மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

ராணுவத்தில் இருந்து கூட ஆளுநர்கள் வருகிறார்கள்: அண்ணாமலை

ராணுவத்தில் இருந்து கூட ஆளுநர்கள் வருகிறார்கள்: அண்ணாமலை

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 9 ஆம் தேதி இரவு உத்தரவிட்டது. தமிழகத்தின் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப்புக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்த விமர்சனங்களுக்கு தமிழக பாஜக தலைவர் பதிலளித்திருக்கிறார்.

ஆர்.என். ரவியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்தது பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி சந்தேகம் தெரிவித்திருந்தார்.

“சிறந்த கல்வியாளர்கள் , விஞ்ஞானிகள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பது தான் சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர் ஆர்.என்.ரவி. இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகின்றேன்” என்று கூறியிருந்தார் அழகிரி.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களிடம் பேசுகையில், “ காங்கிரஸ் கட்சியின் ஐயம் புறந்தள்ளக் கூடியதாக இல்லை. அவர் ஏற்கனவே நாகாலாந்தில் என்ன செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தினார் என்பது இன்று விவாதிக்கப்படுகிறது. அவர் ஐபி என்ற உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றியபோது குறிப்பாக மொழி உணர்வு, தேசிய இன உணர்வு ஆகியவற்றை முளையிலேயே கிள்ளி எறியக் கூடிய வகையில் செயல்படக் கூடியவர் என்ற முத்திரை அவர் மீது உண்டு. எனவே திட்டமிட்டே அவர் தமிழக ஆளுநராக மாற்றப்பட்டிருக்கிறார் என்ற அச்சத்தை காங்கிஸ் பேரியக்கம் வெளியிட்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகளும் அந்த அடிப்படையில்தான் அதை பார்க்கிறது. எனவே தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பவரை திரும்பப்பெற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநர் வரும் முன்னதாகவே அவரைப் பற்றி வெளியாகும் இக்கருத்துகளுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (செப்டம்பர் 11) மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலளித்தார்.

“தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் அவர்களின் பதவிக் காலம் செப்டம்பரில் முடிவடைகிறது. அதையடுத்து குடியரசுத் தலைவர் மாளிகை அவரை பஞ்சாப்புக்கு மாற்றியிருக்கிறார்கள். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி 1976 கேடர் போலீஸ் ஆபீசராக இருந்து பணி ஓய்வு பெற்று உடனடியாக ஆளுநர் ஆக்கப்படவில்லை. அவர் பணி ஓய்வு பெற்ற பிறகு நாகாலாந்தில் அரசுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடத்தக் கூடியவராக மத்திய அரசு நியமித்தது. அதை அவர் திறமையாக செய்ததை அடுத்து அவர் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அப்போது மக்கள் அதை வரவேற்றார்கள். அதன் பின் இப்போது தமிழக ஆளுநராக அவர் குடியரசுத் தலைவர் மாளிகையால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் என்ன தவறை கே.எஸ். அழகிரி கண்டுபிடித்தார்? உத்தரகாண்டில் போட்டிருக்கக் கூடிய புதிய ஆளுநர் கூட டெபுடி ஆர்மி சீஃப் ஆக இருந்தவர். இதுபோல பல துறைகளில் சாதனை படைத்தவர்களை ஆளுநராக நியமிக்கிறார்கள். அழகிரியைப் பொறுத்தவரை ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் ஆளுநர் பதவி வகிக்க தகுதி இல்லை என்கிறாரா? முதல்வர் வாழ்த்துகளை சொல்லியிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். இந்தநிலையில் அழகிரி போன்றவர்கள் ஆளுநர் நியமனத்தில் காழ்ப்புணர்ச்சியோடு அரசியல் செய்வதை கண்டிக்கிறேன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்லுவார்கள். அதுபோல பேசுகிறார்கள்” என்று பதிலளித்துள்ளார் அண்ணாமலை.

ராணுவத்தில் லெப்டினென்ட் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்ற குர்மித் சிங் உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். அதைக் குறிப்பிட்டே அண்ணாமலை தமிழ்நாடு ஆளுநர் பற்றிய சர்ச்சைக்கு விளக்கம் அளித்திருக்கிறார். உளவுத் துறை அதிகாரியை ஆளுநராக நியமனம் செய்ததற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ராணுவத்தில் இருந்தே ஆளுநரை நியமித்திருக்கிறார்கள் என்று பதிலளித்துள்ளார் அண்ணாமலை.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 12 செப் 2021