மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

பையனூர் பங்களா முடக்கம்: சசிகலா மௌன பின்னணி!

பையனூர் பங்களா முடக்கம்: சசிகலா மௌன பின்னணி!

சசிகலாவுக்கு தொடர்புடைய ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா மற்றும் நிலத்தையும் நேற்று (செப்டம்பர் 8) முடக்கம் செய்து அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியது வருமானவரித் துறை. ஆனால் இதுபற்றி எதுவும் பேசாமல் மௌனமாக இருந்து வருகிறார் சசிகலா.

சென்னையிலிருந்து 55 கிலோ மீட்டர் தூரத்திலும் கிழக்கு கடற்கரையிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது சசிகலாவுக்குச் சொந்தமான பையனூர் பங்களாவும், 49 ஏக்கர் நிலமும்.

முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவும் சசிகலாவும் விரும்பி இந்த இடத்தை தேர்வு செய்து நிலம் வாங்கி பன்னை வீடு கட்டினர். அப்போதே, ‘கங்கை அமரனுக்குச் சொந்தமான இடத்தை மிரட்டி வாங்கினார்கள்’ என்றும் ‘தலித்களுக்குச் சொந்தமான பஞ்சமி நிலம்’ என்றும் பல பிரச்சனைகள் எழுந்தன.

அந்த 49 ஏக்கர் நிலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா இருவர் பெயரிலும் குறிப்பிட்ட ஏக்கர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை வருமான வரித்துறையினர் முடக்கம் செய்வதாக நோட்டீஸ் ஒட்டியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சசிகலாவுக்கும் வருமான வரித்துறையினருக்கும் இடையே என்னதான் நடக்கிறது என்று விசாரித்தோம்...

“2017இல், சசிகலாவைக் குறிவைத்து சுமார் 187 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போதே, ரெய்டு சம்பந்தமாகப் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையிலிருந்த சசிகலாவிடம், அவருக்குத் தொடர்புடைய ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துக்களைப் பற்றி கேள்விகளை முன்வைத்தது வருமான வரித்துறை. சசிகலாவும் நிதானமாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தார்” என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள்.

மேலும், “தற்போது, வருமான வரித்துறையினர் ரெய்டு செய்த 2 ஆயிரம் கோடி மதிப்பாலான சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரித்து வருகின்றனர். அதில் முதல் கட்டமாக, கிண்டியில் உள்ள சொத்து, செயிண்ட்மேரிஸ் சாலையில் அமைந்துள்ள இடம், போயஸ் கார்டனில் பத்து கிராவுண்ட் இடத்தில் அமைந்துள்ள புதிய பங்களா ஆகியவற்றுக்கு நோட்டீஸ் ஒட்டினர். இதையடுத்து, நேற்று பையனூர் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டினர். அவ்வளவுதான், மற்றபடி எதையும் கையகப்படுத்தவில்லை, ஏலமும் விடவில்லை, எல்லாம் வெறும் போகஸ்தான்.

வருமானவரித் துறையினர் கைப்பற்றியுள்ள ஆவணங்களில், சொத்து கொடுத்தவர்களின் கையொப்பம் உள்ளது. ஆனால் வாங்கியவர் கையெழுத்துப் போடும் இடம் பிளாங்காக உள்ளது. சொத்து விற்பனை செய்தவர்களுக்கு பணம் பரிமாற்றம் செய்யப்படவில்லை. அதாவது சொத்துகள், நிலத்துக்கு உரிமையாளர்கள் பெயரில்தான் உள்ளது. எந்த சொத்தும் சசிகலா பெயரில் இல்லை.

பையனூர் பங்களாவும் 49 ஏக்கர் நிலமும் இன்று நேற்று வாங்கியது இல்லை. 27 வருடங்களுக்கு முன்பு வாங்கியது, அதுவும் ஒருவர் பெயரில் இல்லை, பலரது பெயரில் உள்ளது. அதற்கான ஆவணங்களும் உள்ளது. 27 வருடங்களுக்கு முன்பு விளை நிலங்களாக இருந்ததைக் குறைவான விலைக்குத்தான் வாங்கினர். எனவே அதனை இன்றைய அளவில், மதிப்பு போடுவது மக்களைக் குழப்பும் விஷயம்” என்கிறார்கள்.

தொடர்ந்து, வருமான வரித்துறையினர் ஒவ்வொரு சொத்துகளாக முடக்கம் செய்துவரும் நிலையில், சசிகலாவின் மனநிலை எப்படியிருக்கிறது என்று விசாரித்தோம்...

“பையனூர் பங்களாவைப் பற்றி சசிகலா சிறிது அளவும் கவலைப்படவில்லை, அந்த இடத்தை ரசிக்கவும் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது கூட அந்த பங்களா மீது இருவரும் ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் அதையும் விடமாட்டார், மற்ற சொத்துகளையும் சட்ட ரீதியாக மீட்டெடுப்பார். ஏற்கனவே, சொத்துக்கு உரிமையாளர்கள் என உரிமை கேட்டு நீதிமன்றத்தில் பலர் வழக்குத் தொடுத்துள்ளார்கள். சசிகலா தரப்பில் நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் வாதாடவும் தயாராகி வருகிறார்கள். வருமான வரித்துறையினரும் இதுவரையில் சசிகலாவிடம் ரிட்டன் ஸ்டேட்மெண்ட் எதுவும் கேட்கவில்லை.

இன்னும் சில சொத்துக்களை முடக்கம் செய்வதாக அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டுவார்கள். அது எதிர்பார்க்கக் கூடியதுதான். அனைத்தையும் சட்ட ரீதியாகப் போராடி மீட்பார் சசிகலா. அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், சட்டம் படித்துவிட்டு வருமான வரித்துறையில் பணிசெய்து ஓய்வு பெற்றவர்கள் என ஒரு பெரிய டீம்வுடன் அவ்வப்போது ஆலோசனை நடந்து வருகிறது. சசிகலா தைரியமாகத்தான் இருக்கிறார். அனைத்தையும் எதிர்கொள்வார்” என்கிறார்கள் அவரை சமீபத்தில் சந்தித்த அவரது ஆதரவாளர்கள்.

-வணங்காமுடி

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

வியாழன் 9 செப் 2021