ஃபோர்டு மூடல்: 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் நிலை?

politics

ஃபோர்டு ஆலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்

ஊழியர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மறைமலைநகரிலும், குஜராத்திலும் செயல்பட்டு வரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு கார் ஆலைகளை மூட முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்தது. ஃபோர்டு வெளியிட்ட அறிவிப்பில், “இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை ஃபோர்டு மாற்றியமைக்கிறது. அதன்படி சென்னை மறைமலை நகர், குஜராத் சனந்தில் உள்ள ஆலைகள் இனி கார் உற்பத்தி செய்யாது. 2021 நிதியாண்டு காலாண்டுடன் முடிவடையும் காலத்துடன் ஏற்றுமதிக்கான வாகன உற்பத்தியை சனந்த் ஆலை நிறுத்திக் கொள்ளும். சென்னையில் உள்ள இன்ஜின் தயாரிப்பு மற்றும் வாகனங்களை அஸெம்பிள் செய்யும் ஆலை 2022ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் பணியை நிறுத்திக் கொள்ளும்.

மேலும், இறக்குமதி மூலம் இந்தியாவில் விற்பனை செய்வதோடு இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ந்து டீலர்கள் சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

இதன்மூலம் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழக்க நேரிடும் என்றும் அவர்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஃபோர்டு ஆலைகளில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மூடப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆலைகள் மூடப்பட்டால் நேரடியாக 8,000 பணியாளர்களும், மறைமுகமாக 30 ஆயிரம் பணியாளர்களும் வேலையிழப்பார்கள். இது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமின்றி, தமிழகம், குஜராத் மாநிலங்கள் மற்றும் இந்தியப் பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய இழப்பாக அமையும்.

ஃபோர்டு நிறுவனத்தின் முடிவு பற்றி விவாதிப்பதோ, விமர்சிப்பதோ இந்தத் தருணத்தில் சரியானதாக இருக்காது.

ஆனால், இந்த முடிவால் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதும், அவர்களில் பெரும்பான்மையினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர் என்பதும் மறுக்க முடியாத உண்மை. அதனால், பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக இரு ஆலைகளையும் தொடர்ந்து இயக்குவதை உறுதி செய்வது உள்ளிட்ட அனைத்து சாத்தியக் கூறுகளையும் தமிழகம் – குஜராத் மாநில அரசுகளும், ஒன்றிய அரசும் ஆராய வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கெனவே நோக்கியா நிறுவனம் திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வந்த செல்பேசி உற்பத்தி ஆலை மூட முடிவெடுத்த போது, அம்முடிவை மாற்றுவதற்காக ஒன்றிய, மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், அந்த ஆலையில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடைசி வரை பணியிலிருந்த சுமார் 800 பேருக்கு மட்டும் தான் அதிகபட்சமாக ரூ.7.50 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

நோக்கியா ஆலை மூடப்பட்டதால் வேலை இழந்தவர்களுக்கு இன்று வரை சரியான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை அவர்களின் வாழ்வாதார இழப்பை எந்த வகையிலும் ஈடு செய்யவில்லை. அதே போன்ற நிலை ஃபோர்டு கார் ஆலைகளின் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது. அவ்வாறு ஏற்படாமல் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உண்டு.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், மகாராஷ்டிரா மாநிலம் தாலேகோன் நகரில் அமைத்துள்ள அதன் கார் ஆலையை மூடுவதற்கான முயற்சிகளை 2017 ஆம் ஆண்டிலிருந்தே தொடங்கியது. கடந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் அறிவித்தது. ஆனால், அதை ஏற்காத தொழிற்சங்கங்கள் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து, கார் ஆலையை மூடுவதற்கான அனுமதியை மகாராஷ்டிரா அரசு வழங்கவில்லை.

தொழிலாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்ட பிறகும் கூட ஆலையை மூட அனுமதிக்கப்படவில்லை. ஃபோர்டு பணியாளர்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசும் அத்தகைய நிலையை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் உள்ள ஃபோர்டு ஆலைகளைத் தொடர்ந்து இயக்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன. இந்திய கார் சந்தையில் ஃபோர்டு நிறுவனத்தின் பங்கு 2 விழுக்காட்டுக்கும் குறைவு என்பது உண்மை. இதற்கான காரணம். ஃபோர்டு கார்களின் விலை அதிகம் என்பது தான்.

அதே நேரத்தில், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்யும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதை விட, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஃபோர்டு நிறுவனம் அதன் வணிக உத்திகளில் சில மாற்றங்களைச் செய்யும் பட்சத்தில் ஆலையை லாபத்தில் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எனவே, சென்னை ஃபோர்டு ஆலையைத் தொடர்ந்து இயங்கச் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அந்த நிறுவனத்துடன் தமிழக தொழில்துறை அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும். ஒருவேளை அது சாத்தியமாகவில்லை என்றால், கார் ஆலை தொழிலாளர்களுக்கு, அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் தமிழக அரசு இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். ஃபோர்டு ஆலை வேறு ஏதேனும் கார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டால், புதிய நிர்வாகத்தில் இப்போதுள்ள பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *