திராவிடப் பெருங்கவி!

politics

ஸ்ரீராம் சர்மா

சுதந்திர இந்தியாவில் இதுகாறும் ஒன்றிய அரசுகளிடமிருந்து மற்ற மாநிலங்கள் பெற்றதைவிட – தமிழ்நாடு கறந்துகொண்ட லாபங்கள் மிக அதிகம் எனில், அதற்கு காரணம் திராவிட இயக்கங்களே!

திராவிட இயக்க செயற்பாட்டாளர்களின் புத்திக்கூர்மையையும், திட்டமிட்ட அசுர உழைப்பையும் டெல்லி நாடாளுமன்ற வளாகங்கள் வியந்து வியந்து பேசுவதை அருகிலிருந்து கேட்டு மலைத்துப் போயிருக்கிறேன்.

ஆனால், சொந்த நாட்டில் திராவிடம் என்றால் அது தேசியம் மறுக்கும்… நாத்திகம் பேசும் என சுருக்கிவைத்து சுண்டுகிறார்கள். சொல்லப்போனால் திராவிடம் என்னும் சொல்லை இந்த மண்ணில் பூச்சாண்டியாக்கி வைத்திருக்கிறார்கள்.

மேலதிகமாக இன்று திராவிட இயக்கங்களை வேரறுப்போம் என்கிறார்கள். மெரினாவில் புதைந்தவர்கள் என்ன கிழித்துவிட்டார்கள் என நன்றியுணர்ச்சி சிறிதும் இன்றி வரலாறு தெரியாத வாயாடிகள் கூலிக்குக் கொக்கரிக்கிறார்கள்.

“சீராட்டும் மாமன் சிங்கப்பூரில் வாய்த்தால், வாயாடும் மாப்பிள்ளைக்கு வகை தொகை தெரியாது” என்பார்கள். அப்படித்தான் சிலர் முட்டுச்சந்தில் அகப்பட்ட பட்டுக்குஞ்சலத்தோடு பரபரத்து அலைகிறார்கள்.

திராவிட சித்தாந்தம் என்பது தமிழுக்கு அப்பாற்பட்டது எனவும், அதற்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் சித்தப்பிரமை பிடித்த அந்தப் பத்து மாதக் குழந்தைகள் சத்தம் போட்டுக்கொண்டிருப்பதைக் கண்டு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை!

மனதுக்குள் புதுக்குழப்பம் எதுவொன்றெழுந்தாலும் முதலில் அறிவாசான் வள்ளுவனையும் அடுத்து, பாரதியையும் அணுகி நிற்பதே எனக்கு வழக்கம்.

இன்றைய கட்டுரைக்கு திராவிடப் பெருங்கவியாம் பாரதியாரை முன் வைக்கிறேன். அவரை தேசிய மகாகவி என்பதுதானே வழக்கம். திராவிடப் பெருங்கவி என்பது என்ன புதுப்பழக்கம் எனலாம்.

திராவிட எதிர்ப்பு என்னும் சித்தப்பிரமை பிடித்த சிலருக்கு சற்றாவது தெளிய வேண்டும் என்றால் பாரதியாரின் மறுமுகத்தைக் காட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

பாரதியார் பாடுகிறார்…

**மூன்று குலத் தமிழ் மன்னர் – என்னை **

**மூண்டநல்லன்போடு நித்தம் வளர்த்தார் **

**ஆன்ற மொழிகளினுள்ளே – உயர் **

**ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்! **

கவனியுங்கள்.

ஆரிய மொழி என்பது சமஸ்கிருதம்! சன்ஸ் + கிருத் எனில் வழிவழியாகப் புழங்கி சீராக செப்பம் செய்யப்பட்ட மொழி என்பதாகும். பதப்பட்ட மொழியை பேசுபவர்களே பண்டிதர்கள் என்பார்கள்.

அப்படியான சமஸ்கிருதத்துக்கு இணையானதொரு மொழியில் தான் வாழ்ந்தேன் என பாரதியார் பறைசாற்றுகிறார் எனில், தன் அன்னைத் தமிழும் சீருடன் செப்பனிடப்பட்டதொரு செழும் மொழியே எனத் துணிபுடன் நிறுவுகிறார் என்பதே பொருள்!

