மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 செப் 2021

வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது: முதல்வர் உறுதி!

வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது: முதல்வர் உறுதி!

வெறும் அறிவிப்போடு எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிப்பேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 11) தொடங்கி வைத்தார். இதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அறநிலைய துறை முதன்மை செயலர், ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு விளக்கமளித்த பின் சட்டமன்றத்தில் இதுவரை யாரும் செய்யாத,கேள்விப்படாத 120 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் வெளியிட்டார். அதில் ஒன்றான,ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,950 கோயில்களை சார்ந்த அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியர்கள்,பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன். இதனால்,அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.13 கோடி செலவாகும். மன்னிக்கவும் இதனை செலவு என்று சொல்ல விரும்பவில்லை. இதன்மூலம், 13,000 குடும்பங்கள் வாழ்வு பெறுகிறார்கள்.

நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்,இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி பணியாற்றுகிறார் என்று உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே,அவரை சேகர் பாபு என்று அழைப்பதை விட ‘செயல் பாபு’ என்றே அழைக்கலாம். சட்டமன்றத்தில் இந்த திட்டத்தை அறிவித்து ஒரு வார காலமே ஆகிறது. இன்னும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவு பெறவில்லை. அதற்குள்ளேயே ஒரு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்றால் அது இந்த திட்டம்தான். ‘எள் என்றால் எண்ணெய்யாக இருப்பார்கள்’ என்று கூறுவது வழக்கம் ஆனால்,சேகர்பாபு எள் என்று சொல்வதற்கு முன்கூட்டியே எண்ணெய்யாக நிற்க கூடியவர்.

சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் 13ஆம் தேதிக்குப் பிறகு படிப்படியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. வெறும் அறிவிப்புடன் எந்த திட்டமும் நின்றுவிடாது. அனைத்து திட்டங்களையும் நானே மாதம்தோறும் கண்காணிக்க உள்ளேன். அமைச்சர்களையும். அதிகாரிகளையும் நானே நேரடியாக கண்காணிக்க உள்ளேன். ஒவ்வொரு திட்டத்துக்கும் முன்னுரிமை தந்து அதையெல்லாம் நிறைவேற்றும் முயற்சியில் நிச்சயம் நான் ஈடுபடவுள்ளேன். அனைத்துத் துறைகளையும் முந்திவிட்டு 'செயல்பாபு' தன் துறை திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்” என்று கூறினார்.

-வினிதா

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் ...

3 நிமிட வாசிப்பு

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

புதுச்சேரி எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

5 நிமிட வாசிப்பு

புதுச்சேரி  எம்.பி. பதவி: பாஜக பெற்ற பின்னணி!

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன? ...

13 நிமிட வாசிப்பு

திமுக எம்.பியின் ஆலைத் தொழிலாளி கொல்லப்பட்டாரா? நடந்தது என்ன?

சனி 11 செப் 2021