மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

இதுதான் குஜராத் மாடலா? காங்கிரஸ் கேள்வி!

இதுதான் குஜராத் மாடலா? காங்கிரஸ் கேள்வி!

பாஜகவின் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது பதவியை நேற்று (செப்டம்பர் 11) ராஜினாமா செய்த பிறகு, அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்க பாஜக இன்று அம்மாநிலத்தில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கும் நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் பாஜக முதல்வர் விஜய் ரூபானி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். ரூபானியை வைத்துக்கொண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்று வந்த ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில்தான் இந்த ராஜினாமா கேட்டுப் பெறப்பட்டது என்கிறார்கள்.

இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 12) மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலக் கட்சி தலைமை அலுவலகமான ஸ்ரீ கமலத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி விவாதிக்கிறார்கள்.

பதவியிலிருந்து விலகிய விஜய் ரூபானிக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்வதன் மூலம் குஜராத்தில் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கில், ஒன்றிய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை பாஜக தலைமை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. “நான் இப்போதைய நிலைமை குறித்து குஜராத் பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். பின்னர் மத்திய தலைமை ஒரு முடிவை எடுக்கும்" என்று ஒன்றிய அமைச்சரும் குஜராத்தின் பாஜகவின் மேலிடப் பார்வையாளருமான பிரஹலாத் ஜோஷி கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ளது காங்கிரஸ்.

.குஜராத்தில் கொரோனா தொற்றுக் காலத்தில் தனது தவறான நிர்வாகத்தை மறைக்க ரூபானியை பாஜக பலிகடா ஆக்கிவிட்டது. இந்த அரசாங்கம் அனைத்து முனைகளிலும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்துவிட்டதை இது காட்டுகிறது. இதுதான் குஜராத் மாடல். குஜராத்தில் உள்ள மாநில அரசு டெல்லியில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்டது. ஏற்கனவே ஆனந்திபென் தனது பதவிக்காலத்தை முடிக்காமல் ராஜினாமா செய்யும்படி கட்டளையிடப்பட்டார். , அதேபோல், விஜய் ரூபானிக்கும் அவரது முழு பதவிக்காலம் அனுமதிக்கப்படவில்லை. இது குஜராத்தில் பாஜக அரசின் நிர்வாகத் தோல்வியை அக்கட்சியே ஒப்புக் கொண்டதை வெளிப்படையாகக் காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அமித் சவ்தா.

இதேபோல், ஆம் ஆத்மி கட்சி குஜராத் பொதுச் செயலாளர் மனோஜ் சொரத்தியா, "குஜராத்தில் 27 வருட ஆட்சிக்குப் பிறகு, பாஜக தனது முதல்வரை மாற்றித்தான் தேர்தலை எதிர்கொள்கிறது என்றால் இது அக்கட்சியின் நிர்வாகத் தோல்வியைதான் காட்டுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

பாஜக குஜராத் சட்டமன்றக் கூட்டம் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. பாஜக மேலிடப் பார்வையாளர்களான நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் ஜோஷி மற்றும் பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக் ஆகியோர் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கலந்துகொள்ளக் கூடும் என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.

-வேந்தன்

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

ஞாயிறு 12 செப் 2021