜய் ரூபானி நேற்று (செப்டம்பர் 11) ராஜினாமா செய்த நிலையில், இன்று (செப்டம்பர் 12) அம்மாநில தலைநகர் காந்திநகரில் நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

காட்லோடியா சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவான பூபேந்திர படேல்,( 59) அகமதாபாத்தில் உள்ள மேம்நகர் நகராட்சியின் தலைவர், அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்தின் நிலைக்குழுத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.முதல்வர் பதவிக்கு பல சீனியர்கள் பெயர் பரிசீலிக்கப்பட்ட நிலையில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்ற பூபேந்திர படேல் நியமிக்கப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காட்லோடியா தொகுதியில் போட்டியிட்ட பூபேந்திர படேல், காங்கிரஸ் வேட்பாளர் சஷிகாந்த் படேலை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமானவர். பட்டிடார் சமூகத்தின் கட்வா துணை ஜாதியைச் சேர்ந்த பூபேந்திர படேல், சிவில் இன்ஜினியரிங் பட்டயப்படிப்பு படித்தவர்.

இன்று காந்தி நகரில் உள்ள குஜராத் பாஜக தலைமை அலுவலகமான ஸ்ரீ கமலத்தில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பூபேந்திர படேலின் பெயரை பதவி விலகும் முதல்வர் விஜய் ரூபானி முன் மொழிந்தார்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பூபேந்திர படேல், “என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத் முன்னாள் முதல்வரும் உத்தரபிரதேச ஆளுநருமான ஆனந்திபென் பட்டேலின் ஆசிர்வாதங்கள் எப்போதும் என்னோடு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இன்று மாலை பூபேந்திர படேல் ஆளுநரை சந்திக்கும் நிலையில், நாளை காலை குஜராத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கிறார்.

-வேந்தன்

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

4 நிமிட வாசிப்பு

அதிமுகவில் சசிகலா: பாஜகவின் பொன் விழா மெசேஜ்!

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

3 நிமிட வாசிப்பு

தொடர் சிகிச்சையில் திமுக அமைச்சர்!

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

8 நிமிட வாசிப்பு

போலீசாரின் மாமூல் லிஸ்ட்!

ஞாயிறு 12 செப் 2021