மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

குஜராத்தில் தடுமாறும் பாஜக- முதல்வர் ராஜினாமா பின்னணி!

குஜராத்தில் தடுமாறும் பாஜக- முதல்வர் ராஜினாமா பின்னணி!

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் தற்போது பதவி வகித்த பாஜக முதல்வர் விஜய் ரூபானி இன்று (செப்டம்பர் 11) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குஜராத் மாடல் என்று பாஜகவினர் சிலாகிக்கும் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள 15 மாதங்கள் இருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் பாஜகவின் தேசிய தலைமை உத்தரவின் பேரில் ராஜினாமா செய்திருக்கிறார். இது நாடு தழுவிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் சி.ஆர்.பாட்டீல், துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோரின் பெயர்கள் புதிய முதலமைச்சர் பதவிக்கான பட்டியலில் இருக்கின்றன. குஜராத் மாநில பாஜக துணைத் தலைவர் கோர்தன் ஜடாஃபியா மற்றும் ஒன்றிய மீன்வள அமைச்சரவை, கால்நடை பராமரிப்பு மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல்.

நாட்டையும், மாநிலத்தையும் பாஜகவே ஆளும் நிலையில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக இப்படி தடுமாற என்ன காரணம்?

“ரூபானி கடந்த மாதம் தனது 65 ஆவது வயதை எட்டினார். பாஜக வழிகாட்டும் குழுவின் விதிப்படி அவருக்கு முதல்வர் பதவியில் இருப்பதற்கு வயது வரம்பு இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவரது தலைமையில் குஜராத்தில் அடுத்த தேர்தலை எதிர்கொள்வதில் கட்சிக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை.

கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் கூட, குஜராத்தில் காங்கிரஸ் வலிமையான செயல்திறனை வெளிப்படுத்தியது. பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் மிக நெருக்கமான போட்டி நிலவியது. பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரமே குஜராத்தில் பாஜகவை காப்பாற்றியது இதேபோல .

குஜராத்தில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக பாஜகவே ஆட்சியில் உள்ளது. ஆனால் தற்போதைய விஜய் ரூபானி ஆட்சியில் மக்கள் கடுமையாக அதிருப்திக்கு ஆளாகியிருப்பதும், பல சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு சரியில்லை என்றும் டெல்லிக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது.

இதன் அடிப்படையில் பாஜக மூத்த தலைவரும், குஜராத் பொறுப்பாளருமான பூபேந்தர் யாதவ் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல்.சந்தோஷ் ஆகியோர் கடந்த சில மாதங்களாக கட்சியின் நிலைமையை விரிவாக ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ரூபானி ஒரு வெகுஜன வாக்கு வங்கியைக் கொண்ட தலைவர் இல்லை என்று ரிப்போர்ட் அளித்துள்ளனர்.

ரூபானியின் கீழ் உள்ள பாஜக குஜராத்தில் கொரோனா நிலவரத்தை கையாள்வதில் மக்களின் கோபத்தை சம்பாதித்துள்ளது.குஜராத்தின் நகர்ப்புறங்களில் எல்லாம் பாஜக மக்களின் எதிர்ப்பைப் பெற்றுள்ளது என்றும் அந்த ஆய்வு ரிப்போர்ட் அளித்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே 2017 சட்டசபை தேர்தலுக்கு 15 மாதங்களுக்கு முன்பு, ஆனந்திபென் பட்டேலுக்குப் பதிலாக, ரூபானி முதல்வராக நியமிக்கப்பட்டார். இப்போது அதே குஜராத் மாடலில் ரூபானி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். தேர்தலுக்கு 15 மாதங்கள் இருக்கும் நிலையில் நிலைமையை சரிசெய்துவிடலாம் என்ற தேசிய தலைமையின் நம்பிக்கையின் பேரிலேயே இந்த ராஜினாமா கேட்டுப் பெறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக என்ற கட்சியின்,பாஜகவின் ஆட்சியும் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான அத்தாட்சிதான் விஜய் ரூபானியின் ராஜினாமா.

கடந்த ஆறு மாதங்களில் உத்தரகாண்ட், கர்நாடகா ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் முதல்வர்கள் மாற்றப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் முதல்வர் பாஜகவால் மாற்றப்படுகிறார்.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 11 செப் 2021