மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

‘நீட்’டுக்கு எதிரான தீர்மானம்: அமைச்சர் மா.சு

‘நீட்’டுக்கு  எதிரான தீர்மானம்: அமைச்சர் மா.சு

இன்று நாடு முழுவதும் இளங்கலை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில், நாளை சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வருவார் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று( செப்டம்பர் 11) ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பெரும்பாக்கத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர், சிமென்ட் தரை, கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி, பெண் செவிலியர்கள் பணியமர்த்தல், பெண் செவிலியர் தங்குமிடம், மகப்பேறு படுக்கை அறை வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் கவனத்துக்குக் கொண்டு சென்று இவ்வாண்டிலேயே பெண் செவிலியர் பணி, குடியிருப்பு, சுற்றுச்சுவர் போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் திட்ட மதிப்பீடு செய்வார். மிக விரைவில் இம்மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 40,000 தடுப்பூசி முகாம்கள் அமைத்து 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் செலுத்தாமல் உள்ள 18 லட்சம் பேருக்கு சிறப்பு கவனம் செலுத்தி தடுப்பூசிகள் செலுத்தப்படும். மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கிய ஒரு மாதத்தில் மட்டும் 4 லட்சத்து 7,000 பேர் பயன் அடைந்துள்ளனர். விரைவில் அனைத்து இடங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்” என்று கூறினார்.

நீட் தேர்வு குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாடு அரசு விரும்பாத, முதல்வர் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிகழ்வாகத்தான் இன்று நீட் தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சட்டமன்ற முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படும். அந்த தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஏற்கனவே கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புக்கு தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பி, அவரிடத்தில் எந்தவிதமான அழுத்தமும் தராமல் விட்டது போல், இல்லாமல் நிச்சயம் முதலமைச்சர் இந்தத் தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி, போதுமான அழுத்தம் தந்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்று தருவார் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. மேலும் கடந்த காலம் போல தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு சோதனை என்ற பெயரில் அழுத்தம் தராமல் மென்மையான முறையில் தேர்வு நடைபெறும்” என்று கூறினார்.

நேற்று முதுகலை நீட் தேர்வு முடிவடைந்த நிலையில், நாடு முழுவதும் இன்று (செப்டம்பர் 12) இளங்கலை நீட் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 889 பேர் எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 33 மையங்களில் 17,996 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வானது மதியம் 2 மணிக்கு தொடங்கி 5 மணிவரை நடைபெறும்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 12 செப் 2021