சரி, பாரதியார் திராவிடம் பேசியது எங்கே என்பவர்களுக்கு மேலும் விரித்துச் சொல்வேன்…

‘தக்கணம்’ என்பது பாரதியார் வாழ்ந்த பரந்துபட்ட பிரதேசம். அதை முன்வைக்காமல், ‘ஆன்ற மொழிகளினுள்ளே’ எனத் தன் மொழியினை முன்வைத்தே பெருமை பேசுகிறார் பாரதியார்!

ஆரியமும் திராவிடமும் ஒன்றாகப் புழங்கியவைதாம் என்றாலும் இருவேறு கூறுகள் என்கின்றன வரலாற்று ஆய்வுகள்.

சமஸ்கிருதமும் தமிழும் எதிர்கூறு கொண்டது எனில், திராவிடம் என்பது தமிழின் மாட்டே!

“ஆரியம் கண்டாய்; தமிழன் கண்டாய்” என அப்பர் பெருமான் பாடியதில் திராவிடம் என்னும் உட்கருத்து இலங்குவதை உணர்ந்து கொள்ளலாம்.

**சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு **

**சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம் **

என்னும் பாரதியாரின் கூற்று திராவிடம் அல்லாமல் வேறென்ன?

சேர நாடு என்பது கேரளம் அல்லவா? அதன் பொருளை மராட்டியருக்குப் பரிசாக அளிப்போம் என எந்த உரிமையில் பேசியிருப்பார்?

கேரளத் தந்தங்கள் எமது திராவிடச் சொத்தாகும். அதை, வடநாட்டுக் கவிதைக்குப் பரிசாக அளித்து மகிழ்வோம் என்றார்.

**காசி நகர்ப்புலவர் பேசும் உரைதான் **

**காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் **

என்பவரை எப்படிக்கொள்வது?

காசிக்கும் காஞ்சிக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம். அது வடபுலம். இது தென்புலம். எமக்கு எல்லாமே சாத்தியம் என்றார். தீர்க்கதரிசியான அவர் திராவிடச் செருக்கின்றி அப்படிப் பாடியிருக்க மாட்டார்.

இன்று, காசியில் பேசப்படுவதை காஞ்சியில் கேட்க முடிகிறது. போலவே, காஞ்சி நகரில் எழுந்த திராவிடக் கூக்குரலை காசி தொகுதியைக் கொண்ட போற்றுதலுக்குரிய பெருந்தகையாளர் மோடியும் கேட்பார் என நம்புவோம்.

ஆம், தமிழில் இருந்து கிளைத்தெழுந்ததே மற்ற மற்ற தென்னிந்திய மொழிகள். அவை அனைத்தும் தமிழின் உறவுடை மொழிகளாம் என்பதை அறிவுலகம் ஏற்றுக்கொண்டாகிவிட்டது.

ஆக, தமிழ் என்றால், திராவிடம் அதன் உட்பொருளாகி விடுகிறது. திராவிடம் என்றால், தமிழ் அதன் உணர்வுடைக் கூறாகி விடுகிறது.

**சிந்து நதியின் மிசை நிலவினிலே; **

**சேர நன்னாட்டிளம் பெண்களுடனே;**

**சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து,**

**தோணிகளோட்டி விளையாடி வருவோம்!**

திரைப்படத்திலும் பெரும்புகழ் பெற்றுவிட்ட இந்தப் பாட்டில், தன் உதரத்தே உதித்த சகோதர மொழிகளை அரவணைத்துக் கொண்டாடும் பாரதியார் திராவிடப் பெருங்கவியாகவே மிளிர்கிறார்!

“தமிழெங்கள் உயிருக்கு நேர்…” என்ற பாவேந்தர் கனகசுப்புரத்தினத்தார் பாரதியைக் கண்டபின் “அடியேன், பாரதிக்கு தாசன். இனியென்றும் பாரதிதாசன்’’ என இளகி நின்றார் என்றால்… அவரை ஆட்கொண்ட அந்த பாரதியார் யார்?

சரி, பாரதியார் திராவிடத்தைக் கொண்டாடியதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், மற்ற மற்ற மாநிலங்கள் வழிமொழியாதபோது நீங்கள் மட்டும் ஏன் திராவிடத்தை ஏற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனப் புளித்த வாய்கொண்ட சிலர் இளித்து விமர்சிக்கலாம்.

