மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 12 செப் 2021

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது?: அமைச்சர் கே.என்.நேரு

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் எப்போது?: அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் தேதி செப்டம்பர் 13ஆம் தேதியன்று அறிவிக்கப்படும். நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடக்க இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் பிச்சாண்டவர்கோவில் ஊராட்சியில் அய்யன் வாய்க்கால் - கொள்ளிடக்கரை இடையே அடர்வனக் காடுகள் உருவாக்கம் முறையில் 4 லட்சம் மரக் கன்றுகளை நடும் பணிகளைத் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (செப்டம்பர் 11) தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூரில் ரூ.3.07 கோடி செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, “தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் தேதி குறித்து நாளை (செப்டம்பர் 13) தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் 30 நகராட்சிகளும் 6 மாநகராட்சிகளும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு வார்டு மறுவரையறை பணிகள் நடைபெற்று வருகிறது. மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறை செய்யப்படுகிறது. 100 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் மீண்டும் வரையறை செய்து அறிவிக்க வேண்டும். அடுத்த அறிவிப்புக்கு 30 நாள் கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆட்சேபனைக்கான கால அவகாசமே 130 நாட்கள் ஆகிவிடும் என்பதால் வரையறை பணி தாமதமாகிறது. அதனால்தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போகிறது. வேறு ஒன்றும் இல்லை. மாநகராட்சி, நகராட்சித் தேர்தல் நடக்க இன்னும் நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும்.

மாநகராட்சி, நகராட்சி விரிவாக்கத்தில் சேர விரும்பும் கிராம ஊராட்சிகள் சேர்த்துக் கொள்ளப்படும். மாநகராட்சியை ஓட்டிய பகுதிகளுக்கு பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாநகராட்சியோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியுடன் ஊராட்சிகள் இணைய ஊராட்சி மன்றத் தலைவர் சம்மதம் கொடுத்தால் மட்டுமே அந்த ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படும். விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தவில்லை. விரிவாக்கத்தில் கிராம ஊராட்சிகள் இணைக்கப்பட்டாலும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் பதவிக் காலம் முழுவதும் பதவியில் இருப்பார்கள்” என்று கூறினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 12 செப் 2021