மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 9 செப் 2021

கொடநாடு வழக்கு: முதல்வரின் கேள்விகளும், ஈபிஎஸ் பதிலும்!

கொடநாடு வழக்கு: முதல்வரின் கேள்விகளும், ஈபிஎஸ் பதிலும்!

கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.

அப்போது பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், காவல்துறை மீது கரும்புள்ளி ஏற்படும் வகையில் ஸ்டெர்லைட் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சாத்தான்குளம் சம்பவம் போன்றவை நடைபெற்றதாக குறிப்பிட்டுப் பேசினார். அதேபோல் கடந்த காலங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களும் அதிகளவு நடந்ததாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து கொடநாடு வழக்கு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்துப் பேசிய அவர், “ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையம் இன்னும் முடிவு பெறவில்லை.

வாக்கு சேகரிக்கச் சென்ற போது இது குறித்துக் குறிப்பாகப் பெண்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். எனவே உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவாக நடத்தி உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

திமுக உறுப்பினர் பேச்சுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துப் பேசுகையில், “ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நீதிமன்றத்தில் உள்ள ஒரு விவகாரத்தைப் பற்றிப் பேசுவது அவையின் மரபல்ல. அதனை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வழக்கை விரைந்து முடிக்கத் தான் உறுப்பினர் பேசினார். இந்த வழக்கைப் பற்றிப் பேசவில்லை. எனவே அதனை அவை குறிப்பிலிருந்து நீக்கத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.

மேலும், ”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டிலிருந்தவாறு அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். கொடநாடு பங்களாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் கழற்றப்பட்டது எப்படி?” என்று கேள்வி எழுப்பினார்.

“கொடநாடு பங்களா என்பது சாதாரண இடம் கிடையாது. முதல்வர் வாழ்ந்த அந்த இடத்தில் உங்களின் ஆட்சியின் போது தான் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. அந்த சமயத்தில்தான் நீங்கள் முதல்வராக இருந்தீர்கள். கொடநாடு வழக்கை விசாரிக்கக் கூடாது என ஏன் நீதிமன்றத்திற்குச் சென்றீர்கள்?” என்று பேரவையில் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து அடுத்தடுத்த கேள்விகளை முதல்வர் எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கொடநாடு சொத்து தனியாருக்குச் சென்றுவிட்டது. தனியார் வசம் சென்ற சொத்துக்கு எப்படிப் பாதுகாப்பு வழங்குவது. நாங்கள் புலன் விசாரணை வேண்டாம் என்று கூறவில்லை” என பதிலளித்தார்.

-பிரியா

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வியாழன் 9 செப் 2021