மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

கொடநாடு வழக்கு: பன்னீர் பற்றி எடப்பாடியின் குமுறல்!

கொடநாடு வழக்கு:  பன்னீர் பற்றி எடப்பாடியின் குமுறல்!

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மேல்விசாரணை நடத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை அனுமதி அளித்து விட்டன. இந்த நிலையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஏற்கனவே விசாரிக்கப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அதிமுக ஆட்சியிலேயே புகார்கள் எழுந்தன. ஆனால் புகார் சொன்ன பத்திரிக்கையாளர் மேத்யூஸை டெல்லி சென்று அப்போதைய தமிழ்நாடு போலீஸ் கைது செய்தது.

இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுவதை முதன்முதலாக ஆகஸ்ட் 18ஆம் தேதி சட்டமன்றத்தில் போட்டுடைத்தார் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி. ‘கொடநாடு வழக்கில் என்னையும் சேர்க்க சதி நடக்கிறது’ என்று அவர் சட்டமன்றத்தில் கூறிவிட்டு அதிமுக உறுப்பினர்களோடு வெளிநடப்பு செய்தார். வெளியே வந்து பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த வழக்கில் விசாரணையை வேகமாக நடத்தி விரைவில் முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு அதன்படி விசாரணை வேகமாக நடந்து முடிய இருக்கும் நிலையில்... இப்போது திமுக அரசு என்னை பழிவாங்குவதற்காக இந்த வழக்கில் மறுவிசாரணை என்கிறது. நீதிபதிகளின் உத்தரவுக்கு மாறாக இந்த வழக்கை தாமதப்படுத்தி அதில் அதிமுகவினரை சேர்க்க சதி நடக்கிறது” என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆளுநரை சந்தித்து திமுக அரசின் பழிவாங்கும் போக்கை எதிர்த்து புகார் கொடுத்தார் எடப்பாடிபழனிசாமி. அப்போது அவருடன் அதிமுகவினர் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ் பி வேலுமணி, கேபி முனுசாமி உள்ளிட்டோர் இருந்தனர்.

அரசியல் ரீதியாக இப்படி என்றால் சட்டரீதியாக இந்த மேல் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி கோவையைச் சேர்ந்த அனுபவ் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். எடப்பாடி பழனிசாமி பேட்டிகளில் கூறிய விஷயங்கள்தான் அனுபவ் ரவியின் வழக்கின் கோரிக்கையாக இருந்தது.

அனுபவ் ரவியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து கொடநாடு கொலை வழக்கை விசாரணை செய்ய அனுமதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரவி உச்ச நீதிமன்றத்துக்கு அப்பீல் சென்றார். அங்கேயும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதால் இப்போது வேகவேகமாக விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தன்னை சந்தித்து வரும் சில பிரமுகர்களிடம் இந்த விவகாரத்தில் ஓ.பன்னீர் செல்வம் தனக்கு ஆதரவாக இல்லை என்றும், அவர் சசிகலாவுடன் சேர்ந்துவிட்டார் என்றும் வெளிப்படையாகவே எடப்பாடி குமுறியிருக்கிறார்.

ஊடகங்களில் அதிமுகவினர் விவாதங்களில் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று கடந்த ஜூலை மாதம் அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைவர்களை இழிவுபடுத்தும் வண்ணம் விவாத தலைப்புகள் வைக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தனர். அதன்படி அதிகாரப்பூர்வமாக அதிமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் டிவி விவாதங்களில் கலந்து கொள்வதில்லை. ஆனால் சமீப நாட்களாக அதிமுக ஆதரவு போக்கு கொண்ட அதே நேரம் அதிமுக உறுப்பினர்கள் அல்லாத சிலர் டிவி விவாதங்களில் பங்கேற்று அதிமுகவுக்கு ஆதரவான கருத்துக்களை எடுத்து வைத்து வருகின்றனர். குறிப்பாக கொடநாடு வழக்கு தொடர்பான விவாதங்களில் இவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்துக்களை வாதங்களை முன் வைத்து வருகின்றனர்.

அப்படிப்பட்ட சிலர் கடந்த வாரம் சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.

விவாதங்களில் தான் எடுத்து வைக்கும் கருத்துக்கள் தொடர்பாக அவர்கள் எடப்பாடியிடம் தெரிவித்தபோது, ‘பார்த்துக்கிட்டிருக்கேன். நல்லா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார். அப்போது அந்த பிரமுகர்களிடம் தனித்தனியாக சில விஷயங்களை வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் எடப்பாடி.

“திமுக அரசு என்னை கொடநாடு கொலை வழக்கில் சிக்க வைத்து அத்தோடு என் அரசியல் வாழ்க்கையை முடித்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது. அதற்காகத்தான் அவர்கள் இவ்வளவு விரைவாக இந்த விசாரணைகளை எல்லாம் தூசு தட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என் கட்சியிலேயே சிலர் இதற்கு துணையாக இருக்கிறார்களோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

கொடநாடு கொலை வழக்கில் என்னைக் குறிவைத்து திமுக அரசு வேகமாக செயல்படும் நிலையில் ஓ.பன்னீர் செல்வம் அதுபற்றி கடுமையான, திடமான, திட்டவட்டமான வார்த்தைகளில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு.

ஆனால் அதற்கு மாறாக கருணாநிதிக்கு மெரினாவில் நினைவிடம், துரைமுருகனின் ஐம்பது ஆண்டுகால சட்டமன்றப் பணி என்று திமுக தலைவர்களைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார். முதல்வரின் அறிவிப்புகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார். அவர் மீது திமுக எம்.எல்.ஏ. வீட்டு வசதி வாரியம் பற்றி சொன்ன புகாரை ஊடகங்கள் எதுவும் பெரிதுபடுத்தாமல், கொடநாடு வழக்கை பற்றியே அதிகமாக பேசுகிறார்கள். இதெல்லாம் எப்படி என்று எனக்கு புரியவில்லை.

பன்னீர்செல்வம் முழுதாக சசிகலாவுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டார் என்று எனக்கு தகவல்கள் வந்திருக்கின்றன. ஆனால், என்னை சமாதானப்படுத்துவதற்காக தான் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் மீண்டும் கட்சியில் கிடையாது என்று சசிகலாவுக்கு எதிராக டெல்லி சென்று வந்த பிறகு ஒரு பேட்டியை கொடுத்து வைத்தார். எல்லாவற்றையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவந்து அதிமுகவை கைப்பற்றுவேன்”என்று அவர்களிடம் உறுதியாக கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 12 செப் 2021