அந்தப் பேதைகளைக் கண்டு பரிதாபம்தான் கொள்ள முடியும். தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்பதை உணராதவர்கள் அவர்கள்.

ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என்பது மொழிவாரியாகப் பிரிந்ததுதானே? அந்த மொழிகள் அனைத்துக்கும், தாய்மொழி தமிழ்தானே!

பிள்ளைகள் சூறையாடப்பட்டுவிடக் கூடாதே எனத் தாயாகப்பட்டவள் வீட்டுப் பெருமையை இழுத்துப் பிடித்துக்கொள்ள மாட்டாளா!? பெற்றவளின் வயிறு கலங்காதா? கதறதா?

அங்கலாய்க்கும் திராவிடக் கூக்குரலை – அதன் அறிவார்ந்த ஆதங்கத்தை – நெகிழ்ந்த உணர்வைக் கொண்டு கூட்டிச் சொல்லப் போனால் பெற்ற தாயின் உணர்வுப் போராட்டம் அது! வேடிக்கை மனிதர்களுக்குப் புரியாது!

இந்திய தேசிய கீதத்தைக் கேளுங்கள்…

ஒட்டுமொத்த தென்னாட்டையும் ‘திராவிட…’ என்னும் ஒற்றைச் சொல்லில் கடந்து போகிறார் இரவீந்திரநாத் தாகூர்.

தாகூரின் அந்தக் கூற்றை அப்படியே வழி மொழிந்து நிற்பதுதான் திராவிட சித்தாந்தம்!

வடநாட்டில் சில காலம் வாழ்ந்து பார்த்தவன் என்பதால் சொல்கிறேன். வடநாட்டுக்கு உரித்த சில நற்குணங்களை மதிப்பவன்தான் சொல்கிறேன்!

திராவிடம் என்பது தனித்துவமானது. உணவு, உடை, இறைவழிபாடு, தன்னுணர்வு என அதற்கென தனி நாகரிகம் உண்டு. தென்னாட்டுக்கே உண்டான உயர்ந்த கலாச்சாரத்தை மென்மேலும் செழிப்பூட்டிப் பார்ப்பதுதான் அழகு.

இன்றிங்கே, திராவிடத்தை மறுத்து இனவாதம் பேசும் சிற்றறிவாளர்கள் சுற்றி வருகிறார்கள். அப்பாவி சிறுவர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு கண்கட்டு வித்தை காட்டுகிறார்கள்.

“தெலுங்கரை ஒதுக்கு, மலையாளியை ஒதுக்கு, கன்னடரை ஒதுக்கு” என அவசரச் சாப்பாட்டுக்கு அள்ளிச் செருகுகிறார்கள் கலகக்காரர்கள்.

அப்படிப்பட்ட அரசியல் வியாபாரிகளை, சமூகத்தை பாழாக்கத் துடிக்கும் கெடுமதியாளர்களை பாரதியாரின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது.

முந்தைய அரசாங்கம் போல் இல்லாமல் இந்த அரசாங்கம் அந்த இனவாதக் கலகக்காரர்களை முற்றாக நசுக்கிப்போடும் என நம்புவோம்!

**தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை, **

**கண்ணீரால் காத்தோம்! கருகத் திருவுளமோ? **

மனம் கசிந்து கேட்டவரல்லவா திராவிடப் பெருங்கவி பாரதி!

கட்டுரையின் நிறைவாக தமிழக முதலமைச்சருக்கு, ஒரு வேண்டுகோள்!

**தனியோரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த**

**ஜகத்தினை அழித்திடுவோம் **

எனப் பசிக் கொடுமையின் உச்சத்தைப் பாடிய பாரதியார் யானையால் மிதிக்கப்பட்டு மோன இருளில் மூழ்கிப்போன அந்த திருவல்லிக்கேணி வீடு இன்று அரசுடைமையாகிவிட்டது.

அந்த வீட்டு வாசலில்… பசித்து வரும் ஏழைகளுக்கு எந்த நேரமும் உணவு அளிக்க அரசாங்கம் ஆவன செய்து வைக்குமானால் அது, திராவிடப் பெருங்கவியாம் பாரதியாருக்கு இந்த நல்லரசாங்கம் காட்டிய பெரும் மரியாதையாகக் காலமெல்லாம் கொள்ளப்படும்!

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *