மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 10 செப் 2021

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர்  ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றி வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நாகாலாந்து ஆளுநராக இருக்கும் ரவீந்திர நாராயண் ரவி புதிய தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் பன்வாரிலால் புரோகித்துக்கு பஞ்சாப் ஆளுநர் பொறுப்பு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன் பன்வாரிலால் டெல்லி சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்தார். இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 9) குடியரசுத் தலைவர் வெளியிட்ட உத்தரவில் இந்த ஆளுநர் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ரவீந்திர நாராயண் ரவி 1974இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பத்திரிகைத் துறையில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு 1976இல் ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்று இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக கேரளாவில் மாவட்ட எஸ்பி உட்பட பல்வேறு பதவிகளில் கேரளாவில் பணியாற்றினார், பின்னர் சிபிஐ-யில் பணியாற்றியபோது, ​​நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட பல்வேறு முறைகேடுகளைத் துப்பு துலக்கினார்.

நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பான இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத் துறை பணியகத்தில் (IB) இருந்தபோது, ​​அவர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்ட விவகாரங்களைக் கையாண்டார். மேலும் ரவி, தெற்காசியாவில் மனித குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார் மற்றும் எல்லை மக்களின் அரசியல் சமூகவியலில் விரிவாகப் பணியாற்றியுள்ளார்.

பல ஆயுதக் கிளர்ச்சி குழுக்களை அமைதி வழிக்குக் கொண்டு வந்தவர் ரவி. 2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் மோடி அரசில் அவர் பிரதம மந்திரி அலுவலகத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார், உளவுத் துறை ஏஜென்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டினார். 29 ஆகஸ்ட் 2014 அன்று நாகா சமாதான பேச்சுவார்த்தையில் அவர் முக்கியப் பங்காற்றினார். அக்டோபர் 2018இல் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்த பின்னணியில் 2019 ஆகஸ்டில் நாகாலாந்து மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ரவி, அங்கே இரு ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் தமிழ்நாடு ஆளுநராகத் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ்நாடு ஆளுநராக இருந்து தற்போது பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தனது ட்விட்டர் பதிவில் மு.க.ஸ்டாலின், "பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகக் காவல் துறை, உளவுத் துறையில் அதிக அனுபவம் பெற்ற ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கத்தில் பேசு பொருளாகியுள்ளது.

-வேந்தன்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

வெள்ளி 10 செப் 2021