நீட் தேர்வு: சேலம் மாணவர் தற்கொலை!

politics

ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை, ஆண்டுதோறும் மாணவர்கள் போராட்டங்களுக்கு மத்தியில் தான் எழுதுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியும், பலனளிக்காததால் திட்டமிட்டபடி இன்று (செப்டம்பர் 12) நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது.

இன்று மதியம் 2 மணிக்குத் தொடங்கும் இந்த தேர்வை நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். தமிழகத்தில் 1.10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வைச் சந்திக்கின்றனர்.

ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் தேர்வு நடைபெறுகிறது. 202 நகரங்களில் 3,855 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 100க்கும் மேற்பட்ட மையங்கள் தேர்வுக்காக தயாராக உள்ளன.

இதற்காக மாணவர்கள் ஒரு மணிக்கே தேர்வு மையத்துக்கு வரவேண்டும். 1.30 மணியளவில் தேர்வு மைய கேட் பூட்டப்படும். பின்னர் மாணவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவை சரிபார்த்து 2 மணிக்குத் தேர்வு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஷூ அணியக் கூடாது. சிலிப்பர் மட்டுமே அணிய வேண்டும். வெளிர் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும். முழு கை சட்டைக்கு அனுமதியில்லை. கேமரா, செல்போன், எலக்ட்ரானிக் வாட்ச் போன்றவற்றுக்கு அனுமதியில்லை. ஒருவேளை மாணவர்கள் வழக்கமான உடை மற்றும் அணிகலன் அணிந்து வந்திருந்தால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.

என்.95 மாஸ்க் அணிந்திருக்க வேண்டும், ஹால்டிக்கெட், 50 மி.லி சானிடைசர், தண்ணீர் தெளிவாகத் தெரியக்கூடிய வாட்டர் பாட்டில் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவராக வேண்டும் என கனவுகளுடன் மாணவர்களும் தேர்வுக்கு தயாராகித் தேர்வு மையத்துக்குச் சென்று காத்திருக்கின்றனர்.

இதனிடையே, சேலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்துகொண்டார்.

2017ல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா தொடங்கி, 2018 இல் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா, திருச்சி திருவள்ளூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனி மேடு பகுதியைச் சேர்ந்த மோனிசா, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா, கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கிடசாமி சாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ ஆகியோர் வரிசையில் தற்போது சேலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்தவர் சிவக்குமார், விவசாயி. இவரது இரண்டாவது மகன் தனுஷ்(19) மேட்டூரில் உள்ள தனியார் பள்ளியில் 2019-ஆம் ஆண்டு பிளஸ் 2 முடித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதித் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாகத் தேர்வுக்குத் தயாராகி வந்தார்.

மேச்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இவருக்குத் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று (செப்டம்பர் 11) தனது நண்பர்களிடம் நீட் தேர்வில் மூன்றாவது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் தனது மருத்துவர் கனவு வீணாகிவிடும் என வருத்தத்துடன் பேசியுள்ளார் தனுஷ்.

இந்நிலையில், இன்று (செப்டம்பர் 12) அதிகாலை அவரது தாயார் சிவஜோதி எழுந்து பார்க்கையில், மகன் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதனால் மீளா துயரில் உள்ளனர் தனுஷின் பெற்றோர்கள், தனிஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கருமலைக்கூடல் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு நடைபெறுமா? நடைபெறாதா? நடைபெறும் எனில் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக அறிவுறுத்தி முறையான பயிற்சி அளித்து குழப்பத்தில் உள்ள மாணவர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை மூலமாகவும், ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வலியுறுத்தினேன்.

அதற்குச் சரியான பதிலைக் கூறி மாணவர்களுக்கு முறையான பயிற்சியளித்து இருந்தால் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்

19 வயது தனுஷின் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம். தனுஷை மரணக்குழியில் தள்ளியிருக்கும் திமுக அரசே, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவாயிற்று? ரகசியம் வைத்திருப்பதாகச் சொன்னீர்களே,அதை எப்போது செயல்படுத்துவீர்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழக அரசு விரும்பாத ஒரு நிகழ்வாகத்தான் நீட் தேர்வு நடக்கிறது. போதுமான கால இடைவெளி இல்லாததால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாமல் போய்விட்டது. சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் இறுதி நாளான செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதுபோல, அந்த தீர்மானத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, போதுமான அளவுக்கு அழுத்தமும், வலியுறுத்தலும் தந்து, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முதல்வர் கட்டாயம் விலக்கு பெற்றுக் கொடுப்பார்.

நீட் தேர்வில் கடந்த முறை நடந்தது போல, மிக கடுமையான போக்கை காட்டி, மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்காமல் இந்த முறை, மிகமென்மையான போக்கிலே இத்தேர்வு நடைபெறும். மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வது சரியான முடிவாக இருக்காது” என்று தெரிவித்தார்.

இந்த சூழலில் மநீம தலைவர் கமல், “ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!” என்று பதிவிட்டுள்ளார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *