கருணாநிதியிடம் பதவி கேட்டாரா எம்.ஜி.ஆர்? எம்.ஜி.ஆரை அவமதித்தாரா ஜெயலலிதா?

politics

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ‘தலைவி’ படம் நேற்று (செப்டம்பர் 10) வெளியானது.

இப்படத்தின் நாயகியும் ஜெயலலிதாவாக நடித்துள்ளவருமான கங்கனா ரணாவத் ஜெ. நினைவிடத்துக்கே சென்று மரியாதை செலுத்தியபின் படம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இப்படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஜெயக்குமார் பேசும்போது, “ பொதுவாகவே தியேட்டர்களுக்கு சென்று நான் படம் பார்ப்பதில்லை. ஆனால் அம்மாவின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட படம் என்பதால் முதல் நாளிலேயே படம் பார்த்தேன். துணிச்சல், அம்மாவின் அறிவு, ஆணாதிக்கத்துக்கு இடையே பெண்களும் சாதிக்க முடியும் என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டியிருக்கிறது.

ஆனால் அதே நேரத்தில் வரலாறு வரலாறாக இருக்க வேண்டும். அதை திரித்துக் கூறுவது ஏற்க முடியாது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்றைக்குமே பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. 1967 இல் குண்டடிபட்டு எம்.ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது அந்த போஸ்டர்கள்தான் மிகவும் பிரபலமானது. அண்ணா கூட சொன்னார், ‘தம்பி உன் திருமுகத்தைக் காட்டினாலே போதும்’ என்று சொன்னார். அன்று அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் வெற்றிபெற்றது. அப்போதே எம்.ஜி.ஆருக்கு மந்திரிபதவி தரவேண்டும் என்று அண்ணா விரும்பியபோது எம்.ஜி.ஆர். அதை மறுத்துவிட்டார். ‘நான் திரைத்துறையில் இருக்கிறேன். எனக்கு மந்திரி பதவி மீது ஆசையில்லை. அதனால் சட்டமன்ற உறுப்பினராக மட்டுமே இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.

ஆனால், அண்ணாதான் அன்றைக்கு, கேபினட் அந்தஸ்துக்கு இணையாக சிறுசேமிப்பு துணைத் தலைவர் என்ற புதிய பதவியை உருவாக்கி எம்.ஜி.ஆருக்கு கொடுத்தார். அதுவரை சிறுசேமிப்பு தலைவராக முதல்வர் இருந்தார். துணைத் தலைவர் என்ற பதவியே இல்லை. ஆனால் எம்.ஜி.ஆருக்காக அண்ணா அந்த புதிய பதவியை உருவாக்கிக் கொடுத்தார். அந்தப் பொறுப்பை கூட அண்ணா சொன்னதால் வாங்கிக் கொண்டார்.

அண்ணா மறைவுக்குப் பின் முதல்வர் யார் நெடுஞ்செழியனா, கருணாநிதியா என்ற நிலை இருந்தபோது எம்.ஜி.ஆர்.தான் கருணாநிதி பெயரையே முதல்வர் பதவிக்கு முன் மொழிந்தார். ஆனால் இப்படத்தில் எம்.ஜி.ஆர்.ஏதோ மந்திரி பதவி கேட்பது போலவும் கருணாநிதி அதை மறுப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது உண்மையில்லை. அந்தக் காட்சியை நீக்க வேண்டும். பதவிக்கு ஆசைப்படாத எம்.ஜி.ஆரை பதவி கேட்டதாக காட்சிப்படுத்தியிருப்பது வரலாற்றைத் திரிக்கும் செயல். எந்தக் காலத்திலும் கருணாநிதியிடம் எம்.ஜி.ஆர். பதவி கேட்டதில்லை” என்று கூறினார் ஜெயக்குமார்.

மேலும், “தலைவரை அம்மா சிறுமைப்படுத்தியதாகவும் சில இடங்களில் காட்டப்பட்டுள்ளது. ஒரு ஷூட்டிங்கில் அம்மா எல்லாருக்கும் வணக்கம் வைத்துவிட்டு, ஒரு நாய்க்கும் வணக்கம் வைத்துள்ளதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது. அதையும் நீக்க வேண்டும். இது நடக்காத விஷயம்.

அதேபோல தலைவர் வரும்போது எல்லாரும் நின்றிருப்பது போலவும், அம்மா மட்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதையும் நீக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் ஜெயக்குமார்.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *