மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

பொருநை அரும்பொருளகம் - பன்னாட்டு நாகரிகத்தின் தொட்டில்!

பொருநை அரும்பொருளகம் - பன்னாட்டு நாகரிகத்தின் தொட்டில்!

கப்பிகுளம் ஜெ.பிரபாகர்

ஆய்வுகளும் அறிவிப்புகளுமாகத் தொடர்ந்த ஆதித்தநல்லூர் தொல்லியல் தடத்தில், தமிழர் நாகரிகத்தைப் பறைசாற்றும் தமிழ்நாடு அரசின் பொருநை அரும்பொருளகத்தின் அறிவிப்பு தமிழ் மக்களிடையே புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட்டதும், ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப் பின்னர் தமிழரின் தொன்மை, தமிழர் வரலாறு குறித்தான ஆர்வம் பழந்தமிழர் வரலாற்றின் மீதான பார்வையை மக்களுக்கு அதிகப்படுத்தியது. சமூக ஊடகங்களின் தாக்கம் இளையோர்களிடையே தொல்லியல் ஆய்வுகள் குறித்தான ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சூழலில்தான் தமிழர் வரலாற்றை வெளிச்சமிடுகிறது விதி எண் 110இன் கீழ் வெளியிடப்பட்ட முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பு.

அரும்பொருளகம் அறிவிப்புகள்

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், பெரியார் ஈ.வெ.ராமசாமி – நாகம்மை கல்வி அறக்கட்டளை இணைந்து `தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் – ஆதித்தநல்லூர் சிறப்பும், எதிர்காலத் திட்டங்களும்’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தினார்கள். 2010ஆம் ஆண்டு ஜனவரி 22 முதல் 24 வரை பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பேசிய அன்றைய நிதியமைச்சர் பேரா.க.அன்பழகன், “கொற்கை, பூம்புகார், ஆதித்தநல்லூர் அகழாய்வுகள் தொடர வேண்டும், தமிழர் பெருமைகளை வெளிக்கொணர அருங்காட்சியகம் அமைத்திட தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். அதற்கான முயற்சிகளை முதல்வர் செயல்படுத்துவார்” என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2010 பிப்ரவரியில் ஆதித்தநல்லூர் தொல்லியல் ஆய்விடங்களை நேரில் ஆய்வு செய்தார். ஆதித்தநல்லூரில் எடுக்கப்பட்ட அரும்பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கு 134 ஏக்கர் பரப்பளவுள்ள அவ்விடத்தில் அரும்பொருளகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் அறிவிப்பு செய்தார். அடுத்த சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

2012ஆம் ஆண்டு ஜூன் 28 அன்று தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழாக் கொண்டாட்டங்கள் குறித்த செய்தியாளர் சந்திப்பில், ‘ஆதித்தநல்லூர் அரும்பொருளகம் அமைக்கப்படும்’ என்று மாவட்ட ஆட்சியராக இருந்த ஆஷிஷ்குமார் அறிவித்தார். அப்போது தொழிலாளர்நலத் துறை அமைச்சராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் உடனிருந்தார்.

இதற்கிடையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆதித்தநல்லூர் பகுதிகளைப் பார்வையிட்ட தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆதித்தநல்லூரில் உலகத் தரத்தில் அரும்பொருளகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை 2018 மார்ச் மாதம் வெளியிட்டார்.

பின்னர், 2020ஆம் ஆண்டு இந்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஆதித்தநல்லூரில் அரும்பொருளகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்திய அரசின் தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் மகேஷ்வரி, 2021 ஜூலையில் ஆதித்தநல்லூர், சிவகளை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்ட பின்பு, உலக நாகரிகத்தின் தொட்டிலான ஆதித்தநல்லூரில், ஐரோப்பா நாடுகளில் அமைந்திருப்பதுபோல காணொலி அரும்பொருளகம் அமைக்கப்படும் என்று விளக்கமளித்தார். அதாவது... `அகழாய்வு நடைபெற்ற இடங்களை கண்ணாடிகளின் வழியே மக்கள் பார்வையிடும் வகையிலான அமைப்பை உருவாக்கப் போகிறோம்’ என்றார்.

தமிழ்நாடு அரசின் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தற்போது 15 கோடி ரூபாய் செலவில் திருநெல்வேலி பகுதியில் பொருநை அரும்பொருளகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். ஆதித்தநல்லூர், கொற்கை, சிவகளை பகுதிகளில் கிடைத்த அரும்பொருட்களை சேகரித்து காட்சிப்படுத்தவும், பொதுமக்கள் பார்வையிடவும், மாணவர்கள் ஆய்வு செய்திடவும் பொருநை அரும்பொருளகம் துணையாக இருக்குமென்று முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

பல தடைகளைக் கடந்து வந்துள்ளது அரும்பொருளகம் அமைப்பதற்கான தமிழக அரசின் அறிவிப்பு. அறிவிக்கப்பட்ட திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை உடனே செய்து, ஆதித்தநல்லூர் பறம்பு பகுதியில் அரும்பொருளகத்தை அமைத்து, விரைவில் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற எதிர்பார்ப்பு தமிழ் ஆர்வலர்களிடையே அதிகரித்துள்ளது.

ஆதித்தநல்லூர் ஆய்வுகள்

அரும்பொருளகம் அமைக்கப்படவிருக்கும், ஆதித்தநல்லூர் தொல்லியல் ஆய்வுகளும், அதன் இருப்பிடத்தைப் போன்றே, கரடுமுரடாகக் கடந்து வந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 1850இல் பேராயர் ராபர்ட் கால்டுவெல் (Rev. Robert Caldwell) சில தொல்லியல் பொருட்களை சேகரித்து தனது நாட்டுக்குக் கொண்டு சென்றார்.

பொருநை ஆற்றின் வெள்ளப்பெருக்கு, திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே தொடர் வண்டிப் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக ஆதித்தநல்லூர் பகுதியிலும் புதைபொருட்கள் கிடைத்தன.

இதையறிந்து இந்தியா வந்த ஜெர்மனி ஆய்வாளர் டாக்டர் ஜாகர் (Dr. Friderich Jagor) 1876இல் ஆய்வு நடத்தினார். மூன்று முறை ஆசியப் பயணம் மேற்கொண்ட ஜாகர், ஆதித்தநல்லூர் உள்ளிட்ட இந்தியாவின் பல இடங்களில் 10,000 தொல்பொருட்களைச் சேகரித்துள்ளார். அவையனைத்தும் பெர்லின் இனவியல் அரும்பொருளகத்தின் தெற்காசியப் பிரிவில் 1963இல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியக் கலைகள் (Department of Indian art, south/southeast Asia at the Berlin Ethnological Museum) என்ற துறையின் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தின் அலெக்ஸாண்டர் ரே (Alexander Rea) 1899இல் ஆதித்தநல்லூர் வந்து, 1905 வரை ஐந்து கட்டங்களாக ஆய்வை நடத்தி முடித்தார். 114 ஏக்கர் நிலம் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. பாண்டிய மன்னர்களின் காலத்துக்கு முற்பட்ட நாகரிகம் ஆதித்தநல்லூர் என்று அலெக்ஸாண்டர் தனது ஆய்வில் கண்டறிந்தார். அவர் எழுதிய ‘வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய பழம்பொருட்களின் பட்டியல்’ நூல் ஆதித்தநல்லூர் நாகரிகத்தின் முதல் ஆவணம். ரே கண்டறிந்த 90 வகையான இரும்புப் பொருட்கள், 30 வகையான வெண்கலப் பொருட்கள், 110 வகை சுடுமண் பாண்டங்கள் சென்னை அரும்பொருளகத்திலும், பாளையங்கோட்டை அரும்பொருளகத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் ஆய்வாளர் லூயிஸ் லாபிக் (M.Louis Lapicque) 1903 - 1904இல் ஆய்வு நடத்தினார். மண்டை ஓடுகளை ஆய்வு செய்த லாபிக், ஆதித்தநல்லூரில் வாழ்ந்தது நெக்ராய்டு (Negroid race) எனும் முற்கால திராவிடர்கள் என்றார். அவர் எடுத்த தொல்பொருட்கள் பாரீஸ் அரும்பொருளகத்தில் (Museum national d’Histoire naturelle in Paris) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த மண்டை ஓட்டை ஆய்வு செய்த, டாக்டர் சி.மக்ளீன் (Dr. C.Maclean) அதே கருத்தை வழிமொழிந்தாலும், அதற்கும் முந்தைய இனமாகக்கூட இருக்கலாம் என்றார். சென்னை அரும்பொருளகத்தில் பணியாற்றிய தர்ஸ்டன் 1909இல் வெளியிட்ட ‘தென்னிந்திய சாதிகள் மற்றும் பழங்குடிகள்’ என்ற கட்டுரையில் ஆதித்தநல்லூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் தொடர்பு இருந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்து லண்டன் பல்கலை பேராசிரியர் ஜி.எலியட் சுமித் (Prof. Elliot Smith) ஆதித்தநல்லூரின் இரண்டு மண்டை ஓடுகளை ஆய்வு செய்து மனித இனத்தின் நகர்வு குறித்த குறிப்புகளை 1927இல் வெளியிட்டார். ஆஸ்திராலாய்டு, திராவிட அடையாளங்களோடு அந்த இரண்டு மண்டை ஓடும் இருந்ததாகச் சொல்கிறார். மேலும், இத்தாலி நாட்டில் கிடைத்த ஒரு பெண்ணின் மண்டை ஓடும், ஆதித்தநல்லூர் மண்டை ஓடும் ஒரே வகை என்றும் சுமித் தெரிவித்துள்ளார். எலியட் சுமித்தின் ஆய்வை டாக்டர் ஜான் பிட்டி தொடர்ந்தார். அதன் பிறகு எஸ்.ஜக்கர்மன் (Solly Zuckerman) ஆய்வை நிறைவு செய்தார். ஆதித்தநல்லூர் மண்டை ஓடுகள் என்ற தலைப்பில் அந்த ஆய்வை சென்னை அரும்பொருளகம் 1930இல் வெளியிட்டது.

சிந்துவெளியிலும், பலூசிஸ்தானிலும் கண்டறிந்த பொருட்கள், இந்தியாவின் தென்கோடி ஆதித்தநல்லூரில் இருந்து அறுந்து போகாத சங்கிலித்தொடர்போல, திராவிடப் பண்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று மொகஞ்சதோராவை ஆய்வு செய்த வங்கதேச ஆய்வாளர் ஆர்.டி.பானர்ஜி (R.D.Banerji) 1972 டிசம்பரில் மாடர்ன் ரிவியூ இதழில் எழுதியுள்ளார். தமிழர் நாகரிகம் வட இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் பரவியதாகத் தொல்பொருட்களை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

தமிழ்நாட்டிலும், சிந்துவெளியிலும் கிடைத்த பொருட்களை ஒப்பிட்டு ப்ரோட்டோ திராவிட நாகரிகம் (Proto – Dravidian) என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஆதித்தநல்லூர் எலும்புகளை 1963இல் ஆய்வுசெய்த இந்திய மானுடவியல் ஆய்வாளர்கள் பி.கே.குப்தா, பி.சட்டர்ஜி ஆகியோர் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களான வேதா பழங்குடிகளோடு தொடர்புடைய வேதிக் ஆஸ்ட்ராய்லுடுகள் என்றும், திராவிட இனத்தின் தாக்கம் உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது இறுதி முடிவாகத் தெரியவில்லை. பழங்கால மானுடவியல் கொள்கைகளை ஆதித்தநல்லூர் வெளிப்படுத்துகிறது என நியூயார்க் கார்னெல் பல்கலை பேராசிரியர் கென்னத் கென்னடி (Kenneth Kennedy) 1986இல் வெளியான தனது Hauntings at Adhichanallur: An anthropological ghost story கட்டுரையில் தெரிவிக்கிறார்.

இந்திய தொல்லியல் துறையின் சார்பாக, முனைவர் தியாக சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் 2004 பிப்ரவரி 4 முதல் ஜூலை 5 வரை முதற்கட்ட ஆய்வை நடத்தினர். தலையில் துளையிட்டு அல்லது கச்சிதமாக வெட்டப்பட்டு அறுவை சிகிச்சை நடத்தும் (Trepanation) தொழில்நுட்பத்தை ஆதித்தநல்லூரில் கண்டறிந்ததாக Indus to Tamaraparani என்ற கட்டுரையில் சத்தியமூர்த்தி தெரிவிக்கிறார். அந்த ஆய்வின் முடிவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். தொல்லியல் ஆய்வாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் 2004ஆம் ஆண்டின் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருந்தனர். 2020ஆம் ஆண்டில் சத்தமில்லாமல் அந்த அறிக்கையும் வெளியிடப்பட்டது.

