மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

இன்று நீட் தேர்வு, நாளை தீர்மானமா?: எடப்பாடி பழனிசாமி

இன்று நீட் தேர்வு, நாளை தீர்மானமா?: எடப்பாடி பழனிசாமி

நாளை சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலினும், சுகாதாரத் துறை அமைச்சர் ம.சுப்பிரமணியனும் கூறிய நிலையில், இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட மாணவர் தனுஷின் உடலுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே நீட் தேர்வு மற்றும் மாணவர் தற்கொலை குறித்து அறிக்கை வெளியிட்ட அவர்,

“நீட் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்ய நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவினுடைய பரிந்துரைகளைச் செயல்படுத்துவதன் மூலம், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தி.மு.க. அரசு குறிப்பிடவில்லை.

அதே சமயத்தில், உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவிற்கு எதிரான மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில், ஏதோ, அன்றே இந்த அரசு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டது போல ஸ்டாலின் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது, நீட்டை ஒழிப்பதற்கான வழிமுறைகள் எங்களுக்குத் தெரியும் என்று பொதுக்கூட்ட மேடையில் வாய்ச்சவடால் அளித்தவாறு, கேலிச் சிரிப்பு சிரித்தபடி, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்தே நீட்டிற்கு எதிரானதுதான் என்று, மாணவச் செல்வங்களை வானத்தையே வில்லாக வளைப்போம் என்பது போல் ஏமாற்றும் விதத்தில் பேசியதன் விளைவு, நாம் இன்று மேலும் ஒரு மாணவச் செல்வத்தை நீட்டிற்கு தாரை வார்த்துள்ளோம்.

ஒரு அரசியல் கட்சியின் பொறுப்பான தலைவர், சமுதாயத்தில் எந்த ஒரு கருத்தையும் சொல்லும்போதும், அது சமுதாயத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும், அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து கூற வேண்டும்.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா?, நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்குச் சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது தனுஷின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். மாணவச் செல்வங்கள் இதுபோன்ற முடிவுகளை இனி எடுக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல், இன்று (12.9.2021) நீட் தேர்வு நடைபெறுகின்ற நிலையில், நாளை சட்டமன்றத்தில் நீட் தேர்வை எதிர்த்து இந்த அரசு தீர்மானம் கொண்டுவரப் போவதாகக் கூறியுள்ளனர்.

இனியாவது மாணவச் செல்வங்களுக்கு நீட் தேர்வு பற்றிய உண்மையான நிலையை உணர்த்த வேண்டும். மாணவர் தனுஷை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 12 செப் 2021