தொல் தமிழர் நாகரிகம்

தமிழர்களை ஆங்கிலேயர் காலத்தில் திராவிடர் என்று குறிப்பிட்டதால், அதன்பின் வந்த ஆய்வாளர்களும் எழுத்தாளர்களும் திராவிடம் / திராவிட நாகரிகம் என்ற பதத்தையே பயன்படுத்தி வருகின்றனர். திராவிடர் என்பது குமரி முதல் வேங்கடம் வரை எல்லையாகக்கொண்ட தமிழ்நாட்டின் பூர்வகுடிகளான தமிழர்களையே குறிக்கிறது என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்.

இந்தியாவை விந்திய மலைத்தொடரும், தக்காண பீடபூமியும் நிலவியல் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கிறது. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே இருந்துள்ளது. அதனால், காடுகளையும், மலைகளையும் தாண்டி வட இந்தியர்களும், வட இந்தியாவுக்குள் கலந்த வெளிநாட்டவரும், தென்னிந்தியாவுக்குள் வர இயலவில்லை. ஆகவே கலாச்சாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கம் அனைத்திலும் தென்னிந்தியர்கள் தனித்துவத்துடன் விளங்குகிறார்கள். தென்னிந்தியாவின் மொழிகளும் பண்பாடும் சிதையாமல் வேர்ப்பிடிப்புடன் தொடர்கிறது. இந்திய மரபியல் அடிப்படையின் மையமாக வேற்றுமையில் ஒற்றுமையே இருந்துள்ளது என்று ஆய்வாளர் டோனி ஜோசப் தனது ‘Early Indian: The Story of Our Ancestors and Where We Came From’ புத்தகத்தில் எழுதியுள்ளார்.

கண்டறிதல், பொருள் விளக்கம், அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மட்டுமின்றி, மக்களின் பண்பாடு, பழக்கவழக்கம், தொழில், புழங்குபொருட்கள், உணவுமுறைகள், உடல் அமைப்பு, குடும்ப உறவுகள் உட்பட பல்வேறு காரணிகளையும் ஒப்பிட்டுத்தான் மானுடவியல் ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. ஆதித்தநல்லூரில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவு, கடல் வாணிகம், உலோகங்களை உருக்கும் தொழில்கள் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. மண்வெட்டி, கொழு வேளாண் கருவிகள் மட்டுமின்றி ஈட்டி, வாள் போன்ற போர்க்கருவிகளும் கிடைத்துள்ளன. மக்கள் உடல்வலிமையோடு வாழ்ந்துள்ளார்கள். வேட்டையாடும் பழக்கமும் இருந்துள்ளது. ஆதித்தநல்லூரிலும், கீழடியிலும் மான், காட்டுப்பன்றி, வெள்ளாடு போன்ற விலங்குகளை உணவுக்காகப் பயன்படுத்தினார்கள் என அறிவியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. குடியிருப்புக்கு தெற்கே இடுகாடு அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புதைக்கப்பட்ட தாழியில் நெல், தினை தானியங்களும், புதுத்துணியும் இருந்துள்ளன. தங்க நெற்றிப்பட்டங்கள் கிடைத்துள்ளன. இன்றும் ஆதித்தநல்லூர் சுற்றுவட்டாரக் கிராமங்களில் கொடை விழாக்களில் ஊர்ப்பெரியவர்களுக்குப் பட்டம் கட்டுவது, மண விழாக்களில் மணவாட்டிக்குப் பட்டம் கட்டுவது, இறந்தவர்களின் பேரப்பிள்ளைகளுக்குப் பட்டம் கட்டுவது எனும் நெற்றிப்பட்டம் கட்டும் பழக்கம் தொடர்கிறது. இதையெல்லாம் முன்வைக்கும் தமிழ் ஆய்வாளர்கள் பன்னாட்டு நாகரிகத்தின் முன்னோடி தமிழர் நாகரிகம்தான் என்று ஆதாரபூர்வமாகக் கூறுகிறார்கள். ஆவணங்களும் ஆதாரங்களும் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. பாதுகாத்து மேம்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பாக உயர்கிறது.

.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வெள்ளி 10 செப் 2021